TNPSC Thervupettagam

பழங்குடியினர் இனச்சான்றிதழ் பெறுவதில் ஏன் இவ்வளவு சிக்கல்?

August 6 , 2024 160 days 328 0
  • “1950 ஜனவரி 26இல் இந்தியா மிகப்​பெரும் முரண்​பாட்​டுக்குள் கால் வைக்கப்​போகிறது. அரசியலில் சமத்துவம் அடைந்​து​விட்​டோம். ஆனால் சமூகத்​தில், பொருளாதா​ரத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்கிற சமத்து​வத்தை நாம் அடையவில்லை.
  • எவ்வளவு சீக்கிரம் இந்த முரண்​பாட்டைக் களைகிறோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியா​வுக்கு நல்லது” - இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையில், 1949 நவம்பர் 25இல் உரையாற்றிய பாபாசாகேப் அம்பேத்கர் சொன்ன வார்த்​தைகள் இவை. 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் சமத்து​வ​மின்மை மோசமாகத் தொடர்​கிறது.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

  • பின்தங்கிய நிலையி​லிருந்து முன்னேறு​வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 15, 16இன்படி சமூக - கல்வியில் பின்தங்கிய நிலைக்கு உள்ளான சமூகத்​தினருக்குக் கல்வி​யிலும் வேலைவாய்ப்​பிலும் வாய்ப்புகள் வழங்கிட வேண்டும். சமூகப் பின்தங்கிய நிலையில் இருந்து வெளியே வரக் கல்வியும் வேலையும் அவசியம். இதற்காக வழங்கப்​படும் சாதிச் சான்றிதழ்/ இனச் சான்றிதழ் மூலம் படிக்கும் வாய்ப்​பும், வேலை பெறும் உரிமையும் கிடைக்​கின்றன.
  • அரசமைப்புச் சட்டம் பிரிவு 342(2) என்பது பட்டியல் பழங்குடி​யினரைக் குடியரசுத் தலைவர் சேர்த்தல், நீக்குதல் தொடர்​பானது. முதன்​முதலாகப் பழங்குடி​யினர் பட்டியல் சட்டம் 1950 செப்டம்பர் 6 அன்று வெளியிடப்​பட்டது. பிறகு, திருத்தச் சட்டம் 1956 அக்டோபர் 29 அன்று வெளியிடப்​பட்டது. மற்றொரு திருத்தச் சட்டம் 1976 செப்டம்பர் 18 அன்று வெளியிடப்​பட்டது.
  • பிறகு 2003 ஜனவரி 7 இறுதியாக 2023 ஜனவரி 3 அன்று திருத்தப் பட்டியல் வெளியிடப்​பட்டது. தமிழ்​நாட்டில் உண்மையில் பழங்குடி​யினராக இருந்​து​வரும் ஈரோடு மாவட்ட மலையாளி, குறவன் இனத்தின் உட்பிரிவு, குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவு, மலைப்​புலையன், வேட்டைக்​காரன் ஆகிய இனங்களைப் பழங்குடி​யினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்லாண்டுகளாக மத்திய, மாநில அரசுகளால் கிடப்பில் போடப்​பட்​டிருக்​கிறது.

நடைமுறைச் சிக்கல்கள்:

  • தமிழ்​நாட்டைப் பொறுத்தவரை 2023இல் கடைசி​யாகப் பழங்குடி​யினர் பட்டியலில் சேர்க்​கப்பட்ட நரிக்​குறவன், குருவிக்​காரன் ஆகிய சாதியினர் சேர்க்​கப்​பட்டு, 37 பிரிவுகள் பழங்குடி​யின​ராகப் பட்டியல்​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசில் 7.5 சதவீதமும் தமிழ்​நாட்டில் 1 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்​பட்​டிருக்கிறது.
  • இந்த இடஒதுக்​கீட்டு உரிமையைப் பெற வேண்டுமென்​றால், அதற்கு ஒவ்வொரு​வரும் இனச் சான்றிதழ் பெறுவது அவசியம். இனச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தமிழ்​நாட்டில் கோட்டாட்​சியர், சார் ஆட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோ​ருக்கு வழங்கப்​பட்​டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சி​யரின் நேர்முக உதவியாளர் என நிர்ண​யிக்​கப்​பட்​டுள்ளது.
  • சான்றிதழ் வழங்கு​வதற்கான வழிகாட்​டுதல்களை ஆதிதிராவிடர் - பழங்குடி​யினர் நலத் துறை வெளியிட்​டுள்ளது. இருப்​பினும், அந்த வழிகாட்​டுதலின்படி அதிகாரிகள் நடந்து​கொள்​வதில்லை. இதனால் சான்றிதழ் கேட்டுத் தொடர்ந்து போராட்​டங்கள் நடைபெற்று​வரு​கின்றன.
  • கடந்த ஆண்டு வேல்முருகன் என்பவர் தனது குழந்தை​களுக்கு மலைக்​குறவன் சான்றிதழ் கோரிக்​கைவிடுத்து, இணையம் மூலம் விண்ணப்​பித்து அதிகாரி​களால் நிராகரிக்​கப்​பட்​ட​தால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்​கொண்டு மாண்டு​போனார். இதேபோல் பள்ளிப்​பட்டு தாலுகாவில் கொண்டாரெட்டி சான்றிதழ் கேட்டு வழங்க மறுத்த நிலையில், தாலுகா அலுவல​கத்​திலேயே பெரியசாமி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து​கொண்​டார்.

அதிகாரி​களின் அலட்சியம்:

  • உயிரை மாய்த்துக்​கொள்ளும் செயலை ஏற்க முடியாதுதான். ஆனால், இணையம் மூலம் விண்ணப்​பிக்​கும்போது கோட்டாட்​சியர் உள்ளூர் விசாரணையை மேற்கொள்வதே இல்லை. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்​களின் விசாரணை அறிக்​கையின் அடிப்​படையில் அவர் முடிவெடுக்​கிறார்.
  • ஆதார, ஆவணங்கள் இல்லை​யென்​றாலும் விசாரணை மூலம் முழுத் திருப்தி அடைந்தால் சான்றிதழ் வழங்கலாம் என்று அரசு ஆணை குறிப்​பிடு​கிறது. அப்படி​யானால், மனுதா​ரரின் குடியிருப்​புக்குச் சென்று நேரடியாக விசாரணை செய்வது அவசியம். மனுதாரர் பேசுகிற மொழி, உடல்மொழி, வாழுமிடம், அருகில் வசிப்​பவர்​களின் வாக்குமூலம் போன்றவை முடிவெடுக்க உதவும்.
  • இணையத்தில் ஆவணங்கள் மட்டுமே முதன்​மைப்​படுத்​தப்​பட்டு, நிராகரிக்​கப்​பட்டு விடுகிறது. பெற்றோருக்கு அல்லது ரத்த உறவு சம்பந்​தப்​பட்​ட​வர்​களுக்குச் சான்றிதழ் இருந்​தால், அவர்களின் குழந்தை​களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு குறிப்​பிடு​கிறது.
  • அதேபோல் மாநில கூர்நோக்குக் குழுவில் மெய்த்​தன்மை உறுதி​ செய்​யப்​பட்​ட​வர்​களின் குழந்தை​களுக்கு மீண்டும் விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர​விட்டு, அது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்​பட்​டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவையும் அதிகாரிகள் மதிப்​ப​தில்லை. அரசு ஆணையையும் உதாசீனப்​படுத்தும் போக்கு உள்ளது.
  • இப்படி உருவத்தைப் பார்த்து, வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருவர் பழங்குடி​யினத்தவரா இல்லையா என்று முடிவுசெய்யக் கூடாது என்று ஓர் அரசாணை உண்டு. குறுமன்ஸ் என்று ஒருவர் சான்றிதழ் கேட்கிறார்.
  • அவர் இந்த இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று நிராகரிக்க அதிகாரி​களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவர் குறும்பர் என்றோ, குறும்பா என்றோ அதிகாரி குறிப்​பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறார். இப்படி வேறொரு சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்​பிட்டுத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று ஓர் அரசு வழிகாட்டல் உண்டு.
  • இந்த மாவட்​டத்​தில், தாலுகாவில் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்வது கூடாது. சம்பந்​தப்பட்ட மனுதாரர் குறிப்​பிட்ட பிரிவைச் சேர்ந்​தவரா, இல்லையா என்றுதான் அதிகாரி கூற முடியுமே தவிர, மாவட்​டத்​திலேயே இல்லை என்பதற்கு அவர் எத்தகைய ஆய்வை மேற்கொண்டு அந்த முடிவுக்கு வந்தார்? இது தொடர்பாக ஓர் அரசாணை உண்டு.
  • பிறந்த இடத்தைவிட்டுப் புலம்​பெயர்ந்து வேலை - வாழ்வாதாரம் காரணமாக வேறொரு மாவட்​டத்தில் வசித்து​வருபவர்​களுக்கு அவர்களின் பூர்விக இடத்தில்தான் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்​றனர்.
  • நிரந்தர வசிப்​பிடம் என்பது இப்போது வாழுமிடம்தானே தவிர, பூர்விக இடம் என்று அர்த்​தமல்ல என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி, இது தொடர்​பாகவும் அரசாணை வெளியிடப்​பட்​டுள்ளது. அதிகபட்சம் 15 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு உத்தர​விட்டிருந்​தாலும் ஆண்டுக்​கணக்கில் இழுத்​தடிக்கும் அதிகாரிகள் இருக்​கிறார்கள்.

பழங்குடி மக்களின் எதிர்​பார்ப்பு:

  • பழங்குடி​யினரைப் பொறுத்தவரை எந்த மதத்தைச் சேர்ந்​தவர்களாக இருந்​தாலும் அவர்கள் பழங்குடி​யினர்தான் என்று 1956ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தர​விட்​டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைப் படிக்​காமலேயே கிறிஸ்துவர் என்பதற்​காகப் பழங்குடிச் சான்றிதழ் மறுக்​கப்பட்ட நிகழ்வு தமிழ்​நாட்டில் சமீபத்​தில்கூட நிகழ்ந்​துள்ளது.
  • அதேபோல் கலப்பு மணம் புரிந்​தவர்​களின் குழந்தை​களுக்குப் பெற்றோர் எந்தச் சாதிச் சான்றிதழ் கோருகிறார்களோ அதை வழங்க வேண்டும். அவர்களின் அனைத்துக் குழந்தை​களுக்கும் அதே சாதிச் சான்றிதழ்தான் பெற வேண்டும். ஒரு குழந்தைக்குத் தந்தையின் சாதி மற்றொரு குழந்தைக்குத் தாயாரின் சாதி என்று சான்றிதழ் கேட்க முடியாது என்று அரசாணை தெளிவாகக் குறிப்​பிடு​கிறது. ஆனால், சில அதிகாரிகள் தந்தையின் சாதியைச் சேர்ந்த சான்றிதழ்தான் வழங்க முடியும் என்று தெரிவிக்​கிறார்கள்.
  • இந்த மாதிரியான நேர்வு​களில் உதவிடும் வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 14 மானுட​விய​லா​ளர்களை நியமனம் செய்துள்ளது. ஆனால், அதனாலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இன்றைய நிலையில், திட்ட​வட்டப் பழங்குடி நிலையில் (Ideal Tribal Pole) எந்தப் பழங்குடி​யினரும் இல்லை.
  • இதற்குக் காரணம் தொழில்​மய​மாதல், புலப்​பெயர்வு, நகர்மய​மாக்கல், உலகமயம், தொலைக்​காட்சி, சினிமா, தொலைத்​தொடர்பு, இணையவழிச் செய்திகள், வேலைக்காக வெளிமாநிலங்கள் செல்வது, பன்முகப் பண்பாட்டுச் சமுதாயத்தை ஒற்றைப் பண்பாட்டுச் சமூகமாக ஆக்க முற்படும் சமூக - சமய - அரசியல் அணுகுமுறை (Social - Religious - Political Approach) என்னும் பல்வேறு சமூகப் பண்பாட்டுக் காரணிகளைக் கூறலாம். இவற்றின் காரணமாகப் பழங்குடி​யினரின் தோற்றத்​தில், பழக்கவழக்​கங்​களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அதிகார வர்க்​கமும், மானுட​விய​லா​ளர்​களும் உணர வேண்டும்.
  • பல்வேறு வகைகளில் பண்பாட்டுச் சிதைவு ஏற்பட்​டுள்ளதை அறியாமல், இன்னமும் எட்கர் தர்ஸ்டன் காலத்து வரைமுறைகளை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பழங்குடி மக்​களைப் பார்த்​தால், எவருமே பழங்​குடி​யின​ராகத் தெரிய​மாட்​டார்​கள். எனவே, அரசமைப்​புச் சட்​டத்​தின் நோக்​கங்களை நிறைவேற்றும் வகை​யில் மாற்​றங்களை ஏற்று அரசு ஆணைகளின் அடிப்​படை​யில் அதி​காரிகள்​ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ப​தே பழங்குடி மக்​களின்​ எதிர்​பார்​ப்​பு.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories