- பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்புக்காக ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாக, அது தொடர்பாகக் கலந்துரையாடப் பெற்றோர்களுக்கான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன?
மாற்றத்துக்கான கருவி:
- ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் உன்னதமான வேலையை அரசுப் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்குகிறது, ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்கிற தனித்துவமான கட்டமைப்பு.
- ஓர் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெண்கள் சுயஉதவிக் குழு, கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் அரசுப் பள்ளிக்கூடத்தை மேலாண்மை செய்ய இணைப்பதே பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்பம்சம்!
- கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சட்டப்படி வந்திருந்தாலும், 2021 வரை முறையற்ற வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அவை செயல்பட்டுக்கொண்டிருந்தன.
- 2022இலிருந்து தற்போதைய தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பள்ளிக்கூடத்தில் அதிகாரப் பரவலாக்கத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியும், தொடர்ச்சி கொடுத்தும், பல்வேறு முன்னேற்றமான மாற்றங்களை நிகழ்த்திவருகின்றன.
- அதன் அடுத்த மறுகட்டமைப்புக்கான தேர்தல், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முறையே 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
பெற்றோர் சந்திப்பு:
- அதற்கு முன்பாக இன்று (ஆகஸ்ட் 2), ஒரே நாளில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்து, அனைத்துப் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்வுக்காகத் தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் காணொளி வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
- வெள்ளிக்கிழமை வேலை நாள்தான் என்றாலும், பெற்றோர்கள் தங்களது வேலைகளை முன்கூட்டியே முறைப்படுத்திக்கொண்டு, முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும். இது நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்குப் போடும் அடித்தளம் என்பதால், விடுமுறை எடுத்துக்கொண்டாவது இதில் கலந்துகொள்ள வேண்டும்.
- பள்ளிக்கூடத்தை நோக்கிய பயணமாக, ‘அனைத்து அரசுப் பள்ளி பெற்றோர்களும் அரசுப் பள்ளிகளை நோக்கி!’ என்று விழாக்கோலம் பூண வேண்டும். இதைக் கல்விக்கான ஊர்த் திருவிழாவாக ஏற்று, அந்தந்த ஊர்களே சிறப்பாக முன்னெடுக்க வேண்டும். ஊருக்கும் பள்ளிக்குமான இணைப்பு இதன் மூலம் பலப்பட வேண்டும்.
- இந்த நிகழ்வில் பங்கெடுப்பதன் மூலமாகச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியிலும், பள்ளிக்கூடத்திலும் பெற்றோருக்கு இருக்கும் உரிமைகள் என்ன, அவற்றை எவ்வாறெல்லாம் செயல்படுத்துவது என்பது தெளிவாகப் புரியவரும்.
செய்ய வேண்டியவை:
- அத்துடன் நடக்க இருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான தேர்தலிலும் பெற்றோர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். அக்கறையான, சிறப்பான பெற்றோராக நம்மை நாமே கருதினால், கண்டிப்பாகப் பள்ளிக்கூடத்தின் பள்ளி மேலாண்மைக் குழுவில் நாமும் இடம்பெற வேண்டும்.
- ஒருவேளை நமக்கு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால், அர்ப்பணிப்பு உணர்வுமிக்க, விவரமான, மன உறுதி மிக்க, குறிப்பாக, பள்ளிக்கூடத்துக்கு நேரத்தை ஒதுக்கக்கூடியவர்களைக் கண்டறிந்து, அந்த மறு கட்டமைப்பில் அவர்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும், பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
- கூட்டத்துக்கு வந்தவர்களை எல்லாம் பொறுப்புகளுக்கு அள்ளிப் போட்டுக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இந்த நிகழ்வுக்கு முன்பாகவே பெற்றோர்களுக்கான உரையாடல்களும் திட்டமிடல்களும் மிகவும் முக்கியம். சில ஊர்களில், உள்ளாட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அணுக்கமான பெற்றோர்களை மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாகவே பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அல்லது இவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெளிப்படையான ஜனநாயகத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கே முக்கியத்துவம்:
- பள்ளிக்கூடம் பெற்றோர்களுக்கான உரிமை பெற்ற இடம் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதில் பெற்றோர்கள்தான் தீர்மானிக்கும் ஆற்றல் என்பதை நிறுவ வேண்டும். எந்த அதிகார மையமும் இதில் தலையிட்டுத் தீர்மானிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களோடும், உள்ளாட்சி உறுப்பினர்களோடும், ஊர் மக்களோடும் இணக்கமான உறவைப் பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
- வகுப்பு வாரியாக 1-5, 6-8, 9-10, 11-12 பெற்றோர் உறுப்பினர்கள், சதவீதத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை நிலை எண்-144இல் வழிகாட்டி உள்ள வகையில் அனைத்து சமுதாய மக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், எவ்வித சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமளிக்காததையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பொறுப்புகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட நேர்ந்தால், கைகளை உயர்த்திப் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வை உறுதிப்படுத்தலாம்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த...
- கடந்த காலத்தில் போடப்பட்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டவை, நிலுவையில் உள்ளவை எனத் தொகுத்து, நிலுவையில் உள்ளவற்றையும், நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளையும் பட்டியலிட்டுப் புதிதாகப் பொறுப்பேற்கும் உறுப்பினர்களுக்கான கடமைகளாக முன்வைக்க வேண்டும். கடந்த காலப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அதற்கு உதவ வேண்டும்.
- பள்ளி மேலாண்மைக் குழுவில் தேர்ந்தெடுக்கப்படாத, அதேவேளை பள்ளிக்கூடத்தில் தமக்கான பணிகளைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பெற்றோர்களை ஐந்து துணைக் குழுக்களில் ஈடுபடுத்தி, அவர்களுடைய பங்களிப்பைப் பள்ளிக்கூடங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலமாக அரசுப் பள்ளிகளில் ஜனநாயகத்தைக் கட்டமைக்கிற வரலாற்று நிகழ்வில் நாம் பங்கேற்கிறோம் என்று பெருமிதம் கொள்வோம். நம் குழந்தைகளுக்கு அறம் சார்ந்த கல்விக் கட்டமைப்பை நிலைநாட்டுவோம்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 08 – 2024)