TNPSC Thervupettagam

பயந்து நடுங்காத கதாநாயகிகள்

April 28 , 2024 258 days 235 0
  • புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் ஒருவர். பகுத்தறிவு, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற பல்வேறு தளங்களில் கவிதைகளை இயற்றியவர். தனக்குப் பின்னர் ஒரு பாட்டுப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர்.
  • பெண்களைப் பிள்ளைபெறும் கருவியாகப் பார்த்த காலத்தில், ‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ என்று கர்ப்பத்தடை குறித்துக் கவிதை எழுதியவர் பாரதிதாசன். கணவன் இறந்த பின்னர் கைம்மைக் கொடுமையை அனுபவிக்கும் பெண்களின் துயரத்தைப் பல பாடல்களில் சாடியதோடு மறுமணத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
  • பள்ளிகளில் பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து இன்று பரவலாக அனைவரையும் சென்றடைந்துள்ளது. இதை நூறாண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்தியவர் பாரதிதாசன். ‘பருவமடையும் தருணத்தும், அடைந்த பிறகும் பெண், தாய் தந்தையரிடம் தனது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டுச் சொல்லும்படி சிறுவயது முதலே பழக்கி வரவேண்டும்’ என்றார் (புதுவை முரசு, நவம்பர் 1930). பெண்களுக்குக் கல்வி வழங்கப்படுவதை வலியுறுத்திய பாரதிதாசன், கல்வி இல்லாத பெண்களை ‘களர்நிலம்’ என்றார்.
  • திருமணத்தில் பெண்களின் விருப்பம் அல்லது தேர்வு குறித்து பெரிதும் கவனம் செலுத்தப்படுவதில்லை. வீட்டிலுள்ள பெரியவர்கள் முடிவுக்குப் பெண்கள் கட்டுப்பட்டே பெரும்பான்மைத் திருமணங்கள் நடக்கின்றன. திருமணம் நடைபெறும் வீட்டில் முதலில் மணப் பெண்ணின் விருப்பத்தை வீட்டிலுள்ள பெரியவர்கள் கேட்பதாக ஒரு காட்சியை ‘குடும்ப விளக்’கில் அமைத்திருந்தார். ‘புரட்சித் திருமணத் திட்டம்’ என்கிற சுயமரியாதைத் திருமண விளக்கப் பாடலிலும் இதையே வலியுறுத்தினார்.
  • பெண்களைக் காப்பியத் தலைமையாகக் கொண்ட பழமையான இலக்கியமாக நமக்குக் கிடைப்பது மணிமேகலை காப்பியம். அதையடுத்து ஆண்களை மட்டுமே காப்பியத் தலைமையாகக் கொண்டு பெரும்பான்மை இலக்கியங்கள் படைக்கப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்களை மையப்படுத்திக் காப்பியங்களைப் படைக்கும் முறையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ச்சியாக்கினார்கள் பாரதிதாசனும் அவரது பாட்டுப் பரம்பரையும். பாரதிதாசன் பெண்ணைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு, ‘தமிழச்சியின் கத்தி’, ‘குடும்ப விளக்கு’ ஆகிய இரண்டையும் இயற்றினார்.
  • இன்று வெளிவரும் பெரும்பான்மைத் திரைப்படங்களில் அழகுப் பதுமைகளாகவும் வெகுளிப்பெண்களாகவும் இடம்பெறும் பெண் பாத்திரங்களுக்கு நேர்மாறாகத் தனது படைப்புகள் அனைத்திலும் பெண்களை அறிவார்ந்தவர்களாகவும் துணிவு மிக்கவர்களாகவும் காட்சிப்படுத்தியவர் பாரதிதாசன்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories