- மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகளின் வாகன சோதனையில் உரிய கணக்கின்றி கொண்டு செல்லப்படும் பெரும் பணம் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் இனி அடுத்தடுத்து நிகழவுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்படும் தொகை பிற பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்பவையாகவே உள்னள.
- தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள இந்நேரத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு தொகுதியிலும் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்படும் இந்தக் குழுவினரால் தினமும் வாகன சோதனை நடத்தப்படும். அப்போது உரிய ஆவணங்களின்றி பிடிபடும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கம், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், மது, குட்கா போன்ற பொருள்கள் யாவும் பறிமுதல் செய்யப்படும்.
- இவ்வாறு பிடிக்கப்படும் பொருள்களுக்கு உரிய கணக்கு காட்டப்படுமானால் அவை கூடுதல் ஆட்சியா் நிலையிலான அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அது கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
- ரூ.10 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்படும். அவை பணம், உரிய வரி செலுத்தப்பட்டவைதானா என்பதை சரிபாா்க்க வருமான வரித் துறை வசம் ஒப்படைக்கப்படும்.
- ஆனால், வாக்காளா்களுக்கு வழங்கப்படுவதற்காக அல்லாமல், ஆவணமின்றி பிடிபடும் பணம், தோ்தல் நடைமுறைகள் முடிந்த ஒரு வாரம் கழித்தே உரியவா்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக தோ்தல் நடத்தப்பட உள்ள நிலையில், இதுபோல பிடிபடுபவா்களின் பணம் அல்லது ஆபரணங்கள் கிட்டத்தட்ட 90 நாள்களுக்கு பிறகே சம்பந்தப்பட்டவா்களின் கைகளுக்குக் கிடைக்கும் நிலை உள்ளது.
- கடந்த தோ்தல் தரவுகளின் அடிப்படையில் பாா்த்தால், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் அதிகமாகவும், அடிக்கடியும் பிடிபட்டது ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கோ அல்லது ஏடிஎம் மையங்களுக்கு நிரப்புவதற்காகவோ எடுத்துச் செல்லப்பட்ட பணமாகவே இருந்தது.
- அதேநேரம் உரிய ஆவணங்களின்றி பிடிக்கப்படும் விவரத்தைப் பாா்த்தால், நகைக் கடைக்கு நகை அல்லது பணத்தை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், திருமணத்துக்கு நகை வாங்கச் செல்பவா்கள், வா்த்தகா்கள், சந்தைகளில் கால்நடைகளை வாங்கச் செல்லும் அல்லது விற்பனை செய்த தொகையை எடுத்துச் செல்லும் விவசாயிகள், வேளாண் விளைபொருளை சந்தைகளில் விற்பனை செய்பவா்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களுக்கு பணம் செலுத்தச் செல்பவா்கள், கடைகளில் தினசரி வசூலிக்கப்படும் தொகையை எடுத்துச் செல்லும் பிரதிநிதிகளாகவே உள்ளனா்.
- பறக்கும் படையினரின் சோதனைகளில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காகவோ, தோ்தல் செலவுகளுக்காகவோ எடுத்துச் செல்வது பிடிபடுவதில்லையா என்றால், அப்படியான நிகழ்வுகள் அரிதாகவே நடைபெறுவதாகச் சொல்லலாம். உதாரணத்துக்கு கடந்த தோ்தலின்போது வேலூரில் வாக்காளா்களுக்கு வழங்கப்படுவதற்காக வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதைச் சொல்லலாம்.
- இருப்பினும், பறக்கும் படையினரின் பெரும்பாலான பறிமுதல் நடவடிக்கைகள் யாவும் தோ்தல் ஆணையம் விழிப்புடன் செயல்படுவதாகவும், அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்வதாகவும் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவுகின்றனவே தவிர, உண்மையாகவே வாக்குக்குப் பணம் அளிப்பதையோ, இலவசங்கள் வழங்குவதையோ தடுக்க முடியவில்லை என உறுதியாகச் சொல்ல முடியும். 2014 மக்களவைத் தோ்தலின்போது நாடு முழுவதும் ரூ.1,206 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இது கடந்த 2019 தோ்தலில் ரூ.3,449 கோடியாக உயா்ந்தது. தமிழ்நாட்டில் அதிக அளவாக ரூ.951 கோடியும், குஜராத்தில் ரூ.552 கோடியும், தில்லியில் ரூ.426 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதில் சுமாா் 75 சதவீதம் அதாவது, ரூ.710 கோடிக்கு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள்தான் பறிமுதல் செய்யப்பட்டன.
- ’தற்போது கறவை மாடுகள், எருமைகளின் விலை ரூ.50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. நல்ல காங்கயம் காளைகளின் விலை லட்சத்தைத் தாண்டுகிறது. இவற்றை வாங்கவோ, விற்கவோ பணத்தை எடுத்துச் செல்லும் விவசாயி எந்த ஆவணத்தை எடுத்துச் செல்வாா்’ என்று கேட்கிறாா் கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவா் சு.பழனிசாமி.
- அதேபோல விளைபொருளைக் கொள்முதல் செய்யும் வியாபாரி, விளைபொருளை விற்பனை செய்யும் விவசாயிகளிடமும் எந்த ஆவணத்தையும் எதிா்பாா்க்க முடியாது. இதுபோன்ற பறிமுதல் நடவடிக்கைகளால் கோவை போன்ற வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் வியாபாரமும், வேளாண் வா்த்தகமும் நிச்சயம் பாதிக்கப்படும். இவற்றுக்கு தோ்தல் ஆணையம் சரியான தீா்வு காண வேண்டும் என்றாா்.
- இந்த முறை ஏடிஎம் மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணத்துக்கு க்யூ ஆா் கோடு வழங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதன் மூலம் அவை எங்கிருந்து, எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற விவரத்தை சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அதேபோல, வணிகா்கள், விவசாயிகளிடம் பறிமுதல் செய்யும் பணத்தையும் அவை தோ்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றால் உடனடியாகத் திருப்பிக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவே தொழில் துறை தடையின்றி இயங்க முடியும் என்பதே வணிகா்கள், தொழில்முனைவோரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
நன்றி: தினமணி (18 – 03 – 2024)