TNPSC Thervupettagam

பருவநிலை நெருக்கடி: புவி எதிர்கொள்ளும் பயங்கரம்!

November 14 , 2019 1886 days 1170 0
  • ‘புலி வருது, புலி வருது’ என்று சொல்லிச் சொல்லி, இப்போது வந்தேவிட்டது. ஆம்! 153 நாடுகளிலுள்ள 11,259 அறிவியலாளர்கள் சேர்ந்து, பருவநிலை நெருக்கடியை அறிவித்திருக்கிறார்கள்.
  • இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 69 அறிவியலாளர்களும் அடக்கம். “பெரிய அளவிலான மாற்றம் ஏதும் உலக சமூகத்தில் ஏற்படவில்லை என்றால், பருவநிலை காரணமாகச் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்கப்போகிறோம்” என்று எச்சரித்திருக்கிறார்கள்.
  • இந்த நெருக்கடிநிலை அறிவிப்பானது ‘பயோசயின்ஸ்’ என்ற இதழில் வெளியாகியிருக்கிறது. 1979-ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த பருவநிலை மாநாட்டின் 40-வது ஆண்டு நிறைவில் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. எரிசக்தி, மின்சக்தி போன்றவற்றின் நுகர்வு, புவியின் மேற்பரப்பின் வெப்பநிலை, மக்கள்தொகைப் பெருக்கம், காட்டழிப்பு, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு போன்றவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் கிடைத்த தரவுகளைக் கொண்டு இந்த அறிக்கையை அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
  • “40 ஆண்டு காலமாக எவ்வளவோ பேசியிருக்கிறோம். ஆனால், இது குறித்து அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைப் போலவே அரசாங்கங்கள் நடந்துகொள்கின்றன” என்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.

வெறும் சொற்கள் அல்ல

  • பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் என்ற சொற்கள் நமக்கிடையே புழங்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் ஆகின்றன. இந்தச் சொற்களெல்லாம் வெறுமனே பூச்சாண்டி காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுபவை அல்ல; நிலைமையின் தீவிரத்தை உணர்த்துபவை.
  • இந்தக் கோட்பாடுகளெல்லாம் கட்டுக்கதை என்று இன்னமும் சொல்லும் ட்ரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் பலரும் உண்டு. இவையெல்லாம் கட்டுக்கதைகள் அல்ல; உண்மை. புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் வெளிப்படையான அறிகுறிகளை அறிவியலாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
  • தரைப் பரப்பின் மேலுள்ள காற்றின் வெப்ப நிலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடல் மேல் உள்ள காற்றின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்க்டிக் கடலின் பனிப் பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன பனியாறுகளும் உருகிக்கொண்டிருக்கின்றன. கடல் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காற்றில் ஈரப்பதமும் தேவைக்கு அதிகமான அளவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  • இவ்வளவு காரணங்களால் பருவநிலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உரிய நேரத்தில் மழை பொழிவதில்லை. காலம் தவறி பெருமளவு மழை பொழிகிறது. ஒரு இடத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றால், இன்னொரு இடமோ அதிக மழை காரணமாகத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இவை எல்லாமே நம் கண் முன்னுள்ள உதாரணங்கள்.
  • கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் பருவநிலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இந்த வாயுக்களை அதிக அளவில் வெளியிடுவதில் சீனாவுக்குத்தான் முதலிடம். 2016-ல் சீனா 9,056.8 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா 4,833 மெட்ரிக் டன்னுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 2,076.8 மெட்ரிக் டன்னுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இவ்வளவு கரிமத்தையும் நம் வளிமண்டலம் எப்படித் தாங்கும் என்ற சிந்தனையே இல்லாமல் நாம் உமிழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  • புவியின் தட்பவெப்ப நிலையைப் பராமரிப்பதில் காடுகளுக்கும் அவற்றில் உள்ள மரங்களுக்கும் முக்கியப் பங்குண்டு. தற்போதைய பருவநிலை நெருக்கடிக்குக் காட்டழிப்பும் ஒரு காரணம்.
  • அமேசான் காட்டையே எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு ஆண்டும் 20,000 சதுர மைல் அளவுக்கு அழிந்துபடுகிறது. ஏற்கெனவே, 20% காட்டுப் பரப்பை இழந்திருக்கிறது.

காடுகள் அழிப்பு

  • ஒவ்வொரு நாளும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு இந்தக் காடுகள் எரிந்துபோகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. ‘தற்போதைய காட்டழிப்பு விகிதம் தொடருமானால் 2030-க்குள் 27% வனப்பரப்பை அமேசான் இழந்துவிடும்’ என்று ஐநாவின் உலக இயற்கை நிதியம் முன்பே எச்சரித்தும் காட்டழிப்பு இதே வேகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
  • இதற்கு முன்பும் புவியானது புவி வெப்பமாதலை எதிர்கொண்டிருக்கிறது. முந்தைய புவி வெப்பமாதல் 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதற்கு, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கையான சம்பவங்கள்தான் காரணம். அப்போது பல்வேறு உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. தற்போதைய புவி வெப்பமாதலானது மனிதர்களால் தூண்டப்பட்டது.
  • இதற்கு நாம் வாழும் முறையே காரணம். தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு, மனித குலம் நுகர்வுப் பசிக்கு ஆளாக்கப்பட்டது. உணவு நுகர்வு, எரிபொருள் நுகர்வு, பிற பண்டங்களின் நுகர்வு என்று வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் நுகர ஆரம்பித்தார்கள். இதற்கான விலையைத்தான் தற்போது புவி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

மாறான வேகத்தில் நெருக்கடி

  • “புவிக் கோளானது பருவநிலை நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்று நாங்கள் தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமில்லாமலும் அறிவிக்கிறோம். வளம் குன்றா ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கு நாமெல்லோரும் வாழும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்... இழப்பதற்கு இனி நம்மிடம் நேரமில்லை. பருவநிலை நெருக்கடி வந்துவிட்டதோடு அல்லாமல் பெரும்பாலான அறிவியலாளர்கள் எதிர்பார்த்ததற்கும் மாறான வேகத்தில் அந்த நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்த்ததைவிட தீவிரமாக இருக்கும் இது, இயற்கையின் சூழல் மண்டலங்களையும் மனித குலத்தின் விதியையும் அச்சுறுத்துகிறது” என்கிறது அறிவியலாளர்களின் அறிக்கை.
  • பருவநிலை நெருக்கடியின் விளைவுகள் வேறு எங்கோ ஏற்பட்டுக்கொண்டிருக்கவில்லை. இங்கே நம் கண் முன்கூட நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. முப்போகம் விவசாயம் என்று பெருமையடித்துக்கொண்டிருந்த காலம் போய், தற்போது ஒரு போகத்துக்கே நம் விவசாயிகள் திண்டாடிக்கொண்டிருப்பதும் பருவ மாற்றத்தின் விளைவுதான். இவ்வளவு ஏன், 2050-ல் சென்னையின் கடற்கரையோரம் இருக்கும் பகுதிகள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வொன்று சமீபத்தில் எச்சரித்திருக்கிறது.
  • ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இறந்துகொண்டிருக்கிறார்கள். போகப் போக இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும். இந்த அளவுக்கு நம் முன்னே பூதமாக வந்து பருவநிலை நெருக்கடி நின்றுகொண்டிருக்கும்போது, நாம் வழக்கமாக நம் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனால்தான், உலக நாடுகளின் தலைவர்கள் மீது சமீபத்தில் சிறுமி கிரேட்டா தன்பர்க் ஐநாவில் நடந்த மாநாட்டில் சீறியிருந்தார். அப்போது ஏதோ ஆர்வக்கோளாறால் பேசுகிறார் என்ற அளவில் அவரைப் பலரும் கிண்டலடித்திருந்தனர். அந்தச் சிறுமியின் கோபத்தை நியாயப்படுத்தும் விதத்தில் தற்போது பருவநிலை நெருக்கடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்ன செய்யலாம்?

  • சரி, நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கும் தீர்வை அறிவியலாளர்கள் இந்த அறிக்கையில் முன்வைக்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும், படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், காட்டழிப்பை நிறுத்த வேண்டும், இறைச்சி உண்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும், நுகர்வில் நிதானம் தேவை. இப்படியெல்லாம் செய்தால்தான் எதிர்காலத்தை எங்களுக்கு விட்டுவையுங்கள் என்று கேட்கும் கிரேட்டா தன்பர்கின் தார்மீகத்தை நாம் எதிர்கொள்ள முடியும்.
  • இந்தப் புவிதான் நமக்கு இருக்கும் ஒரே வாழிடம். இதைத் தாண்டியும் வேறு ஏதாவது கோள்கள் உயிர் வாழ்க்கைக்கு ஏதுவாக இருக்கின்றனவா என்ற தேடல் சூரியக் குடும்பத்தினுள்ளும் சூரியக் குடும்பத்தின் வெளியிலும் பல தசாப்தங்களாக நடைபெற்றுவருகின்றன.
  • நமது பால்வீதி மண்டலத்தில் மட்டும் பத்தாயிரம் கோடி கோள்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புலப்படக்கூடிய பிரபஞ்சத்தில் 1,000,00,00,000,00,00,000,00,00,000 கோள்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை கோள்களில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்களைக் கொண்ட கோள்கள் கோடிக் கணக்கில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆயினும், உயிர் வாழ்க்கை சாத்தியப்பட்டதாக நமக்குத் தெரிந்த ஒரே கோள் புவிதான். அப்படிப்பட்ட அரிதான கோளை நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வியைத் தற்போது பருவநிலை நெருக்கடி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories