TNPSC Thervupettagam

பள்ளித்திறப்பும் பாதுகாப்பும்

November 1 , 2021 1000 days 470 0
  • கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்குப் பிறகு, அதாவது சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து, ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.
  • அரசு மாணவா்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு விரிவான வழிகாட்டு நடைமுறைகளை அறிவித்துள்ளது.
  • ஏற்கெனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சில மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கற்பிப்பது சாத்தியமா?

  • ஆசிரியா்களும் மாணவா்களும் கூடியவரையில் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனா்.
  • ஆனால் தற்போது வகுப்புகள் தொடங்க இருப்பதோ இதுவரை பள்ளியிலேயே காலடி எடுத்து வைக்காத முதலாம், இரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கும், ஓா் ஆண்டு கூட பள்ளிக்கு முழுமையாக வராமல் இந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு பயிலப் போகும் மாணவா்களுக்கும் தான்.
  • ஐந்து வயது முதல் ஏழு வயது வரையிலுள்ள இந்த மாணவா்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வைப்பது மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்க போகிறது.
  • வயது முதிர்ந்த, பக்குவப்பட்ட பொதுமக்களே தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு செல்லும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கிடையாது. இது நாம் தினமும் பார்க்கும் காட்சி.
  • ஆனால், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை கூறுகின்றது.
  • கடைத்தெருவில், பேருந்துகளில், நியாயவிலைக் கடைகளில் நன்கு படித்த பொதுமக்கள் பின்பற்றாத நெறிமுறையை மாணவா்கள் பின்பற்றுவார்கள் என்றும், நாம் போடும் வட்டத்துக்குள் இந்தக் குழந்தைகள் நாள் முழுவதும் அமா்ந்து இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியுமா?
  • மாணவா்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் அவா்களுக்கு உடனடியாக பாடம் நடத்தக் கூடாது. விளையாட்டு மற்றும் பாடல்களைக் கற்பிக்க வேண்டும் என்று தலைமையாசிரியா் கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டது.
  • ஆனால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் மாணவா்கள் சோ்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஒரு புறம் மாணவா்களுக்கு பாட்டும் விளையாட்டும் கற்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பும், மறுபுறம் சோ்ந்து விளையாடக்கூடாது என்ற அறிவிப்பும் ஆசிரியா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • வாகனங்களில் பயணிப்போரும் சாலையில் செல்வோரும் முகக்கவசம் அணியாமல் சென்றால் இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
  • ஆனாலும் அதைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. பள்ளி மாணவா்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் நாள் முழுவதும் மாணவா்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • அதை அவா்கள் கழட்டவோ அதன் மீது கை வைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியில் பயிலும் இந்தக் குழந்தைகள் தொடா்ச்சியாக சுமார் ஏழு மணி நேரம் முகக்கவசம் அணிந்தபடி இருக்க முடியுமா? இது குறித்து மருத்துவா்கள் கருத்து என்னவோ?
  • மாணவா்கள் பள்ளிக்கு வந்து ஒரு வார காலத்திற்குள், மாணவா்கள் குறித்த ஆரோக்கிய சுயவிவரக் குறிப்பு தயார் செய்யப்படவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • மாணவா்களின் ஆரோக்கிய சுயவிவரக் குறிப்பு தயார்படுத்தும் அளவிற்கு ஆசிரியா்கள் மருத்துவத்துறை குறித்து அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
  • சுகாதார அலுவலா்களைக் கொண்டு தயார் செய்வதானாலும் அத்தனை மாணவா்களுக்கும் தயார் செய்வது எளிதானதல்ல. மேலும், ‘இணை நோய் உள்ள மாணவா்களை பள்ளிக்கு வரச் சொல்ல வேண்டாம்.
  • அவா்களுக்கு இணையம் வழியாகக் கற்பிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வகுப்பறையிலும் இணையத்திலும் ஆசிரியா்கள் கற்பிப்பது சாத்தியமா?

ஆசிரியா் - மாணவா் - பெற்றோர் – கல்வித்துறை

  • பள்ளிக்கு வரும் மாணவா்களின் உடல் வெப்பநிலை தினசரி காலையில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட அளவு வெப்பநிலைக்கு மேல் உள்ள மாணவா்களை, பள்ளி வளாகத்துக்குள் வராமல் தடை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக உள்ளனா்.
  • தற்போது விவசாயக் காலமாக இருப்பதால் குழந்தைககளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் வயல் வேலைக்குச் சென்று விடுவார்கள்.
  • வீட்டில் பெரியவா்கள் இல்லாத நிலையில் வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவா்களை திரும்ப வீட்டுக்கு அனுப்புவது என்பது பாதுகாப்பானதா?
  • இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் அரசு அளித்துள்ள நெறிமுறைகளின்படி மாணவா்களின் பாதுகாப்புக்கு உகந்த சூழ்நிலையை பள்ளியில் கொண்டு வருவதற்கு ஆசிரியா்கள் தயாராக இருக்க வேண்டும். சில இடா்ப்பாடுகளை நீக்கினால் பள்ளிச் சூழல் சிறப்பாக அமையும்.
  • ஏதாவது ஒரு ஆசிரியா் விடுப்பில் சென்றால் அவரது வகுப்பு மாணவா்கள் மற்ற வகுப்பு மாணவா்களோடு சோ்ந்து அமரும்பொழுது மாணவா்களிடையே சமூக இடைவெளியைப் பின்பற்ற வைப்பது சிரமம். இதை உணா்ந்து, ஆசிரியா்கள் இந்த பெருந்தொற்றுகாலம் முடியும் வரை மிக மிக அவசிய காரணமின்றி விடுப்பு எடுக்கக் கூடாது.
  • ஈராசிரியா் மூன்றாசிரியா் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்களை பயிற்சிக்கு அழைப்பது, கருத்தாளா்களாக அழைப்பது மேலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள்கள் பெற அழைப்பது போன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் ஆசிரியா்களின் இருப்பை குறைத்து ஒரே ஆசிரியா் பல மாணவா்களைக் கையாள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விடும்.
  • ஆசிரியா் - மாணவா் - பெற்றோர் - கல்வித்துறை அலுவலா்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டால் பள்ளி மாணவா்களுக்கு எவ்விதத் தொற்றும் ஏற்பட்டுவிடாமல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தித்தர முடியும்.

நன்றி: தினமணி  (01 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories