- ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அப்துல் கலாமின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் முழக்கம், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம். நம்மை அடிமைகள் ஆக்கி அரசாண்ட வெள்ளையர்களை எழுந்து நின்று கைதட்டிப் பாராட்ட வைத்த பெருமை டாக்டர் கலாமுக்கு உண்டு.
- வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாடுகளில் குடியரசுத் தலைவராகப் படவுரை நிகழ்த்தும்போது, அத்தனை அயல்நாட்டு விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப அறிஞர்களும் மூக்கில் விரல் வைத்து உச்சரித்த ஒரே வாக்கியம் இதுதான். எத்துணை அற்புதமான அறிவியல் மேதையை இந்தியா முதல் குடிமகனாகப் பெற்றிருக்கிறது.
அதிபர்
- நாட்டின் அதிபர் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு மற்ற நாட்டு அதிபர்களுடன் கருத்துரையாடி வருவார். அவற்றையே நாட்டில் பிரதமர் நடைமுறைப்படுத்துவார். சந்திரயான், மங்கள்யான் என்று அனைத்து நாடுகளும் இந்திய விண்வெளியை அண்ணாந்து நோக்கி ஆச்சரியப்படுகின்றன.
- சந்திரயான்-1 பயணத்தின்போது, 2008 நவம்பர் 14 அன்று நிலவில் இந்திய மூவர்ணக் கொடி பொறித்த நிலா மோதுகலனை விழச் செய்த பெருமைக்குரியவர். நம் தேசியக் கொடியினை முதலில் நிலவில் ஏற்றிய முதல் குடிமகனார் அவர்தாம்.
பொதுவாக, ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டுக்கு அரசுப் பயணம் மேற்கொள்ளும் தருணங்களில் அந்த நாட்டின் கௌரவிப்பாக அன்பளிப்புகள் வழங்கப்படுவது உண்டு.
- இன்றைக்கு அதை வாங்கித் தங்கள் ரகசிய வங்கிக் கணக்குகளிலோ, கட்சிக்கான அயல் நாட்டு நிறுவனங்களிலோ இட்டுப் பெருக்கிப் பத்திரப்படுத்தும் அதி திறமைசாலிகள் உள்ளனர். ஆனால், தமக்கு வரும் விலை உயர்ந்த நினைவுப் பரிசுகளை எல்லாம் ஏதேனும் ஆதரவு அற்றோர் இல்லங்களுக்கோ, அருங்காட்சியகத்துக்கோ அனுப்புமாறு டாக்டர் அப்துல் கலாம் உத்தரவிடுவாராம்.
உள்கட்டமைப்பு
- அண்மையில் தென்காசி அருகே ஆய்க்குடி அமர்சேவா சங்கத்துக்கு, அதன் ஆயுள் புரவலர் என்ற வகையில் சென்றிருந்த, அந்தத் தருணத்தில் அங்கு ஒரு தனிக் கட்டடத்தில் கைவினைப்பொருள் தயாரிக்கும் பணியில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட்டிருந்தனர். அதன் உள்கட்டமைப்புக்கு, தமக்கு வந்த அயல் நாட்டு சன்மானத் தொகையிலிருந்து ரூ.1 கோடியை நன்கொடையாக டாக்டர் கலாம் வழங்கினார் என்று அறிந்து நெகிழ்ந்தேன்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரம்ஜான் மாதத்தில் இஃப்தார் விருந்து பரிமாறப்படும்.
- அதற்கு சராசரி ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் செலவாகும். இதனை அறிந்த டாக்டர் கலாம், ஏற்கெனவே உண்டு களித்த பெரு மக்களுக்கு மீண்டும் ஊட்டுவதைக் காட்டிலும், உணவு இன்றி நலியும் அநாதை இல்லங்களுக்கு உணவு, உடைகள், கம்பளிப் போர்வைகள் போன்ற உதவிப் பொருள்கள் வழங்க முடிவு செய்து அதை நடைமுறைப்படுத்தினார்.
- தாம் குடியரசுத் தலைவராக செலவு செய்ய வேண்டிய தொகையுடன், தன் பங்கிற்குச் சொந்தப் பணத்திலும் ரூ.1 லட்சம் வழங்கினார் என்றால் அத்தகைய இந்தியரை ஒவ்வொரு கணமும் நினைத்துப் போற்றுவது மட்டுமல்ல, பின்பற்றவும் வேண்டும் அல்லவா?
நெஞ்சில் நேர்மை, சொல்லில் தூய்மை, செயலில் செம்மை என திரிகரண சுத்தியுடன் வாழ்ந்த மகான் டாக்டர் அப்துல் கலாம். 1998 நவம்பர் 19-ஆம் தேதியன்று புது தில்லியில் தேசிய புத்தகக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், கலாம் ஆற்றிய உரை ஒவ்வொருவர் அடிமனதையும் தொடும்.
கல்வி
- நம்முடைய கல்வி இளைஞர்களுக்கு அறிவைத் தருவதாக இருக்க வேண்டும். கல்வியறிவின் உதவியால் நாம் 21-ஆம் நூற்றாண்டில் கால் எடுத்து வைக்க முடியும். உலகின் வளர்ந்த நாடுகளின் அறிவுக்குச் சற்றும் சளைத்ததல்ல இந்தியர்களின் அறிவு என்று சர் சி.வி. ராமன் பற்றிய நூலில் எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய இளைஞர்களுக்கு துணிச்சலும், சாதிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினார் கலாம்.
- கல்வியினால் அல்லது கற்ற தொழிலால் மட்டுமே பொருளாதாரம் உயரும். பொருளாதாரத்தினால் வாழ்க்கைத் தரமும், சமூக அந்தஸ்தும் உயரும். அதனால் அனைவரும் வாய்த்த பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டும். இன்றைக்கோ பள்ளிகளிலும் ஏற்றத் தாழ்வுகள் பார்க்கிறோம்.
- அரசுப் பள்ளிகள் பிற்படுத்தப்பட்டவை என்றும், தனியார் பள்ளிகள் முற்படுத்தப்பட்டவை என்றும் வரிந்து கட்டிக்கொண்டு சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளை தீண்டத்தகாதனவாக எண்ணிக் கொள்வானேன்? அடிப்படை அறிவின் முன் அனைவரும் சமம். கல்வியால், பொருளால் உயர்ந்தவர்களே மேட்டுக் குடிகள்.
- அவர்கள் தீண்டத்தகாதவர்களும் அல்லர்.
ஆமாம் சாமி பேர்வழிளைக் கலாமுக்கு அறவே பிடிக்காது. விண்வெளித் துறை அனுபவத்தில் எதிர்க் கருத்துகளைக் கூறி விவாதிக்கும் அறிவியல் பண்பு சிறப்பாக உள்ளது. அதனால்தானே நிறுத்திவைக்கப்பட்ட சந்திரயான்-2 ஒரே வாரத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதியன்று மீண்டும் வெற்றிப் பாதையில் புறப்பட்டது. இன்றைக்கும் 240 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்கள் செலுத்திய வகையில் இந்திய விண்வெளித் துறைக்கு ஏறத்தாழ ரூ.7,000 கோடி வருவாய் வருகிறது.
மன்னர்
- வெளி உலகின் உண்மை நிலவரத்தை மன்னரிடம் எடுத்துக் கூறாமல் மறைத்து, எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்று ஊதுகிற அடியாட்கள் மன்னரையே சூழ்நிலை அடிமைகளாக்கி விடுவர். இடித்துரைப்பவர் இல்லாத காரணத்தால் - அரசியல் அல்லது அறிவியல் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்கள், தங்களைச் சூழ்ந்துவரும் ஆமாம் சார் ஆபத்துகளை உணராமல் கெட்டுப் போவார்கள் என்பது வள்ளுவ வேதம்.
- குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கள் குடும்பம் முழுவதையும் குடி வைக்கும் தலைவர்கள் காலம் இது. ஆனால், தமது மூத்த சகோதரர் உள்பட ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்டோர் ஒரு வார காலம் வந்து தங்கிச் சென்ற பின்னர், அவர்தம் உணவு, தங்கல் மற்றும் போக்குவரத்துக்கான கட்டணத் தொகையாக ரூ.2 லட்சத்தை அரசுக்கு திருப்பிச் செலுத்திய மாமனிதர் கலாம். அ
- த்துடன் விட்டாலும் பரவாயில்லை, தம்மை விட பதினைந்து வயது மூத்த சகோதரரையும் தமது அறையில் தங்க வைத்த கலாம், அவருக்கான அறை வாடகையாகவும் காசோலை எழுதித் தந்தார் என்றால், அந்தக் கண்ணியம் வேறு எவருக்கு வரும்? அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், திருப்பி அளிக்க மனம் வந்ததே மகாத்மாவின் உன்னதம் அல்லவா?
- இன்றைக்கு மக்களால் மக்களுக்காகத் தேர்ந்து எடுக்கப்பட்ட மேல்தாவிகள் கோடிகளுக்காகக் குட்டிக்கரணம் போடுவதைப் பார்த்தால் உலகத்தார் எள்ளி நகையாட மாட்டார்களா?
வரிப் பணம்
- மக்கள் பணத்தில் கட்டி எழுப்பிய கட்சி மாளிகைகளைத் தம் பெண்டு, தம் பிள்ளை, தமது என்று கொண்டாடுபவர்கள் மத்தியில், தமது சம்பளத்தில் இருந்து நட்பு மடல்களுக்கு அஞ்சல் தலை ஒட்டி அனுப்பும் அபாரப் பண்பு உள்ளம் கலாமுக்கு இருந்தது.
குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்து மாளிகை விட்டு தமக்கே உரிய எளிய பெட்டிகளும் புத்தகங்களுமாக அங்கிருந்து வெளியேறிய புனிதர் டாக்டர் கலாம். நம் தலைவர்களுக்கோ புத்தகங்கள் படிக்கவே நேரம் இருக்காது.
- வெள்ளையர்களை விரட்டினோம். ஆனால், அவர்களின் மட்டை விளையாட்டைக் கண்டுகளிக்கிறோம். பந்தயம் என்றால் முந்தி வந்தவர்களை வரிசைப்படுத்தி வரவேற்கிறோம். போட்டி என்றால் வெற்றி பெற்ற ஒருவரைப் பாராட்டுகிறோம்.
- ஆனால், இந்த மட்டை விளையாட்டில் மட்டும் உலகப் போரில் ஜெயித்தவர் மாதிரி எக்காளமிடுகிறோம். அவர்களுக்கு என்ன, ஆடுகளத்தில் 2 பேரும், பால்கனியில் குளிர்பானங்களுடன் மீதம் ஒன்பது பேரும் அமர்ந்து ரசித்தாலே, சொகுசு காரும், உல்லாச பங்களாக்களும் அன்பளிப்புகளாகப் பெறும் அதிர்ஷ்டசாலிகள்.
- ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானத்தில் இந்தியாவின் முதல் குடிமகனால் 5 ஆண்டுப் பதவிக் காலத்தில் செலவு ஏதும் இல்லாமல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பாதிக்க முடியும். ஆனால், இன்றைய சாதாரண உள்ளூர் ஆட்சித் தொண்டர்களின் வாரிசுகள் ஒன்றிரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கில் அந்நிய முதலீடுகள் செய்வதை அறிந்தால், நேரடித் தண்டனையே வழங்கலாமே. ஆயுள் காலம் முழுவதும் நடக்கும் நீதிமன்ற வழக்குச் செலவுகளும் மிச்சம் ஆகும்.
திட்டங்கள்
- திட்டங்கள் தீட்டியதும் உரிய சதவீதத்தை முன்பணமாகக் கட்சியோ சுற்றமோ பெற்றுக் கொள்ளும் நல்லுளங்கள் என்றைக்குத் திருந்துமோ?
ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டும் என்றால் மூன்று பேர் முக்கியம். அம்மா, அப்பா, ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். நல்ல குணமான வாழ்வு வேண்டுமென்றால் இவர்களால்தான் ஊட்ட முடியும். மூவரும் சேர்ந்து 15 வயதுக்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால் பிறகு கடவுளோ, பிசாசோ எந்த அரசுச் சட்டமோ அவர்களை மாற்ற முடியாது. என்னுடைய அனுபவத்தில் இதை உணர்ந்திருக்கிறேன் என்கிறார் கலாம்.
- அவர் தமது தந்தையிடம் கற்றுக் கொண்டது நேர்மை. தாயாரிடம் கற்றுக் கொண்டது கருணை. ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டது உழைப்பின் மேன்மை.
காகிதம் எடுக்க வேண்டிய கையில் மாணவர் சிலர் ஆயுதம் எடுக்கின்றனர். புத்தியைத் தீட்டவேண்டிய பருவத்தில் கத்தியைத் தீட்டுவது நாட்டிற்கு ஓர் அபாய எச்சரிக்கை அல்லவா?
- 2001 ஆகஸ்ட் 13-ஆம் தேதியன்று திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி பவள விழாவில் கலாம் உரையாற்றினார். மாணவர்கள் உண்மையாக உழைக்க வேண்டும். தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மூலம் பரவிவரும் அந்நியக் கலாசார ஆக்கிரமிப்புகளில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது. மாணவர்கள்தான் வலிமையான சக்தி. மாணவர்கள் அனைவரும் நான் உழைத்தால் இறைவன் அருள்வான் என்ற ஒரு சிறந்த கவிஞனின் வார்த்தையை முன்னிறுத்திப் பாடுபட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைத்தார் கலாம்.
- அறிவியலுக்குத்தான் ஜாதி இல்லை, மதமும் இல்லை, அறிவியலுக்கு மொழியும் ஒரு தடைக்கல் இல்லை. அதனால் அனைவரும் அறிவியல் சிந்தனையுடன் அறிவியலர் வாழ்வின் உன்னதங்களை உணர்ந்து நாட்டை நல்வழிப்படுத்துவோம்.
நன்றி: தினமணி(27-07-2019)