பரவலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்!
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்கிற அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளித்திருக்கிறது. அதேவேளையில், நாட்டின் வளர்ச்சியைப் பின்னுக்கு இழுக்கும் பிரச்சினைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படாதது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
- புதிய வருமான வரி நடைமுறையில் நடப்பு நிதியாண்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி இல்லை என்று இருக்கிறது. அது, ஒரேயடியாக ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் அதிகரித்து, சேமிப்பும் முதலீடும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்; நுகர்வு சக்தி அதிகரிப்பதால் வரி வருவாய் அரசுக்கே கிடைக்கும்.
- புற்றுநோய், அரிய வகை நோய்கள், கடுமையான நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 36 வகை மருந்துகளுக்குச் சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயிகள் ‘கிசான் கடன் அட்டை’ மூலம் வழங்கப்படும் கடன் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- என்றாலும், இந்த அறிவிப்பால் விவசாயிகளுக்கு அதிகப் பலன் கிடைக்காது என்கிற குரல்களுக்கும் அரசு செவிமடுக்க வேண்டும். இதேபோல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பெறுவதை மேம்படுத்த ரூ.5 லட்சம் வரம்புடன் கூடிய கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு, இந்த நிறுவனங்களுக்குப் பயன் அளிக்கக் கூடியது.
- எனினும், கடன் அட்டைகள் பெறுவதற்குக் கடுமையான விதிமுறைகள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதிசெய்வதன் மூலம்தான் இதன் நோக்கம் நிறைவேறும். சிறு, குறு நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது, தொழில் துறையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். என்றாலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் சரிவரக் கடன் கொடுப்பதில்லை என்கிற புகார்கள் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- ரயில்வே துறைக்கு 2024-25 நிதிநிலை அறிக்கையில் ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2025-26ஆம் நிதியாண்டில் இந்த ஒதுக்கீட்டில் மாறுதல் இல்லை. அண்மைக் காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். காப்பீட்டுத் துறையில் தற்போது 74%ஆக இருக்கும் அந்நிய முதலீடு 100%ஆக அதிகரிப்பது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- நடப்பு நிதியாண்டில் 4.8%ஆக இருக்கும் நிதிப் பற்றாக்குறை 2025-26இல் 4.4%ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கணிப்பு மாறாத வகையில் அரசின் திட்டச் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வருமான வரி, சுங்க வரியில் பெரிய அளவில் வெட்டுக்கள் விழுந்து நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதை 4.4%ஆகக் குறைக்க முனைந்திருப்பதும், சம வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் இடம்பெற்றிருப்பதும் பாராட்டுக்குரியவை.
- என்றாலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், அது குறித்த அறிவிப்புகளோ திட்டங்களோ வெளிப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பிஹார் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அளிக்கப்படவில்லை என்கிற விமர்சனமும் முக்கியமானது. வளர்ச்சியை மையமாகக் கொண்டது என்கிற பாராட்டை இந்த நிதிநிலை அறிக்கை பெற்றிருக்கிறது. அந்த வளர்ச்சி பரவலாக அமைவதற்கான முன்னெடுப்புகளை அரசு தொடங்க வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 02 – 2025)