- தமிழ்நாட்டு விவசாயிகளின் நீண்ட காலக் கனவொன்று நனவாகிறது. வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை திமுக அரசு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கவிருக்கிறது.
- அதே சமயம், தண்ணீரில் அமிழ்ந்திருக்கும் சேற்றின் வதியைப் போல் உழவர்களுக்கான சில பிரத்யேகப் பிரச்சினைகள் வெளியே தெரியாமல் அடி ஆழத்தில் புதைந்திருக்கின்றன.
- 2020-ல் காவிரிப் படுகை விவசாயிகள் மூன்று விதமான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்தனர்.
- நிவர், புரெவி என்ற பெயர்களில் வந்த புயல்கள் உழவுத் தொழிலை உருக்குலைத்தன.
- 2020 டிசம்பர் இறுதியில் காலம் தவறிப் பெய்த வடகிழக்குப் பருவமழை 2021 தைப் பொங்கல் வரை உழவர்களைத் தொடர்ந்து நசிவுக்கு உள்ளாக்கியது.
- கடந்த 10 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தால் 2011-ல் தானே புயல், 2015-ல் பெரு வெள்ளம், 2016-ல் வர்தா புயல், 2017-ல் ஒக்கி புயல், 2018-ல் கஜா புயல், 2019-ல் பானி புயல், 2020-ல் இரு புயல்கள் என 8 இயற்கைப் பேரிடர்களை ஒரு காவிரிப் படுகை உழவர் கடந்து வந்துள்ளார்.
- விவசாயிகள் இத்தகைய துன்பக் கடலைத் தாண்டும்போது அவர்களைக் கரைசேர்க்கப்போகும் ஒரு தோணியாகத்தான் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா) அறிமுகப்படுத்தப்பட்டது.
கடன் தொகையில் பிடித்தம்
- இதற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகையாக (காப்பீட்டுக் கட்டணம்), உணவு தானியப் பயிர் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 1.5%, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பணப்பயிர்களுக்கு 5% அல்லது ‘அக்சூரியல் பிரீமியம் ரேட்’, இது இரண்டில் எது குறைவோ அதைச் செலுத்த வேண்டும்.
- கடன் பெறும் விவசாயிகளின் காப்பீட்டு பிரீமியத்தை விவசாயக் கடன் அளித்த வங்கிகளே காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தும்.
- இதற்காக, கடன் தொகையில் பிடித்தம் செய்துவிடும். கடன் பெறா விவசாயிகளைப் பொறுத்தவரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது பொதுச் சேவை மையத்தில் வேண்டிய ஆவணங்களைக் கொடுத்து பிரீமியம் செலுத்தி இந்தத் திட்டத்தில் சேரலாம்.
- உணவு உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தியாளர்களான விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்தவும், குறுக்கிடும் பேரிடர்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக வர்ணிக்கப்பட்டது.
- பரபரப்போடும் ஆர்வத்தோடும் பிரீமியத்தைச் செலுத்திய விவசாயிகள் நடைமுறையில் தங்களுக்குரிய காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்குள் படாதபாடு படுகிறார்கள்.
விநோத ஆய்வுகள்
- ஒவ்வொரு பேரிடரின்போதும் ஒரு மத்தியக் குழு பார்வையிட வருகை தரும். அது வருவதற்குள் ஒன்று வெள்ளம் வடிந்திருக்கும் அல்லது காய்ந்த வயல் வரப்புகளில் புல்லின் நுனியில் பனித்துளி ஒட்டியிருக்கும். கடைசியில், மாநில அரசு கேட்பது ஒரு தொகையாகவும், மத்திய அரசு கொடுப்பது சிறு தொகையாகவும் அமையும்.
- இன்னொரு பக்கம் பார்த்தால் சேதத்தை மதிப்பிடுவதற்குக் காப்பீட்டு நிறுவனங்களின் சில அதிகாரிகள் ரகசிய விஜயம் செய்வார்கள். ஒரு ஏரியில் ஒரே குமிழியில் ஒரே வாமடையில் பாசனம் செய்யும் ஒரு வயல் வறண்டுபோனதாகவும், இன்னொரு வயல் நிறைய விளைந்ததுபோலவும் அவர்களது ஆய்வறிக்கை இருக்கும்.
- இழப்பீடு வாங்குவதற்குள் அலுவலக அதிகாரிகளால் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப் படுவார்கள். இந்த வதைகளைக் காவிரிப் படுகை விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் சந்திக்கின்றனர்.
- 2020 சம்பா சாகுபடியில் உழவர்கள் புது வேதனையை அனுபவித்தனர். பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய ஊடகங்கள் மூலமாகவும், அரசின் பிரத்யேக வாகன விளம்பரங்கள் மூலமும் உழவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
- வழக்கம்போல உழவர்களும் காப்பீடு செய்தனர். முன்பே கூறியபடி பேரிடர்களும் நிகழ்ந்தன. இந்தப் பேரிடர்களை மத்தியக் குழு ஆய்வும் செய்தது. பாதிப்பு உண்மை என்று களத்தில் தலையையும் ஆட்டியது. எனினும், சல்லிக்காசு இழப்பீடு கிடைக்கவில்லை.
- இவ்வளவுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கென்றே இந்தத் திட்டம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறத் தகுதியான விவசாயிகளுக்குப் பாதிப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் அவர்களுடைய வங்கிக் கணக்கில் காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் திட்டத்தில் வகுக்கப் பட்டுள்ளன.
- மேலும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறை எண் 35.5.2.10 என்ற பிரிவு இழப்பீடு வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்துக்கு வட்டியோடு காப்பீட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
- எனினும், 2020-21 சம்பா, தாளடிக்குப் பயிர்க் காப்பீடு கேட்ட விண்ணப்பங்கள் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
கால தாமதமாகும் அறிவிப்பு
- 2021-க்கான குறுவை சாகுபடிப் பயிர்க் காப்பீட்டுக்கான அறிவிப்பும்கூட இன்னும் வரவில்லை. இத்தகைய காலதாமதம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான இயல்பான கால வரம்பும் முடிந்துவிட்டது.
- ஆனால், கூட்டுறவு வங்கிகளில் ரொக்கக் கடன் பெற்றவர்களுக்கு மட்டும் பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமருக்குத் தமிழ்நாடு முதல்வர் கடிதம் எழுதிய செய்திகளும் வெளிவந்தன.
- பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய, மாநில, சம்பந்தப்பட்ட உழவர்களின் பங்கேற்பு விகிதாச்சாரம் 49:49:2 சதவீதம் என இருந்தது. இப்போது மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணப் பங்கு பாசனப் பகுதிக்கு 25% என்றும், மானாவாரிக்கு 30% என்றும் குறைக்கப் பட்டுள்ளது.
- 2016-17-ல் மாநில அரசு பிரீமியப் பங்கு ரூ.566 கோடி என்றும், 2020-21-ல் ரூ.1,918 கோடி என்றும், நடப்பாண்டில் ரூ.2,500 கோடி என்றும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த நிதிச் சுமையை மாநில அரசால் தாங்க முடியாது என்றும், மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டணம் முந்தைய அளவுக்கே இருக்க வேண்டும் என்றும் முதல்வர் கடிதம் குறிப்பிடுகிறது.
- நடப்பாண்டில் குறுவை சாகுபடித் திட்டம் தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் திட்டமிடப்பட்டது. எனினும், சாகுபடி அளவு 1 லட்சத்து 32 ஆயிரம் ஏக்கரைத் தாண்டி விட்டது.
- படுகை முழுவதும் குறுவை சாகுபடி அளவு 3.50 லட்சம் ஏக்கர் என்றும் சம்பா சாகுபடி அளவு 13 லட்சம் ஏக்கர் என்றும் கணிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் என்பதுதான் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அதனால் வெப்பச்சலன மாறுபாடு, வரையறுக்க முடியாத பருவமழைக் காலம் உள்ளிட்ட பாதிப்புகளைப் பற்றிய தம் கவலையைத் தமிழ்நாடு முதல்வர் அண்மையில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
- உழவுத் தொழில் வறட்சியையும் வெள்ளத்தையும் மாறி மாறி சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏக்கங்களும் பெருமூச்சுகளுமே விவசாயிகளின் வாழ்க்கையை நிரப்புகின்றன. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உயிர் பெறுமா என்ற கேள்வி காடுகழனிகளில் வியாபித்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (13 - 08 – 2021)