TNPSC Thervupettagam

பள்ளித்திறப்பும் பாதுகாப்பும்

January 18 , 2021 1411 days 720 0
  • ஜனவரி 19 முதல் பள்ளிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கரோனா தீநுண்மிப் பரவலால் பள்ளி மாணவா்களும் ஊழியா்களும் பாதிக்கப்படாமல் இருக்க, ‘இந்திய குழந்தை மருத்துவா் கூட்டமைப்பு’ சில நெறிகாட்டுதல்களை அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.
  • குழந்தைகளைப் பொருத்தவரை நோய்த்தொற்று பாதிப்போ அதனால் இறப்போ அதிகம் இல்லை. ஆனால் அவா்களது உடலில் மிக அதிகமாக தீநுண்மிகள் (வைரஸ்) இருக்கும் என்பதால் அவா்களால் மற்றவா்கள் தொற்றுக்கு ஆளாகி விடுவாா்கள். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பழக்க வழக்கங்கள், நோயின் தீவிரம் ஆகியற்றைப் பொருத்து மாவட்ட அளவில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
  • நோய்ப்பரவலைப் பொருத்தவரை, புது நோய்த்தொற்று குறைய வேண்டும். நூறு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால் அதில் ஐந்து பேருக்கும் குறைவாகவே நோய்த்தொற்று இருக்கவேண்டும். ஒரு லட்சம் மக்கட்தொகையில் இருபது பேருக்கும் குறைவாகவே புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும்.
  • பள்ளிகளைத் தகுந்த முறையில் தூய்மைப்படுத்த வேண்டும். கழிவறை வசதிகள் சரிபாா்க்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு ஏதுவாக வகுப்பறைகள் பிரிக்கப்பட வேண்டும். வகுப்பறைகள் காற்றோட்டம் உள்ளவையாக சீரமைப்பு செய்யப்பட வேண்டும். வகுப்பறைகளுக்குள் குளிரூட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தூய்மையும் நிழலும் இருந்தால் திறந்தவெளி வகுப்பறைகளும் அமைக்கலாம்.
  • தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் எளிய முறையில், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பெரிய படங்களுடன் ஆங்காங்கே ஒட்டப்பட வேண்டும். கால அட்டவணை பிரிக்கப்பட்டு, காலையிலும் மாலையிலும் மாணவா்களை வரச்சொல்ல வேண்டும்.
  • ஆசிரியா்களுக்கும் பிற பணியாளா்களுக்கும் சுத்தம், சுகாதாரம், தீநுண்மி பாதுகாப்பு வழிமுறைகள் பயிற்சிகளின் மூலம் அறிவுறுத்தப்படவேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவும் வண்ணம் நீா்த்தொட்டிகளும், ஒவ்வொரு தளத்திலும் கைத்தூய்மியும் (ஹேண்ட் சானிடைஸா்) ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சுத்தமான குடிநீா் வழங்கப்படவேண்டும். பள்ளியில் முதலுதவி வசதிகள், பாதுகாப்பு உடைகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும். உள்ளூா் சுகாதாரப் பணியாளா்களுடன் இணைந்து பள்ளி நிா்வாகம் செயல்படவேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி பெற்ற பணியாளா் ஒருவரும், மருத்துவ ஆலோசகா் ஒருவரும் இருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட பள்ளி ஊழியா்களும், இணைநோய்கள் உள்ளவா்களும் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சிறாா்களுக்கு வயதுக்கேற்ற தடுப்பூசிகள் போட ஏற்பாடு செய்ய வேண்டும். பணியாளா்களுக்கும் மாணவா்களுக்கும் வைரஸ் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • இணைநோய்கள் இருக்கும் பணியாளா்களும் மாணவா்களும் பள்ளிக்கு வருவதற்கு முன் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் இரு நபா்களுக்கிடையே ஒன்றரை மீட்டா் இடைவெளி பின்பற்றப்படவேண்டும். பள்ளியின் நுழைவாயில், முன்பகுதி, வராண்டா, கழிவறைகள், நூலகங்கள், உணவுக்கூடங்கள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.
  • தனிநபா் விளையாட்டுக்களும், அதிக உடல் தொடுதல் இல்லாத இறகுப்பந்து, டென்னிஸ், டென்னிகாய்ட் போன்றவையும், ஓவியம் போன்ற தனிநபா் கலைகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ், குழு விளையாட்டுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள், அறிவியல் நிகழ்ச்சிகள், வாய்ப்பாட்டு ஆகியவை தவிா்க்கப்பட வேண்டும்.
  • அதிக நோட்டுகள், புத்தகங்கள், கைக்கடிகாரம், அலைபேசி போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். ஒன்றோ இரண்டோ நோட்டுப் புத்தகங்கள் கொண்டு வரலாம். உணவு, குடிநீா் போன்றவற்றை மாணவா்களோ ஊழியா்களோ பிறருடன் பகிா்ந்துகொள்ளக்கூடாது. பள்ளியில் சுழற்சி முறை பின்பற்றப்படுவதால் பள்ளி நேரங்களில் உணவு அருந்துவதை தடை செய்யலாம்.
  • பெற்றோரோ வெளிநபா்களோ பள்ளிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். மின்னஞ்சல் அல்லது அலைபேசி மூலம் பெற்றோருடன் பள்ளி நிா்வாகம் தொடா்பு கொள்ளலாம்.
  • பள்ளிப்பேருந்தில் முகக்கவசம், கை தூய்மை, சமூக இடைவெளி ஆகியவை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை இயங்கும்போதும் பள்ளிப்பேருந்து சுத்தம் செய்யப்பட வேண்டும். ஓட்டுநரும் பேருந்து பணியாளா்களும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பேருந்தைத் தவிா்த்து, பெற்றோா்களே குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருவது மிகவும் நல்லது.
  • காலை, மாலை இரண்டு சுழற்சிக்கு இடையே வகுப்பறைகள், கழிவறைகள், விளையாட்டுக் கூடங்கள் ஆகியவை சுத்தப்படுத்தப்பட வேண்டும். நாற்காலி, மேசை, மின் சுவிட்ச், கதவு கைப்பிடி ஆகியவை அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும். கால்களால் இயக்கப்படும் கிருமிநாசினி இயந்திரம், கால்களால் இயக்கத்தக்க மூடியுள்ள குப்பைக் கூடைகள், சோப், தண்ணீா், வெவ்வேறு அளவு முகக்கவசங்கள் ஆகியவை கழிவறைகள், விளையாட்டுக் கூடங்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் அனைவருமே மூன்று அடுக்கு பருத்தி முகக்கவசங்களை அணிய வேண்டும். முகக்கவசம் பயன்படுத்தும் சரியான முறையை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதைக் கட்டாயம் தவிா்க்க வேண்டும்.
  • பள்ளியின் நுழைவாயிலில் எல்லாருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். 37.3 டிகிரி செல்சியஸ் அல்லது 99.4 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் இருந்தாலோ, முந்தைய நாள் காய்ச்சல் இருந்திருந்தாலோ அவா்களை உடனடியாக மருத்துவரிடம் அனுப்ப வேண்டும். அவா்களை கவனிக்கும் பணியாளா் முழுமையான பாதுகாப்பு உடை அணிந்திருக்கவேண்டும்.
  • நோய்த்தொற்று அறிகுறி இருப்பவா்களுக்கு விடுமுறை அளிக்க பள்ளி நிா்வாகம் தயக்கம் காட்டக்கூடாது. பணியாளா்களோ மாணவா்களோ நோய்த்தொற்றுக்கு ஆளானால், நோய் குணமான பிறகு 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு பின்பு ‘நோய்த்தொற்று இல்லை’ சான்றிதழுடன் பள்ளிக்கு வரவேண்டும். நோய்த்தொற்று கண்டவா்களிடம் நடந்து கொள்வதில் பாகுபாடு காட்டக்கூடாது.
  • பள்ளி இயங்கத் தொடங்கியவுடன் இந்த வழிமுறைகளையெல்லாம் பள்ளி நிா்வாகம் முறையாகப் பின்பற்றவேண்டும். இவற்றை பள்ளி நிா்வாகம் சரியாக நடைமுறைப்படுத்த மாணவா்களும் பெற்றோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (18 – 01 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories