- தமிழ்நாட்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையான வகையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு ஓராண்டுஆகிறது. கல்வித் தளத்தில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இக்குழுக்கள், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கல்வித் தரத்தின்மீதுபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
போதாமைகள்:
- அதேவேளை, இன்னும் பல பள்ளிகளில் இக்குழுக்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. 20 பேர் கொண்ட குழுவில் பெற்றோர்களின் எண்ணிக்கையே அதிகம் (15) என்றாலும், இக்குழுவின் தன்மைகளையும் உரிமைகளையும் அவர்கள் முழுமையாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
- பல்வேறு தளங்களில் அனைவருக்குமான பயிற்சிகளைக் கல்வித் துறை நடத்தினாலும், ஒவ்வொரு மாதக் கூட்டத்துக்கும் வழிகாட்டுதல் அறிக்கை அனுப்பப்பட்டுக் கண்காணிக்கப் பட்டாலும், ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் முழுமையாக அவை சென்று சேர்வதில்லை.
- இன்னும் சம்பிரதாயமாகக் கூட்டங்களைக் கூட்டி, வருகைப் பதிவைச் செயலியில் பதிவேற்றிப் பேசிவிட்டுக் கலைந்துசெல்லும் நிலையே நீடிக்கிறது. சமச்சீர்க் கல்வி என்று சொல்லப் பட்டாலும் அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக்கூடிய கல்வித் தளமாக அரசுப் பள்ளிகள் இல்லை.
- அடித்தட்டு மக்களைப் பெற்றோராகக் கொண்ட பள்ளிகளாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. அவர்களுக்கான உரிமைகளை முறையாகப் பயிற்றுவித்து, பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்புகளைச் சீர்ப்படுத்த வேண்டும். குழுப் பொறுப்பாளர்களை அழைத்துக் கூட்டம் நடத்துவதை இன்னும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். கூடவே, இன்னொரு முக்கிய விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களின் முக்கியத்துவம்:
- மாணவர்களின் தேவைகளை, சிக்கல்களைத் தெரிந்துகொள்ளக் கடந்த காலங்களில் ‘மாணவர் மனசு’ என்ற பெட்டிகள் அனைத்துப்பள்ளிகளிலும் வைக்கப்பட்டன. ஆனால், பலபள்ளிகளில் அவை துருப்பிடித்துக் கேட்பாரின்றிக் கிடக்கின்றன. இந்நிலை மாறவேண்டும். பள்ளிகளின் தேவைகளை மாணவர்களே நேரடியாகத் தெரிந்துவைத்திருப்பார்கள். இப்படியான சூழலில், மாணவர்களுக்கான கோரிக்கை அரங்கு தேவைப்படுகிறது.
- அது மாணவர் நாடாளுமன்றமாக இருக்கலாம் அல்லது மாணாக்கர் பேரவையாக இருக்கலாம். கடந்த கல்வியாண்டின் மறுகட்டமைப்பின்போதே மாணாக்கர் பேரவைபற்றி பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
- ஆசிரியர்களையும் பெற்றோரையும் கொண்ட பள்ளி மேலாண்மைக்குழுவும், மாணவர்களைக் கொண்ட மாணாக்கர்பேரவையும் இணைந்து செயல்படும்போது, பள்ளிக்கூடத்தின் தேவைகள் குறித்த முழுமையான பார்வை கிடைக்கும். கட்டமைப்பிலும் நிர்வாகத்திலும் கல்வித் தரத்திலும் பள்ளிகள் விரைந்து மேம்படும்.
- குழந்தைகளின் உரிமைகள், மாணவர் நலன் என்ற புரிதலுடன் முறையாக வழிகாட்டி நெறிப்படுத்த, நிர்வாகத் திறன் கொண்ட, குழந்தைகள் உளவியல் பயிற்சி கொடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவருக்கும் இக்குழுவில் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும். இப்படி முறையாகத் திட்டமிட்டால், அரசுப் பள்ளிகளிலும் சிறப்பான கல்வித் தரத்தை உறுதிப்படுத்த முடியும்.
நன்றி: தி இந்து (14 – 06 – 2023)