- சமீபத்திய காணொளி ஒன்று. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள இளநிலைத் தொடக்கப் பள்ளி அது. அதன் நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர், மாணவர் பேரவைத் தேர்தலில், தலைவர் பதவிக்கு மாணவர்களால் தேர்வு செய்யப்படுகிறார். ‘45 வாக்குகள் பெற்று பள்ளி மாணவர் தலைவராகத் தேர்வுzசெய்யப்பட்டுள்ளார்’ என்ற அறிவிப்பைக் கேட்டதும், அந்த ஒன்பது வயதுக் குழந்தை வெளிப்படுத்தும் உணர்வுகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
- ஒன்பது வயதில் வெற்றிமாலை சூட்டப்படும்போது பெருகிவரும் ஆனந்தக் கண்ணீர், மார்போடு ஆரத்தழுவி அவனது வெற்றிக்களிப்பைத் தானும் பகிர்ந்துகொள்ளும் தலைமை ஆசிரியர், அடுத்த கணமே தலைமை ஏற்கத் தயாராகும் அந்த மாணவன், அதனை ஆர்ப்பரித்து ஏற்றுக் கொள்ளும் சக மாணவர்கள்.
- நான்காம் வகுப்புவரை மட்டுமே உள்ள பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தலா? ஆச்சரியம் மேலிட, கேரளத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் இயக்கத்தின் செயல்பாட்டாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினேன்.
பள்ளியில் தேர்தல்
- கேரளத்தில் கல்வியாண்டு தொடங்கியதும் இயல்பாகவே மாணவர் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். தொடக்க இளநிலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெறும். கற்றல், கற்பித்தலில் முதல் செயல்பாடாக அது நடைமுறைப் படுத்தப்படுகிறது.
- தேர்தல் அறிவிக்கை, மனுத்தாக்கல், திரும்பப் பெறுதல், குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப் படும் வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்களை முன்மொழிதல்-வழிமொழிதல், வாக்குப்பதிவு; தேர்தல் நாளன்று, வாக்குச் சாவடி அமைத்தல், வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு என ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பள்ளி அளவிலான தேர்தல்களில் கறாராகப் பின்பற்றப்படுகின்றன.
- மாணவர் பேரவையின் தலைவர் ஆணாக இருந்தால், துணைத் தலைவர் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற பாலினச் சமத்துவமும் கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு, பள்ளி அமைந்துள்ள நகரம்/ கிராமத்தில் ஊர்வலம் செல்லுதல், வெற்றிப் பேரணி வரை நடைபெறுகிறது.
- இப்படியாக ஜனநாயகத்தின் தேர்தல் நடைமுறைகள், அதன் விழுமியங்கள், மாண்புகள் - குறிப்பாக, ஜனநாயக வழிமுறைகள் ஆகியவற்றைப் பிள்ளைப் பருவம் முதல் குழந்தைகள் அங்கு பயின்று வருகின்றனர்.
தேர்தலும் அரசியலும்
- கேரளத்தின் பள்ளிகளில் 80%, அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும்தான்; பெரும்பான்மை மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளிகளில்தான் இத்தகைய தேர்தல்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.
- பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சில இடங்களில் ஏதேனும் சின்னச் சின்ன கைகலப்பு, சண்டைச் சச்சரவு ஏற்பட்டுவிடும். அதற்காகத் தேர்தல்கள் தேவையற்றவை என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கல்வியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மத்தியிலான தேர்தல்வழி ஜனநாயகக் கற்றல் கற்பித்தலும் தொடர வேண்டும் எனக் கேரளச் சமூகம் கருதுகிறது.
- மாணவர் பேரவைத் தேர்தலில் அரசியல் கலப்பு கூடாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகள் வரையே, மாணவர்களுக்கு அரசியல்சார்பு இல்லாமல் தேர்தல்கள் நடைபெறுகின்றன. உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர் சங்கங்கள் வலுவாகத் தலைதூக்கிவிடுகின்றன. இதனால், மாணவர்களின் சங்கம் சார்ந்த அரசியல் அமைப்புகளின் தலையீடுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.
- தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தத் தேர்தல் நடைமுறைகளைப் புரிந்துகொள்கிறார்களா என்று வினவியபோது, ‘ஏன் புரிந்துகொள்ள முடியாது?’ என்ற கேள்வியே பதிலாக வந்தது. மற்ற தேர்தல்களைப் போல் தாங்கள் பயிலும் பள்ளியில், தேர்தல் ஜனநாயக நடைமுறைகளைப் பரிசோதித்துப் பார்த்தல், ஜனநாயக விழுமியங்களையும் மாண்புகளையும் மதித்து நடத்தல் போன்றவற்றைப் பள்ளியிலேயே கற்றுக்கொள்கின்றனர். பள்ளி சார்ந்த தேவைகளை ஜனநாயக முறையில் நிறைவு செய்துகொள்ளல் இதன் சிறப்பம்சம் என அவர்கள் கருதுகின்றனர்.
‘கேரள மாதிரி’
- சிறு விஷயங்களில்கூடக் கேரள மக்கள் சமூக ஒழுங்கைக் கடைப்பிடிப்பதைப் பார்க்க இயலும். ஏன், எப்படி என்று கேள்வி கேட்பதைப் பார்க்க முடியும். இத்தகைய பண்புகள் கேரள மக்களிடம் பின்னிப் பிணைந்து வளர பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை நடைமுறைப்படுத்தப்படும் ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தேர்தல் நடைமுறைகளால் பள்ளிக் கல்வியின் தரம் பாதிக்கப்படவில்லை. மாறாக, தரம் மேம்பட இத்தகைய தேர்தல்கள் துணைபுரிகின்றன.
- குடிநபர்களாகத் தழுவிக்கொள்ள வேண்டிய ஜனநாயக விழுமியங்கள், மாண்புகள் ஆகியவற்றைச் செயல்வழிக் கற்றலாகக் கல்வி நிலையங்களில் முன்வைக்கப்படும் இந்தத் தேர்தல் நடைமுறைகள் இளம் பருவத்திலேயே அவர்களிடம் ஏற்படுத்திவிடுகின்றன.
- மாணவர் பேரவைத் தேர்தல்களின் நன்மைகளை அனுபவித்துவரும் கேரளச் சமூகம், கல்வித் துறை, ஆசிரியர்கள், சிவில் சமூகம் ஆகியவை இதன் அத்தியாவசியத்தை உணர்ந்த பின்னரே கல்வி முறையின் ஒரு பகுதியாக மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளன. இத்தகைய ஆரோக்கியமான செயல்பாடுகள் தேசம் முழுவதும் பரவ வேண்டும். கேரள பள்ளி, கல்லூரி நடைமுறையில் உள்ள தேர்தல் மாண்புகள், இந்தியா முழுவதும் உணரப்பட முயற்சிகள் மேற் கொள்ளப் பட வேண்டும்.
நன்றி: தி இந்து (25 – 07 – 2023)