TNPSC Thervupettagam

பழங்குடிகள் இல்லாத வனம்

March 6 , 2019 2101 days 2155 0
  • பழங்குடிகளையும் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களையும் அவர்களின் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற வகைசெய்யும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. உலக அளவில் தலைசிறந்த உயிரியல், சூழலியல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு, இத்தீர்ப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு பின்னடைவு என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
  • இதன் காரணமாக, கடந்த நான்கு விசாரணைகளில் பங்கேற்காமல் தவிர்த்துவந்த மத்திய அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை நிறுத்திவைத்திருக்கிறது என்றாலும் அந்த உத்தரவைத் திரும்பப் பெறவில்லை. வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று மாநில அரசுகளிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
கிராம சபைக்கே அதிகாரம்
  • பல பத்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகுதான் ‘பழங்குடியினர் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக் கும்) வன உரிமைச் சட்டம், 2006’ இயற்றப்பட்டது. தலைமுறை தலைமுறையாக வனத்தில் வாழ்பவர்கள் வனச் சிறு மகசூலான சீமார் புல், தேன், நெல்லி, கடுக்காய், பூச்சக் காய், புளி, மூங்கில் (ஒரு முறை அறுவடை செய்தால் மீண்டும் விளையக்கூடியவை) போன்ற பொருட்களை அறுவடை செய்து பயன்படுத்திக்கொள்ளும் உரிமை, விவசாயம் செய்து வந்த வன நிலத்துக்கான உரிமை, சமூக வன ஆதார உரிமை என மூன்று வகையான உரிமைகளை இந்தச் சட்டம் பழங்குடி மக்களுக்கு வழங்குகிறது.
  • இந்த உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறை விதிகள் 2008, 2015-ம் ஆண்டுகளில் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு குறிப்பிட்ட வனப் பகுதியைப் பயன்படுத்தி வாழ்ந்துவருகிற பழங்குடி ஆண்கள், பெண்கள் அனைவரையும் உறுப்பினர்களாகக் கொண்ட கிராம சபை அமைக்கப்பட வேண்டும். அக்கிராம சபை 15 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட தலைவர், செயலாளரை உள்ளடக்கிய வன உரிமைக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவில் 5 பெண்கள் இடம்பெறுவது கட்டாயம். இதுவரை பழங்குடியினருக்கு எந்தச் சட்டமும் வழங்காத உரிமையை முதல் முறையாக இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
  • கிராம சபை உறுப்பினர்கள் தங்களது உரிமை குறித்த கேட்பு மனுக்களை வன உரிமைக் குழுவிடம் வழங்க வேண்டும். இக்குழு மேற்படி மனுக்களைப் பரிசீலித்து அதன் பரிந்துரைகளை கிராம சபைக்கு வழங்க வேண்டும். கிராம சபை கூடி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி உட்கோட்ட குழுவிற்கு அனுப்ப வேண்டும். இதற்குரிய வழிகாட்டுதலைப் பழங்குடி நலத் துறை செய்ய வேண்டும்.
உரிமைகளைத் தடுக்கும் முயற்சி
  • வன உரிமைச் சட்டமும் விதிகளும் வழங்கியுள்ள உரிமைகளைப் பழங்குடிகளுக்கு வழங்கக் கூடாது, இதனால் வனம் அழியும் என இச்சட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலர்கள், முன்னாள் ஜமீன்தார்கள், சில தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து வழக்கு தொடுத்தனர்.
  • இவ்வழக்கில், தள்ளுபடி செய்யப்பட்ட 18 லட்சம் கேட்பு மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும்படி கடந்த பிப்ரவரி 13-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால், தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், பிஹார் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 9,029 கேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
  • நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு பெற்ற சட்ட உரிமையை முழுமையாகப் பரிசீலிக்காமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்ததாகவே இத்தீர்ப்பு அமைந்துள்ளது. வனத்தை நம்பியே வாழ்ந்து வருகிற பல லட்சம் பழங்குடிகளை ஒரே உத்தரவில் வனத்தை விட்டு வெளியேற்றச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
  • வன உரிமைச் சட்டப்படி உட்கோட்டக் குழுவுக்கு கிராம சபை அனுப்பிய தீர்மானத்தின் மீது உட்கோட்டக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்கோட்டக் குழுவில், கோட்டாட்சியர், வனத் துறை அலுவலர், பழங்குடி நலத் துறை தாசில்தார், பழங்குடி பஞ்சாயத்து உறுப்பினர்கள் மூன்று பேர் இடம்பெற்றிருப்பார்கள். மூன்று உறுப்பினர்களில் கண்டிப்பாக ஒரு பெண் இடம்பெற்றிருக்க வேண்டும். கிராம சபை தீர்மானத்தை உட்கோட்டக் குழு விவாதித்து, அதை ஏற்று மாவட்ட அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும். தீர்மானத்தில் தெளிவின்மையோ குறைகளோ இருந்தால் அதைச் சரிசெய்து அனுப்பச் சொல்லி அத்தீர்மானத்தை கிராம சபைக்கே திருப்பியனுப்பி, தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமேயன்றி நிராகரிக்கக் கூடாது. வன உரிமைச் சட்டப்படி எந்த உட்கோட்டக் குழு உறுப்பினர் களுக்கும், மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களுக்கும் கேட்பு மனுக்களை நிராகரிக்க உரிமை கிடையாது.
  • எத்தனை இடங்களில் சட்டப்படி முறையாக கிராம சபைகள், வன உரிமைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை கேட்பு மனுக்கள் தீர்மானங்களாக உட்கோட்டக் குழுவுக்குச் சென்று விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன? இந்தக் கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்கவும் இல்லை. பதில் சொல்ல வேண்டிய, வாதாட வேண்டிய மத்திய அரசு வழக்குரைஞர்கள் யாருமே கடந்த நான்கு விசாரணைகளில் பங்கேற்கவும் இல்லை.
வனங்களை அழிப்பது யார்?
  • ஆங்கிலேயர்களின் வனக் கொள்ளைக்கு எதிராக முதல் சுதந்திரப் போரைத் தொடுத்தவர்கள் பழங்குடிகளே. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் காணிக்காரப் பழங்குடிகள் இறந்தவர்களை வனங்களில் புதைத்து, புதைகுழியின் மீது மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து இந்த மாமரம் எனது தாத்தா, இந்தப் பலாமரம் எனது அம்மா, இந்தக் கிராம்பு மரம் எனது குழந்தை என்று அனைத்து மரங்களையும் தங்களது மூதாதையர்களாகவும், வாரிசுகளாகவும் வணங்கிப் பாதுகாக்கும் கலாச்சாரத்தைப் பார்க்க முடிகிறது. இவர்களா வனத்தை அழிப்பவர்கள்?வனச் செல்வங்களைக் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பழங்குடிகள்தான் போராடி, துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகிவருகிறார்கள். இவர்கள்தான் காட்டை அழிக்கிறார்கள் என்று வழக்குப் போடுகிறது வனத் துறை.
  • சத்தீஸ்கர் மாநில அரசு, வேதாந்தா கம்பெனிக்கு வனத்தைத் தாரைவார்த்ததற்கு எதிராகப் போராடிய பழங்குடிகளை ஒடுக்க ‘சல்வா ஜுடும்’ என்ற துப்பாக்கிப் படையை உருவாக்கியது. பழங்குடி இளைஞர்களை வைத்தே பழங்குடி மக்களை வேட்டையாடியது. அதற்கு எதிராக 2007-ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, சுரீந்தர் சிங் நிஜ்ஜார் வழங்கிய தீர்ப்பினை, இன்றைய நீதிபதிகள் கொஞ்சம் புரட்டிப் பார்ப்பது நல்லது. இலவச நிலம், இலவச நீர், இலவச மின்சாரம் எனப் பெருநிறுவனங்களைக் கொழுக்கச் செய்துகொண்டே, வறுமையில் வாடும் பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர மறுக்கும் அரசைக் கடுமையாகக் கண்டித்தது அத்தீர்ப்பு.
  • 2006-ல் இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டம்தான் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி இன்றைய சுதந்திர இந்தியா ஆட்சி வரையில் பழங்குடிகளுக்கு இழைக்கப்பட்டுவந்த வரலாற்று அநீதியைப் போக்கியுள்ளது. ஆகவே, தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தேவையெனில், பழங்குடிகளின் வன உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தங் களைச் செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும். சட்டப்படி பழங்குடிகள் வன உரிமைகளைப் பெறவும், வன மேம்பாடு தொடர்பான திட்டங்கள், நிதிகள் ஆகியவை கிராம சபை மூலம் செயல்படுத்தப்படவும் இனிமேலாவது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories