TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றங்களும் ஆரோக்கியக் கேடுகளும்

October 28 , 2021 1004 days 546 0
  • அக்டோபர் 31-ல் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் ‘ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய உறுப்பு நாடுகளின் 26-வது மாநாடு’ (COP26) நடைபெற இருக்கும் சூழலில், உலக ஊடகங்களில் புவி வெப்பமாதல் தொடர்பிலும், பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதில் உள்ள பிரச்சினைகளும் சூடுபிடித்துள்ளன.
  • 1995 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், கார்பன் உமிழ்வைக் குறைத்து புவி வெப்பமாதலைத் தடுக்கவும், பருவநிலை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
  • வருடா வருடம் புவிவெப்பம் அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகும்; கடல் மட்டம் உயரும்; நகரங்கள் மூழ்கும்; பேரிடர் பேரழிவு ஏற்படும் எனப் பூமிப் பந்துக்குப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?
  • 1880-1900 ஆண்டுகளில் நிலவிய சராசரி உலக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ். இப்போது அது 15 டிகிரி செல்சியஸாக இருக்கிறது.
  • இதே நிலை நீடித்தால், 2100-ல் இன்றைய வெப்பநிலையிலிருந்து 3 – 5 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும், இந்த வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரிக்குக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசுக்குழு (ஐ.பி.பி.சி) பரிந்துரைக்கிறது.
  • கார்பன் டையாக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன் போன்ற பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது பூமி சூடாகிறது.
  • இன்றைய மக்கள்தொகைப் பெருக்கம், நவீனத் தொழில்முறைகள், நிலக்கரி, பெட்ரோல், டீசல் எரிசக்தி வாகனங்கள், அடர்வன அழிப்புகள், நவீன வாழ்க்கை முறைகள் எனப் பலவும் பசுங்குடில் வாயுக்களின் அளவற்ற வெளியீட்டுக்குக் காரணமாகின்றன.
  • இவற்றில் கார்பன் டையாக்ஸைடுதான் வளிமண்டலத்தில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணம், நீங்கள் அரை மணி நேரம் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ பார்த்தால், 1.6 கிலோ கார்பன் டையாக்ஸைடு வெளியேறி, வளிமண்டலத்துக்குச் செல்கிறது.
  • அடுத்த 6 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இப்படிப் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க பூமியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
  • அப்போது அது பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, காற்று, குடிநீர், உணவு, வசிப்பிடம் என நம் வாழ்வாதாரங்களில் அது கைவைக்கிறது.
  • அப்போது ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகிறது; விலங்கினங்கள் புலம்பெயர்வதும் அழிவின் பாதைக்குச் செல்வதும் நிகழ்கிறது. உணவுச் சுழற்சி சிதைகிறது.

ஆஸ்துமா அதிகரிக்கும்!

  • பருவநிலை மாற்றத்தால் வெயில், குளிர் இரண்டுமே தீவிரமாகி, தட்பவெப்பம் தொடர்பான நோய்களை மட்டுமல்லாமல் ரத்தக்குழாய்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, இதய நோய்களையும் சுவாச நோய்களையும்கூட பல மடங்கு அதிகரித்துவிடுகின்றன.
  • 2003-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்பத்தால் 70,000 பேர் வழக்கத்தைவிட அதிகமாக இறந்துள்ளதை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். அதிக வெப்பமுள்ள வளிமண்டலத்தில் மாசுக்களும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் ஆஸ்துமா, சுவாசத்தடை உள்ளிட்ட பிரச்சினைகள் இரட்டிப்பாகும்.
  • அப்போது உலகில் 30 கோடி மக்களுக்கு ஆஸ்துமா புதிதாக உண்டாகும் என்கிறது புள்ளிவிவரம். பருவநிலை மாற்றத்தால் பல இடங்களில் மழையே பொழியாது அல்லது கடுமையாக மழை பொழியும். சமீபத்தில் கேரளத்திலும் உத்தராகண்டிலும் பொழிந்த கடுமையான மழையை இங்கு நினைவுகூரலாம்.
  • இதன் காரணமாகப் பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு பாதுகாப்பான குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வரும். வாந்தி, வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் தலைதூக்கும்.
  • உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் கடலிலிருந்து 60 கி.மீ. தொலைவுக்குள்ளேயே வசிக்கின்றனர். கடலின் மட்டம் அதிகரிக்கும்போது அவர்கள் நகரங்களுக்குள் நகருவார்கள். அங்கு மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
  • அடிப்படை வசதிகளும் சுகாதாரமும் குறைந்துபோகும். அப்போது டைபாய்டு, காசநோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்கள் அதிகரிக்கும். புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படும்.
  • தண்ணீர் தட்டுப்பாடு வரும். அப்போது உணவுத் தானியங்களின் உற்பத்தி குறைந்து, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாடு மனித இனத்தைத் தாக்கும். மனித உழைப்பு குறைந்து நாட்டின் உற்பத்தி குறையும்.

பதற வைக்கும் டெங்கு

  • பருவநிலை மாற்றத்தால் பெருவெள்ளமும் புயல், சூறாவளிப் பேரிடர்களும் ஏற்படும்போது தெருக்களில் தண்ணீர் தேங்கும். அதனால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இன்னும் அதிகமாகப் பரவும்.
  • இந்தப் பாதிப்பை இப்போதே நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம். தற்போது நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதாரக் கேடு காரணமாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவின் ஆயுட்காலம் 20-லிருந்து 40 நாட்களாக அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று.
  • புவிவெப்பம் காரணமாக வளிமண்டலத்தில் ஓசோன் ‘குடை’ சிதைந்துவிடுவதால், அதன் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவி நேரடியாக நம்மைத் தாக்கும்போது சருமப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு.
  • புவிவெப்பத் தாக்குதல்கள் கர்ப்பிணிகளையும் விட்டுவைப்பதில்லை. பிறவிக்குறை நோய்களுடனும் குறைப் பிரசவங்களுடனும் குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கலாம் என்பதால் நம் சந்ததிகளின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கின்றனர் சூழலியலர்கள்.

நம்மாலும் உதவ முடியும்!

  • பசுங்குடில் வாயுக்களை மிகுதியாக வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. மேற்கத்திய நாடுகள் கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி அளித்தால் மட்டுமே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த வாயுக்களைக் குறைப்பது சாத்தியப்படும்.
  • அதேவேளையில், இந்த விஷயத்தில் நாட்டுக்கு நம்மாலும் உதவ முடியும். எப்படி? அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம். சைக்கிளில் செல்லலாம். இயன்றவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். புதைபடிவ எரிபொருள் சார்ந்த வாகனப் போக்குவரத்தைக் குறைக்கலாம். மின்வாகனங்களுக்கு மாறலாம்.
  • இறைச்சி உணவைக் குறைக்கலாம். உணவும் தண்ணீரும் வீணாகாமல் பார்த்துக்கொள்ளலாம். வீடுகளில் மரம் வளர்க்கலாம். தோட்டம் போடலாம். வன வளர்ச்சிக்கு உதவலாம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், போன்றவற்றில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.
  • மின்னணு சாதனங்கள், ஞெகிழிப் பயன்பாடு அதிகம் வேண்டாம். இப்படிச் சிறு சிறு விஷயங்களில் அக்கறை செலுத்தினாலே வியத்தகு பலன்களைக் காணலாம். அந்தப் பலன்கள் நமக்கு மட்டுமல்ல; நம் சந்ததிக்குமானது என்பதால் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories