TNPSC Thervupettagam

பள்ளி மேலாண்மைக் குழுக்கள்: பின்னடைவுகள் களையப்பட வேண்டும்

January 23 , 2024 218 days 149 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் அக்கறையோடு செயல்படும் ஒரு சில உயர்நிலை அதிகாரிகள் சுழற்றிய சாட்டையின் விளைவாக, 2021 முதல் தற்போது வரை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாகச்செயல்பட்டுவருகின்றன.
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அயராத முயற்சியால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள்தேர்வு செய்யப்பட்டது தொடங்கி, ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாதாந்திரக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டுஇருக்கின்றன. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும் பொறுப்புடைய கல்வித் துறை அலுவலர்களுக்கும் தொடர் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் தேவைகளைக் கண்டறிவதோடு, அவற்றைச் சரிசெய்வதற்கான ஆக்கபூர்வச் செயல்பாடுகளையும், இடைநின்ற மாணாக்கர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் இணைக்கும் சிறப்பு முயற்சிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
  • அத்துடன், 2023 டிசம்பர் 22 அன்று தமிழ்நாடுஅரசு வெளியிட்ட அரசாணை (G.O (Ms) No.245)மூலம் தமிழ்நாட்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்களால் அடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கும், இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டுமாநில அளவிலான கண்காணிப்புக் குழு’ (SLMC) ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறையின் அரசுச் செயலர் இதன் செயல் உறுப்பினராகவும், 13 துறைகளின் அரசுச் செயலர்கள் இதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நடைபெறாத கூட்டங்கள்

  • இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான சூழலில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஒரு பின்னடைவை இப்போது எதிர்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் நடத்துவதில் சிரமம் இருப்பதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறைகூட்டம் நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த போராட்டக் கோரிக்கைகளில் ஒன்றாகத்தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாதம் ஒருமுறை நடந்தகூட்டங்களின் விளைவாகவே பல்வேறு அடிப்படைமாற்றங்கள் நடந்து, பள்ளிக் கல்வியின் அச்சாணியாக இம்மேலாண்மைக் குழுக்கள் செயல்படத் தொடங்கின. ஒருசில இடங்களில் ஏற்பட்ட கசப்பானநிகழ்வுகளை முதன்மைப்படுத்தியே ஆசிரியர் சங்கங்கள் மேற்சொன்ன கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது ஏமாற்றத்தைத் தருகிறது.
  • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 5 அன்று நடந்திருக்கிறது. அரசியல் அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது அவசியம். பள்ளி வளர்ச்சி என்பது அனைவரது கூட்டுப்பொறுப்பாக மாறியிருக்கிறது. எளிய மக்கள் அரசுப் பள்ளிகளின் மீது உரிமை கொண்டாடவும், அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டார்கள். ஜனநாயகம் கொண்ட உயிர்த்துடிப்பான கட்டமைப்பாகப் பள்ளிமேலாண்மைக் குழுக்கள் படிப்படியாக மாறி வருவதை கண்கூடாகக் காண்கிறோம்.

பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்

  • இச்சூழலில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் இதற்கும் வழங்கப்பட வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் சார்பில் ஒரு பெண்தலைவராகத் தொடர்ந்து தேர்வுசெய்யப்பட வேண்டும். அது வெறும் சடங்காக, பெயரளவிலான நியமனமாக இல்லாமல், விருப்பு வெறுப்பின்றி, உண்மையான ஜனநாயகத் தேர்தலாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

எளிய பெண்களின் ஆளுமையில் அரசுப் பள்ளிகள் வளர்ச்சி காண விழைவது எவ்வளவு பெரிய கனவு

  • ஒரு பள்ளியின் வளர்ச்சி வெறும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்தது மட்டுமல்ல. பலதுறைகளின் முழுமையான ஆதரவும், குடிமைச் சமூக அமைப்புகளின் அக்கறையுள்ள செயல்பாடுகளும் கூடுதலாக இதற்குத் தேவைப்படுகின்றன. இது சவால் நிறைந்த கூட்டுப் பணி. எனவே பிடிவாதப் போக்கை விடுத்து, பள்ளித் தலைமையாசிரியர்களும் மேலாண்மைக் குழுக்களும் இணைந்து பயணிப்பது அவசியம். அப்போதுதான் மிகப் பெரிய மாற்றங்கள் சாத்தியப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories