- அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில், இந்திய அரசு அதிகாரி ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
- போதைப் பொருள், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுவந்த நிகில் குப்தாவுக்கும் இந்திய உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைத்தொடர்பு உரையாடல்களின் அடிப்படையில், அமெரிக்க நீதித் துறை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி, நிகில் குப்தாவிடம் பன்னுனைக் கொல்வதற்கு ஆளை நியமிக்கக் கேட்டுக்கொண்டதாகவும் இது தொடர்பாக இரண்டு அமெரிக்கர்களுடன் அவர் பேசியிருப்பதாகவும் அமெரிக்க நீதித் துறையின் அறிக்கை கூறுகிறது.
- அதேவேளையில், ஜூன் 20 முதல் 24 வரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதால் பன்னுனைக் கொல்வதற்கான திட்டம் நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செக் குடியரசு நாட்டில் இருந்த நிகில் குப்தாவை ஜூன் 30 அன்று அமெரிக்கா கைது செய்துள்ளது.
- பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலும் செப்டம்பரில் இந்தியாவிலும் சந்தித்து உரையாடியபோதும் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளின் சந்திப்புகளின்போதும் பன்னுனைக் கொல்வதற்கான சதி குறித்து விவாதிக்கப்பட்டதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் குறிப்பிட்டிருக்கிறது. இருநாட்டு அரசுகளும் இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
- முன்னதாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய அரசு இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூன் மாதம் குற்றம்சாட்டியிருந்தார். அதை உறுதியாக மறுத்த இந்திய அரசு, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்குக் கனடா இடம்கொடுத்துவருவதாக விமர்சித்தது. இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. நிஜ்ஜார் கொலைக்கும் பன்னுன் கொலைமுயற்சிக்கும் தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித் துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிஜ்ஜார், பன்னுன் இருவருமே இந்திய அரசால் தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
- வெளிநாட்டில் இருக்கும் எதிரிகளை ஆள்வைத்துக் கொல்வது இந்திய அரசின் கொள்கைக்கு எதிரானது என்று இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தால் இந்திய-அமெரிக்க உறவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
- அதே நேரம், கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் இந்திய அதிகாரிகள் மீது கொலைச் சதிக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது சர்வதேச அளவில் இந்தியாவுக்குக் களங்கம் விளைவிக்கக்கூடும். அமெரிக்க நீதித் துறை முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றால், இந்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை உலகுக்கு ஆணித்தரமாக உணர்த்துவது இந்தியாவின் கடமை. மேலும், இந்திய அரசு அதிகாரிகள் தனிப்பட்டரீதியில், அரசின் கொள்கைக்கு மாறாகச் செயல்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், அத்தகைய அதிகாரிகளுக்குக் கடிவாளம் போட வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது.
நன்றி: தி இந்து (04 – 12 – 2023)