TNPSC Thervupettagam

பருவமழை சொல்லும் செய்தி!

October 7 , 2021 1025 days 624 0
  • பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு.
  • தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரும் நேரம். வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு சீரான மழைப் பொழிவுடன் பருவ மழை காணப்படவில்லை.
  • இந்திய விவசாயத்தின் அடிப்படையான பருவமழை சீராக இல்லாமல் போனால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் கவலைப்படாமல் இருக்க முடியாது.
  • வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போலவே, நிகழாண்டில் வழக்கத்துக்கு முன்பாகவே பருவ மழை தொடங்கிவிட்டது.
  • அடைமழையுடன் கூடிய ஜூன் மாதம்; மழைப்பொழிவே இல்லாத ஜூலை; அதிகமான மழைப்பொழிவு காணப்படும் ஆகஸ்டில் மழையே இல்லாமல் இருந்தது; செப்டம்பரில் அடைமழை; ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காணப்படாதது; பருவ மழைக் காலத்தில் மூன்று இடைவெளிகள் இப்படி வழக்கத்துக்கு மாறான பருவ மழையை இந்த ஆண்டு இந்தியா சந்திக்கிறது.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் செப்டம்பர் மாதம் பெய்த மழையால் பயிர்கள் நாசமடைந்தது உள்பட வழக்கத்துக்கு மாறான பருவநிலை இந்திய விவசாயிகளை அச்சுறுத்தியது.

வழக்கத்துக்கு மாறாக மழைப் பொழிவு

  • மொத்தமாகப் பார்த்தால், நிகழாண்டின் பருவ மழை வழக்கம் போலவே இருந்திருக்கிறது. ஜூன் மாதம் வழக்கத்தைவிட 9.6% அதிகமான மழைப் பொழிவுடன் தொடங்கி முக்கியமான ஜூலை, ஆகஸ்ட் மாத நாற்று நடவுப் பருவத்தில் வழக்கத்தைவிட குறைவான மழைப் பொழிவு காணப்பட்டது.
  • செப்டம்பர் மாதம் எடுத்துக்கொண்டால் வழக்கத்தைவிட 29% மழைப் பொழிவு அதிகம்.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பான "வழக்கமான பருவ மழை' என்பது ஒட்டுமொத்தமாக சரியாக இருக்கிறது என்றாலும், வேளாண்மைக்குச் சாதகமான வகையில் அமையவில்லை.
  • முக்கியமான பருவ மழைக் காலத்தில் மத்திய இந்தியாவில் வழக்கமான பொழிவும், வடமேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வழக்கமான மழையும் காணப்படும் என்பதுதான் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பாக இருந்தது.
  • வடமேற்கு இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் காலதாமதமான மழைப் பொழிவும், தேவையான அளவுக்கு இல்லாத மழைப் பொழிவும் காணப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிகமான பருவ மழை இருந்தது.
  • மிக முக்கியமான பயிரிடும் மாதங்களில் மழை குறைவாகவும், அறுவடைக் காலத்தில் அதிகமான மழையும் காணப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டதே தவிர பயன்பட்டதாகக் கூற முடியாது.
  • பயிர்களைப் பொறுத்து பாதிப்புகளும் சாதகங்களும் காணப்படுவதால், விவசாயிகள் இழப்பை எதிர்கொள்ளாத அளவிலான மகசூல் பெறுவதற்கு அரசு கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அதன்மூலம்தான் உணவுப் பொருள்களின் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதல் கட்ட மதிப்பீட்டின்படி நெல், பருப்பு வகைகள், கரும்பு ஆகியவற்றின் மகசூல் நன்றாகவே இருக்கும்.
  • அதேநேரத்தில், ஏனைய தானியங்களான பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் மகசூல் பாதிப்பை எதிர்கொள்ளும்.
  • காரீப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி எதிர்பார்த்ததுபோல மீண்டும் 94.5 லட்சம் டன்களாக இருக்குமேயானால் அது நுகர்வோருக்கு நல்ல செய்தியாக இருக்கும்.
  • 2017}18 நிதியாண்டில் 95.8 லட்சம் டன்களாக இருந்த பருப்பு வகைகளின் உற்பத்தி, 2020- 21 இல் 86.90 டன்களாக குறைந்ததால் விலை அதிகரித்தது. இப்போது அதிக மகசூலால் பருப்பு வகைகளின் விலை குறையக்கூடும்.
  • தேவைக்கு அதிகமான அரிசி உற்பத்தி நல்ல செய்தி அல்ல. இந்த ஆண்டு 10.7 கோடி டன்கள் அளவிலான அரிசி உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில் "கரீப் கல்யாண்' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அரிசியும் கோதுமையும் வழங்கி, இந்திய உணவு தானியக் கழகத்தின் கிடங்குகளில் தேங்கிக்கிடந்த தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
  • செப்டம்பர் மாதத்திலிருந்து மீண்டும் உணவு தானியக்கழகக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. பல லட்சம் டன்கள் மழையில் நனைந்து வீணாவதும் தவிர்க்க முடியாதது.
  • அதேபோல, கரும்பு உற்பத்தியும் 41.9 கோடி டன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • எத்தனால் உற்பத்தியை முனைப்புடன் நிறைவேற்றாமல் போனால் அதிகரித்த சர்க்கரை உற்பத்தியுடன் சர்க்கரை ஆலைகள் திணறப் போகின்றன. இந்த நிலையில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்படுகிறது.
  • அதிகமாக தண்ணீரை உறிஞ்சக்கூடிய நெல், கரும்பு, கோதுமைப் பயிர்களிலிருந்து விவசாயிகளை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், ஆதரவு விலையை அதிகரித்து ஊக்குவிக்கும் போக்கை மத்திய } மாநில அரசுகள் தொடர்வது தவறான அணுகுமுறை.
  • எண்ணெய் வித்துகளின் உற்பத்தி கவலையளிக்கிறது. சமையல் எண்ணெய் இறக்குமதியிலிருந்து இந்தியாவுக்கு விடிவு காலம் ஏற்படாது என்று தோன்றுகிறது. நிகழாண்டில் எண்ணெய் வித்துகளின் உற்பத்தி 2.33 கோடி டன்.
  • இது நமது தேவையைவிட மிகக் குறைவு. அதனால் சமையல் எண்ணெய்யின் விலை குறையப் போவதில்லை என்பது உறுதி.
  • சமீபத்தில் 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பருவகாலம் எதிர்பார்ப்பதுபோல மழைப் பொழிவை வழங்காமல் இருக்கும் நிலையில், வேளாண்மையில் அறிவியலின் பங்கு அதிகரிக்கிறது.
  • வறட்சி, அதிகரித்த வெப்பம், கூடுதல் மழைப் பொழிவு உள்ளிட்ட எல்லாப் பருவ நிலைகளையும் எதிர்கொள்ளும் பயிர்களை கண்டுபிடிப்பதிலும், ஊக்குவிப்பதிலும்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது. மானியங்களும், இழப்பீடுகளும் தீர்வல்ல.

நன்றி: தினமணி  (07 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories