TNPSC Thervupettagam

பருவமழை நமக்கு ஏன் முக்கியம்

July 9 , 2023 552 days 516 0
  • தென்மேற்குப் பருவக்காற்று, வட கிழக்குப் பருவக்காற்று, சூறாவளிக் காற்று ஆகிய மூன்று முறைகளில் தமிழ்நாடு மழைப்பொழிவைப் பெறுகிறது.

தென்மேற்குப் பருவமழை

  • தென்மேற்குப் பருவக் காற்றின் மூலம் பெய்யும் மழையினால், ஜூன் முதல் செப்டம்பர்வரை நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக எழுபது சதவீத மழை பொழிகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதி சராசரியாக 150 சென்டிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது.

வடகிழக்குப் பருவமழை

  • தமிழ்நாடு பரவலான மழையைப் பெறுவது வடகிழக்குப் பருவக் காற்றின் மூலமே. அக்டோபர் முதல் டிசம்பர்வரை தமிழ்நாட்டுக் கடலோரம், உள்நாட்டுச் சமவெளிப் பகுதிகள் அதிக மழையைப் பெறுகின்றன. இந்தப் பருவமழையால் கன்னியாகுமரியைத் தவிர சென்னை, கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் அதிகபட்சமாக இருநூறு செ.மீ.வரை மழைப்பொழிவைப் பெறுகின்றன. இந்தப் பருவத்தில் திருச்சி, சேலம், ஈரோடு மாவட்டங்கள் நூறு செ.மீ. முதல் நூற்று ஐம்பது செ.மீ.வரை மழையைப் பெறுகின்றன.

சூறாவளி மழைப்பொழிவு

  • வங்கக் கடல், அரபிக் கடலில், ஏப்ரல்–மே மாதங்களிலும் அக்டோபர்–டிசம்பர் மாதங்களிலும் சூறாவளிகள் ஏற்படுகின்றன. பருவகாலக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலைகளால் இந்தச் சூறாவளிகள் உருவாகின்றன. இவை அதிக சேதத்தையும், அதேநேரம் கடலோர மாவட்டங்களில் அதிக மழையையும் பொழியவைக்கின்றன.
  • தென்னிந்தியாவில் ‘சித்திரைச்சுழி’ எனப்படும் சித்திரை மாதச் சுழற்காற்று வீசும். சூறாவளி மழைப்பொழிவும், வடகிழக்குப் பருவமழையும் கடலோர மாவட்டங்களுக்குச் சம அளவில் மழைப்பொழிவைத் தருகின்றன.
  • தமிழ்நாட்டுக்குத் தென்மேற்குப் பருவமழை (22%), வடகிழக்குப் பருவமழை (57 %), சூறாவளி மழைப்பொழிவு (21 %) கிடைக்கிறது. தமிழகம் அதிக அளவு மழையைப் பெறுவது வடகிழக்குப் பருவக் காற்றின் மூலமே.
  • கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே மேற்கண்ட மூன்று பருவ காலங்களிலும் மழை பெறும் பகுதி. நீலகிரி, கடலோர மாவட்டங்கள் ஓராண்டில் சுமார் 1,400 மி.மீ. மழையைப் பெறுகின்றன. ஆண்டின் குறைந்த மழையைப் பெறுவது கோவை மாவட்டம்.

நன்றி: தி இந்து (09 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories