TNPSC Thervupettagam

பழமைவாதப் பொருளாதார நிபுணர்களின் நாயகராக ஆடம் ஸ்மித் எப்படி ஆனார்?

June 28 , 2019 2010 days 1270 0
குளோர் எம் லியூ
  • ஆடம் ஸ்மித்தை முன்னிட்டுப் பலரும் சண்டையிட்டுக்கொள்ள விரும்புவார்கள். பொருளாதாரத்தின் பைபிள் என்றழைக்கப்படும் ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ நூலை எழுதிய அந்த ஸ்காட்டிஷ் தத்துவவாதி, சிலரைப் பொறுத்தவரை முதலாளித்துவத்தின் குலதெய்வம். ‘கட்டுப்பாடுகளற்ற சந்தைகளே பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாகி, எல்லோரையும் நலவாழ்வுக்கு இட்டுச்செல்கின்றன’ என்று அவரது பொருளாதாரக் கொள்கை கூறுவதாக, அவரது விசுவாசிகள் கூறிக்கொள்கின்றனர். தற்போது மிகவும் புகழ்பெற்றுவிட்ட ஸ்மித்தின் வாசகத்தைப் பொறுத்தவரை, ‘சந்தையின் கண்ணுக்குத் தெரியாத கைதான்’ நமக்குச் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் செல்வத்தையும் தருகிறதேயொழிய அரசின் இரும்புக் கரமல்ல.
  • நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கோ ஸ்மித் ‘புது தாராளமயவாதக் கற்பனை’யின் மறுவுருவமாகத் தெரிபவர். ஆகவே, அந்தக் கற்பனைக்கு ஓய்வுகொடுத்தாக வேண்டும் அல்லது புதுப்பித்தாக வேண்டும். பொருளாதார வளர்ச்சிதான் மிக முக்கியமான இலக்காக இருக்க வேண்டுமா என்று கேள்வி கேட்கும் அவர்கள், ஏற்றத்தாழ்வு குறித்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், ஸ்மித்தின் கோட்பாடு பெரும் செல்வத்தைக் குவிக்கவும் வழிவகை செய்திருக்கவில்லை என்கிறார்கள். உங்கள் அரசியல் சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவு: நவீன சந்தைசார்ந்த சமூகத்தின் அடிப்படை மதிப்பீடுகள் தொடர்பான நீண்டகால விவாதத்தின் இரு தரப்புகளிலும் ஸ்மித் பேசுகிறார்.
பிணைப்பின் தொடக்கம்
  • ஸ்மித்தின் கருத்துகள், அவரது அடையாளம் குறித்த வாதங்களொன்றும் புதியவை அல்ல. அவருடைய அறிவாளுமையை உரிமைகோருவதில் ஏற்பட்ட சண்டையின் நீண்ட வரலாற்றின் விளைவால்தான் இன்றைய அவரது புகழ் சிக்கல் மிகுந்ததாக மாறியிருக்கிறது.
  • ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதிய டுகால்டு ஸ்டூவர்ட் வேண்டுமென்றே அவரை 1790-களில் கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் அவரைச் சமாளிப்பது கடினம் என்றும் சித்தரித்தார். அவரது மாபெரும் படைப்பை அரசியல் சாராத சுமாரான கையேடு என்றும் சித்தரித்தார். ஸ்மித்தின் அரசியல்ரீதியிலான புரட்சிகரமான – அதாவது, வணிகர்கள் மீதான ஸ்மித்தின் கடுமையான விமர்சனம், நிறுவனமயமான மதத்தின் மீது அவர் கொண்ட வெறுப்பு, தேசியவாதத்தின் மீது அவர் கொண்ட வெறுப்பு - போன்ற தருணங்களின் தீவிரத்தைக் குறைத்தே காட்டினார் ஸ்டூவர்ட். அதற்குப் பதிலாக தான் எதை முக்கியம் என்று நினைத்தாரோ அதன் மீது ஸ்டூவர்ட் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சினார். ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ புத்தகத்தின் முக்கியமான கருத்தாக அவர் கருதியது இதுதான்: ‘காட்டுமிராண்டித்தனமான நிலையிலிருந்து ஒரு தேசத்தைச் செல்வச் செழிப்பான நிலைக்குக் கொண்டுசெல்ல மிகக் குறைவான விஷயங்களே தேவைப்படுகின்றன. அமைதி, எளிமையான வரிகள், சகித்துக்கொள்ளக்கூடிய நீதி நிர்வாகம். மற்றதெல்லாம் தன் போக்கில் தானாகவே வந்துவிடும்.’
  • ஸ்டூவர்ட் எழுதிய ஸ்மித்தின் வாழ்க்கை வரலாறு முதலில் ஸ்மித்தின் மறைவுக்கான இரங்கலாக 1793-ல் வெளியானது, பிறகு 1794, 1795 ஆகிய ஆண்டுகளில் வெளியானது. பிரிட்டன் மக்களை மிரள வைத்த சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் இந்த நூல் வெளியானது. 1789-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சி, இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த பிரிவினை தொடர்பான விசாரணைகளெல்லாம் அப்போதுதான் நிகழ்ந்தன. பிரிட்டன் வரலாற்றாசிரியர் எம்மா ராத்ஸ்சைல்டு சுட்டிக்காட்டியுள்ளபடி, ஸ்மித்தின் கருத்துகள் பற்றிய ஸ்டூவர்டின் சித்தரிப்பானது அரசியல் பொருளாதாரத்துக்கு அறிவியல்ரீதியிலான அதிகாரத்தைச் செலுத்துவதற்காக இங்கொன்றும் அங்கொன்றும் பிய்த்துப்போட்டு உருவாக்கப் பட்டது. அரசியல் பொருளாதாரத்தைத் தீங்கற்றதாகவும் துறைசார்ந்த விஷயமாகவும் ஸ்டூவர்ட் காட்ட முயன்றார் எனவும் அதன் மூலம் அரசியல்ரீதியில் ஆபத்தான காலகட்டத்தில் ஸ்மித்துக்கு ஒரு ‘பாதுகாப்பான’ புகழை அவர் உருவாக்க உதவியிருக்கிறார் என்றும் எம்மா எழுதுகிறார். ஸ்டூவர்டின் முயற்சிதான் ‘பழமைவாதப் பொருளாதார’த்துடனான ஸ்மித்தின் பிணைப்பின் தொடக்கமாக இருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத கை
  • ஸ்மித் மிக விரைவில் ‘அரசியல் பொருளாதாரம்’ என்ற பொருளாதாரத் துறையின் தந்தை என்று அழைக்கப்படலானார். ஆரம்பத்தில், அரசியல் பொருளாதாரம் என்பது அறம்சார் தத்துவத்தின் ஒரு பிரிவாக இருந்தது; அரசியல் பொருளாதாரத்தைப் படித்தால் தேசத்தை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றக்கூடிய அரசியல்வாதியாக வருங்காலத்தில் உருவெடுக்கலாம். 1780-களில் ஆரம்பித்து 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ புத்தகம் அமெரிக்க அரசியல் பொருளாதாரக் கல்வியில் பாடப்புத்தகமாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. அரசியல் பொருளாதாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் வந்தாலும் அவையெல்லாம் அந்தத் துறையின் படித்தரப் புத்தகமான ‘தி வெல்த் ஆஃப் நேஷன்’ஸுடன் ஒப்பிடப்பட்டன.
  • ஒரு துறையைத் தோற்றுவித்தவர் என்ற அந்தஸ்தானது ஸ்மித்தின் கருத்துகளை நீண்ட தூரம் எடுத்துச் சென்றது. அரசியல் என்ற போர்க்களத்தில் – பொருளாதாரக் கருத்துகளின் களத்திலும் – அவரது கருத்துகள் முயன்றுபார்க்கப்பட்டு, பரீட்சிக்கப்பட்டு, பிரயோகிக்கப்பட்டன. அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வலுசேர்த்துக்கொள்ளும் விதத்தில் ஸ்மித்தை ஆதாரமாகக் காட்டினார்கள். என்றாலும் ‘கண்ணுக்குத் தெரியாத கை’ என்ற வாசகம் முதலாளித்துவத்தின் பொன்மொழியாகப் பிற்காலத்தில்தான் புகழ்பெற்றது.
  • அமெரிக்காவில் ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் குறித்த தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடம் ஸ்மித்தை மேற்கோள் காட்டினார்கள். 1824-ல் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மெக்டஃபீ தடையற்ற வர்த்தகம் மீதான தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும்போது இப்படிக் கூறுகிறார்: “நவீன காலத்தில் வேறு எந்த மனிதரை விடவும் அரசியல் பொருளாதார உலகத்தைப் புத்துயிர் பெற வைத்த ஆடம் ஸ்மித்தின் மீது ஆணையாக. அவர்தான் இந்த அறிவியல் துறையின் தந்தை.’ 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘தடையற்ற வர்த்தகத்தின் அப்போஸ்தலர்’ என்று ஆடம் ஸ்மித் அழைக்கப்பட்டார். உள்நாட்டுத் தொழில்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களும் ஆடம் ஸ்மித்தின் கருத்துகளை நாடினர். அதாவது, அவற்றை நிராகரிப்பதற்காக. “உள்நாட்டு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்குத் தடையற்ற வர்த்தகத்தின் அப்போஸ்தலரான ஆடம் ஸ்மித்தின் ஆதரவு உண்டு” என்று ஒரு நாடாளுமன்றவாதி 1859-ல் கூறினார்.
மையத் திசையின்றி ஒருங்கிணைக்கப்படுதல்
  • ஸ்மித்தின் பெயரையும் கருத்துகளையும் கோஷங்களுக்குப் பயன்படுத்துவது நமக்கு இன்று ‘கண்ணுக்குத் தெரியாத கை’ என்ற வாசகத்தின் மூலம் நன்கு பரிச்சயமான ஒன்று. அரசியல்ரீதியிலான கவர்ச்சிகர வாசகம் என்ற அதன் பிராபல்யத்துக்கு 20-ம் நூற்றாண்டின் பாதியில் ஆரம்பித்து, பிற்பகுதி வரையிலான சிகாகோவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள்தான் பெரிதும் காரணம். இவர்களில் மில்டன் ஃப்ரீட்மேன் மிகச் சிறந்த உதாரணம். ஃப்ரீட்மேன் எழுதிய பத்திரிகை பத்திகள், கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொது விவாதங்கள், உரைகள், எழுதிய புத்தகங்கள் போன்றவற்றுக்கெல்லாம் ‘கண்ணுக்குத் தெரியாத கை’ என்ற ஸ்மித்தின் உருவகம்தான் மையக் கருவாக இருந்தது.
  • கண்ணுக்குத் தெரியாத கையை விலை முறைமையாக 1977-ல் ஃப்ரீட்மேன் இப்படிச் சித்தரித்தார்: ‘கோடிக்கணக்கானோர்கள் தங்கள் சொந்த நோக்கத்துக்காக ஒரு மையமான திசையின்றி விலை முறைமை (price system) மூலம் ஒருங்கிணைக்கப்படுதல்’. இந்தப் பார்வைதான் ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ புத்தகத்தை அறிவியல்பூர்வமான பொருளாதாரத் துறையின் தொடக்கமாக உருமாற்றியது. இன்னும் என்ன வேண்டும், அமெரிக்க நாட்டின் உருவாக்கத்தின் அடிப்படை மதிப்பீடுகளுடனும் ஸ்மித்தை இணைத்துப் பார்த்தார் ஃப்ரீட்மேன். தாமஸ் ஜெபர்ஸனின் ‘சுதந்திரப் பிரகடனம்’ ஸ்மித்தின் ‘தி வெல்த் ஆஃப் நேஷன்ஸ்’ புத்தகத்தின் அரசியல் இரட்டையர் என்று 1988-ல் ஃப்ரீட்மேன் கூறினார். அமெரிக்கச் சுதந்திரத்துக்கு பொருளாதாரச் சுதந்திரம் முன்நிபந்தனையாக இருந்தது என்றும் கூறினார்.
  • பொதுமக்களின் எண்ணத்தில் ஸ்மித்தின் ‘கண்ணுக்குத் தெரியாத கை’யானது ஃப்ரீட்மேனின் வெளிப்படையான பழமைவாதப் பொருளாதாரச் செயல்திட்டத்துடன், அதாவது, ஸ்மித் அப்படிக் கூறியதாக மக்கள் நினைத்த அந்தச் செயல்திட்டத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு மாறாக வாதிட்டிருக்கிறார்கள்.
பொருளாதாரச் சிந்தனையும் தார்மீகமும்
  • உண்மையில், ஸ்மித் என்னவாக இருந்தார், இருக்கிறார், எதற்கு ஆதரவானவர் அவர் என்பதையெல்லாம் மறப்பது எளிது. வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுத்திலும் விவாதங்களிலும் வெவ்வேறு மக்களால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார், மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை மறப்பது எளிது.
  • ஸ்மித்தின் கடந்தகால விளக்கங்களையும் அவரது பயன்பாடுகளையும் பழமையானது, மேலோட்டமானது, பிழையானது என்றெல்லாம் சொல்லிவிட நாம் துடிக்கலாம். ஸ்மித்தின் மதிப்பீடு எப்போதும் அரசியல் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது, அப்படியே அரசியல்மயப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. அந்த மதிப்பீட்டில் பெரும்பகுதியானது அவர் உருவாக்கிய அறிவியல் துறையின் நடுநிலைத்தன்மையையும் விருப்புவெறுப்பற்ற தன்மையையும் குறித்த நம்பிக்கையிலிருந்து உருவாவது. அந்த நம்பிக்கைகளெல்லாம் அவருக்கு இருந்ததாக அவர் மீது அவரது பிந்தைய வாசகர்களால் திணிக்கப்பட்டவையே. ஸ்மித் ஒரு அறிவியலாளர், சந்தேகமே இல்லை. ஆனால், அவரது அறிவியல் மனிதன் மதிப்பீடுகளற்றவன் இல்லை. அதே நேரத்தில் அவரது அறிவியலை ஒரு முறைசார் மதிப்பீட்டின் வழியாகப் படிக்கிறோமா என்பதில் ஒருவருக்கு உணர்வு இருக்க வேண்டும்; அதாவது சுதந்திரத்தை, சமத்துவத்தை, வளர்ச்சியைக் குறித்ததா வேறு ஏதோ ஒன்றைக் குறித்ததா என்ற முறைசார் மதிப்பீடு.
  • ஆடம் ஸ்மித்தின் படைப்புகள் இன்னும் மிக முக்கியமானவையாக நீடித்து நிற்கின்றன. ஏனெனில், சந்தை சமூகத்தின் மதிப்பீடுகளைப் புரிந்துகொண்டு இனங்காண, அதன் தனித்துவமான சக்திகளைப் பயன்படுத்திக்கொண்டு மோசமான துடிப்புகளைச் சரிப்படுத்த நமக்கு இருக்கும் தேவையானது, முந்தைய இரண்டு நூற்றாண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் இருந்திருக்கக்கூடியதைப் போல இப்போதும் அவ்வளவு முக்கியமானது. ராணுவங்களையும் கப்பற்படைகளையும்போல அவரது படைப்புகளும் இந்த உலகத்தை மாற்றியமைத்திருக்கின்றன. பொருளாதாரச் சிந்தனையை தார்மீக, அரசியல் முடிவுகளிலிருந்து பிரிக்க முடியாது, பிரிக்கக் கூடாது என்பதை ஸ்மித்தினுடைய சிந்தனையின் அளப்பரிய வீச்சும் விசாலமும் நமக்கு நினைவுறுத்துகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (28-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories