- நமது கல்விமுறையானது மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் செலுத்தும் அளவுக்கான கவனத்தை அவர்களை மதிப்பீடு செய்வதற்குச் செலுத்துவதில்லை. இந்த விமர்சனம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளதுதான். இதனைச் செழுமைப்படுத்தவே மத்திய அரசின் கல்வி வாரியத்தால் உருவாக்கப்பட்டு மாநிலப் பள்ளிகளிலும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continous and Comprehensive Evaluation) அமல்படுத்தப்பட்டுவருகிறது.
- ஆனால் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு என்று வரும்போது எழுத்துத் தேர்வே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி மிகவும் அவசியமாகிறது. இதனை இந்த வகுப்புகளை அடைந்த பிறகு கவனம் செலுத்தாமல் முன்பாகவே பயிற்சி பெறுதல் தேவையாகிறது.
எழுத்துத் தேர்வில் தடுமாறுவது ஏன்?
- வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்போது பெரும்பாலான வகுப்புகள் கலந்துரையாடலாகவே நடைபெறுகிறது. அவ்வாறு கலந்துரையாடலாக நடைபெறும்போது ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடப் பொருளானது அவ்வப்போது வினாக்களாக எழுப்பப்பட்டு, அந்த வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பதில் சொல்லிக்கொண்டேவருகின்றனர். இதுவும் ஒரு வகையான மதிப்பீடுதான். கற்பித்தலுடன் நடைபெறும் இவ்வகையான மதிப்பீட்டுடன் அன்றாட மதிப்பீடு முடிவடைந்துவிடுகிறது.
- பிறகு மாதாந்திர தேர்வுகள் அல்லது இடைப்பருவத் தேர்வுகள் போன்ற நடைமுறைகளில் அவர்கள் அதுவரை பயின்ற அனைத்துப் பாடங்களிலுள்ள கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றனர். ஆனால், இந்தத் தேர்வு நடைமுறைகளில் வினாக்கள் கேட்கப்பட்டு வினாக்களுக்கான விடைகள் எழுதப்பட வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? யாராக இருந்தாலும் எழுத்துத் தேர்வு எழுதித்தானே ஆக வேண்டும் என்ற உங்கள் வாதம் புரிகிறது. யாரும் மறுக்கவில்லை.
- எழுத்துத் தேர்வுக்கான பயிற்சியை நம் கல்விமுறையானது நடைமுறையில் அளிக்காததாலோ அல்லது குறைந்த அளவில் அளிப்பதாலோதான் மாணவர்களுக்கு அதுகுறித்து அயற்சி ஏற்படுகிறது. பாடம் நடத்தும்போது வாய்மொழியாக பதிலைச் சொன்ன மாணவர்கள் எழுத்துத் தேர்வு என்று வரும்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் ஏற்கெனவே அளித்த வாய்வழியிலான விடையை நினைவில் கொண்டு, அதை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும்.
- அனைத்து விடைகளையும் தாள்களில் எழுதித் தர வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வகையில் வாய்மொழியாக விடை அளிப்பதற்கும், வாய்மொழியாக அளிக்கக்கூடிய விடைகளைத் தாள்களில் எழுதிக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசமான நிலைமையை எதிர்கொள்ள முடியாதபோது மாணவர்கள் தடுமாறுகின்றனர். இதனால் பல மாணவர்களால் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடிவதில்லை.
மாற்று வழிகள் என்ன?
- இதற்கு மாற்றாக மாணவர்கள் அவ்வப்போது விடைகளை எழுதிப் பார்ப்பதற்கான பயிற்சிகளை வகுப்பறையிலேயே மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இது ஒரு இயந்திரகதியாக நடக்கக்கூடிய செயல்பாடாகத்தான் இருக்கும். ஆனால், அந்த இயந்திரகதியானச் செயல்பாட்டில் சில புதுமைகளை நாம் புகுத்த முடியும். இதனைப் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களும் உள்ளனர். ஆனால், வெகு சிலராகவே இருப்பர்.
- உதாரணமாக, மாணவர்களுக்குப் பாடம் நடத்திய பிறகு வாராந்திர தேர்வுகள் கொடுக்கக்கூடிய நடைமுறை உள்ளது. வாராந்திர தேர்வுகள், மாதாந்திர தேர்வுகள், இடைப்பருவத் தேர்வுகள் ஆண்டிறுதித் தேர்வு, இவ்வாறான நடைமுறைகளோடு தினந்தோறும் தேர்வு என்ற ஒரு நடைமுறையினையும் நாம் அமல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- இது எவ்வாறு இருந்தால் மாணவர்கள் சோர்வில்லாமல் எதிர்கொள்வர் என்ற புரிதல் நமக்கும் வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவர்களுக்குத் தெரிந்த வினாக்களுக்கு விடைகளை எழுதக்கூடிய நடைமுறையாக இது இருக்க வேண்டும். வகுப்பறை முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக அல்லாமல் ஒவ்வொரு நாளும் மாணவன் அல்லது மாணவியும் தனக்குத் தெரிந்த கேள்விக்கான விடையை எழுதிக் காண்பிக்கலாம். அதை ஆசிரியர்கள் திருத்தம் செய்யலாம். ஒருவேளை ஆசிரியர்களுக்குப் பணிப்பளு அதிகம் இருந்தால், அதை ஒரு குழுத் தலைவன் போன்ற ஏற்பாடுகள் மூலமாகக்கூட நடைமுறைப்படுத்தலாம்.
- இந்த நடைமுறை எங்கே நமக்கு உதவிகரமாக இருக்கும் என்று சொன்னால், மாணவர்கள் பேசுவதன் மூலமாக உரையாடுவது மூலமாக பெற்ற திறன்களை, தாளில் வடிக்கும்போது ஏற்படும் சிரமங்களை மாணவர்கள் அன்றன்றைக்கே எதிர்கொண்டு தீர்வுகளைக் காண முயற்சிப்பர். ஒருவேளை தீர்வு காண இயலாவிட்டாலும் எது மாதிரியான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது என்ற அறிமுகத்தையாவது இந்த நடைமுறை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
- அதுபோலவே வாய்ப்புள்ள மீத்திறன் மிக்க மாணவர்கள் அனைத்து வினாக்களுக்குமான விடையையும் எழுதிக் காண்பிக்கும் நிலையில் படிக்க சிரமப்படக்கூடிய மாணவர்களும் அவர்களுக்குத் தெரிந்தது சில வினாக்களுக்கான விடைகளை ஏற்கெனவே எழுதிக் காண்பித்து பயிற்சிபெற்றுள்ள நிலையில், அவர்களுக்குத் தன்னாலும் எழுதிக் காண்பிக்க இயலும் என்ற ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது.
நடைமுறை மாற்றம் தேவை!
- இதற்கு மாற்றாக, என்றோ ஒருநாள் தேர்வைச் சந்திக்கப்போகிறார்கள் என்கிற வகையில் அவர்களுக்கான தேர்வு பயம் என்பது ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே செல்வது அல்லது தேர்வு நெருங்கக்கூடிய நிலையில் தேர்வுக்கான பயம் என்பது ஏற்படுவது எந்த வகையிலும் மாணவர் நேயச் செயல்பாடாக அமையாது. இதன்படி மாணவர்களை மதிப்பீடு செய்யக்கூடிய முறைகளில் நாம் மாற்றங்களைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
- தேர்வு நடைமுறை என்பதில் எழுத்துத் தேர்வுக்கான மாற்றை விரைவில் உண்டாக்க வேண்டும். அதுகுறித்து சமூகம் சிந்திக்க வேண்டும். பொதுவாக தேர்வு குறித்த புரிதலின்மையே, பயமே மாணவர்களைத் தேர்விலிருந்து அந்நியப்படுத்திவைக்கிறது. எது அந்நியப்படுகிறதோ அதுகுறித்த பயமும் புரிதலின்மையும் கூடும் என்பது நாம் அறிந்ததே.
- இதையும் தாண்டி மாணவர்களை ஆசிரியர்கள் நெருங்கும் வகையில் அவர்களது பணிப்பளு குறைக்கப்பட்டு, பள்ளி நடைமுறைகளில் மேலும் ஜனநாயகத்தன்மையும் பெற்றோர் பங்கேற்பும் சமூகத்தின் ஈடுபாடும் அதிகரிக்க வேண்டும். இவை நடைமுறையாகும் காலம் வரை இதுபோன்ற வழிவகைகளைக் கையாண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் இன்றைக்குச் சமூகம் எதிர்ப்பார்க்கும் வெற்றியை அடைய இதுவே உதவும்.
நன்றி: அருஞ்சொல் (15 – 05 – 2024)