TNPSC Thervupettagam

பழவேற்காடு சுவடியும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பும்!

July 25 , 2024 8 hrs 0 min 51 0
  • ஆட்சி செய்வதற்கும் வரி வசூலிப்பதற்கும் கணக்கெடுப்புகள் ஒவ்வொரு காலத்திலும் தேவைப்பட்டிருக்கின்றன; தேவைக்கேற்ப கணக்கெடுப்பு முறைகள் விரிவடைந்திருக்கின்றன.
  • மக்கள் கணக்கெடுப்பு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கின்றன என்றும் வரிவிதிப்பிற்காகப் பழைய கிரேக்கத்திலும் இந்தியாவில் முகமதியர் ஆட்சிக் காலத்திலும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கணக்கெடுப்பின் வரலாறு சொல்கிறது.
  • கிழக்கிந்தியக் கம்பெனி (1757- 1858) ஆட்சிக் காலத்தில், 1824-இல் அலாகாபாதிலும் 1827-28-இல் வாரணாசியிலும் மக்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
  • ஆனால் முழுக் கணக்கெடுப்பு முதன்முதலில் 1830-இல் ஹென்றி வால்டர் என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கணக்கெடுப்பு 1836-37-இல் புனித ஜார்ஜ் கோட்டை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து அறிக்கை கொடுக்க 1849-இல் உள்ளூர் அரசுகளுக்கு கவர்னரால் ஆணையிடப்பட்டுள்ளது. 1872-இல் லார்ட் மேயோ ஆட்சிக் காலத்தில் ஒரு கணக்கெடுப்பு நடந்துள்ளது.
  • இந்தியாவின் முழுமையான முதல் கணக்கெடுப்பு வில்லியம் சி.பிளெüடன் என்னும் இந்திய கணக்கெடுப்பு ஆணையர் வழியாக 1881-இல் எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பத்தாண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
  • ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பாக - இன்றைக்குச் சுமார் 208 ஆண்டுகளுக்கும் முன்பாகவே சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காட்டில், 1816-இல் ஒரு கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுதான் இந்தியாவில் ஒரு ஊரில் நடத்தப்பட்ட ஜாதிவாரியான கணக்கெடுப்பின் குறிப்பிடத்தக்க முதல் ஆவணமாகத் தெரிகிறது.
  • கணக்கெடுப்பை நடத்தியவர் காலின் மெக்கன்சி. இவர் சென்னை மாகாணத்தின் முதல் நில அளவையாளராக இருந்தவர். பணிகளுக்காகப் பயணித்தபோது சுவடிகளையும் தொகுத்தவர்; ஊர் வரலாறு, மக்கள் வரலாறு என்று சில ஆவணங்களையும் தந்தவர். அவற்றில் குறிப்பிடத்தக்க ஆவணம் "பழவேற்காடு கைபீது'. அதில்தான் பழவேற்காட்டில் வசித்த மக்கள் கணக்கெடுப்பு உள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மெக்கன்சி தொகுப்பில் இந்தச் சுவடி ஆவணம் உள்ளது.
  • கணக்கெடுப்புக்குக் கள உதவியாளர்களாகக் குப்பய்யர், வேங்கடாசல செட்டியார், மீனவர்கள் கீவை செட்டி, தான முதலி ஆகியோர் இருந்திருக்கிறார்கள். உதவியாகக் குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை மட்டும் சார்ந்திராமல் மீனவர்களையும் சேர்த்துக்கொண்டு கணக்கெடுப்பைக் காலின் மெக்கன்சி நடத்தியிருக்கிறார்.
  • பழவேற்காட்டின் ஊர்ப் பெயருக்கான காரணம், அந்த ஊரை முன்பு ஆட்சி செய்த அரசர்கள், அங்கு டச்சுக்காரர்கள் வருகை, வணிக முறை, தொழில்கள், மக்கள், ஜாதிகள், பழங்குடி மக்கள், அவர்களின் வாழ்க்கைமுறை, சடங்குகள், பொருளாதார நிலை, இருப்பிடம், கோயில்கள், நிலவியல் அமைப்பு ஆகியவை பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
  • பழவேற்காட்டிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் 1816-இல், அகம்பிடியர். அம்பட்டர், இடையர், கணக்கர், கம்மாளர், கரையார், கவறை, கைக்கோளர், கோமுட்டி, சக்கிலியர், சாணார், சாலியர், செட்டியார், செம்படவர், சோனகர், தறிக்காரர், தாரைக்காரர், துலுக்கர், தேவரடியார், பட்டணவர், படிசாலர், பண்டாரம், பள்ளிகள், ஆதிதிராவிடர், பார்ப்பனர், வடக்கத்தி செட்டியார், வண்ணார், வாணியர், பழங்குடி மக்களான இருளர், இலம்பாடி, ஏனாதி, குறவர், தொம்பறவர், வில்லியர், வேடர் மற்றும் டச்சுக்காரர்கள் என அங்கு வசித்துவந்த பல வகுப்பினர் பற்றியும் அவர்களில் டச்சுக்காரர்களைத் தவிர்த்த மக்கள் வலங்கை இடங்கை எனும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த தகவலும் ஆவணப் பதிவுகளாக உள்ளன.
  • வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் உள்ள ஜாதிகளின் பட்டியல் ஊருக்கு ஊர் காலம் தோறும் வேறுபட்டு வந்திருக்கிறது. அவ்வகையில் 1816-இல் பழவேற்காட்டில் நடைமுறையிலிருந்த பட்டியல் இந்தக் கணக்கெடுப்பில் உள்ளது.
  • அதன்படி, கவறை, அகம்பிடியர், கணக்கர், கோமுட்டி, சாலியர், படிசாலர், வாணியர், கரையார், சாணார், தமிழிடையர், ஊருக்கு வெளியில் வசித்த ஆதிதிராவிடர் ஆகியோர் வலங்கைப் பிரிவினராகவும் பள்ளிகள், கைக்கோளர், கம்மாளர், செட்டியார், ஊருக்கு வெளியில் வசித்த சக்கிலியர் ஆகியோர் இடங்கைச் ஜாதியினராகவும் இருவகையிலும் இடம் பெறாதவர்களாகக் கோட்டைக் குப்பத்திலிருந்த பட்டணவர், கரையார், வடுகச் செம்படவர், வடுக ஆதிதிராவிடர், தமிழ் ஆதிதிராவிடர், டச்சுக்காரர்கள் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
  • வலங்கை இடங்கைப் பிரிவினருக்கெனத் தனித்தனியாக இருந்த குடிதண்ணீர் குளங்கள், கோயில்கள் ஆகியவற்றின் விவரங்களும் அவர்களிடையே நிலவிவந்த உயர்வு தாழ்வும் பகை உணர்ச்சி பற்றிய குறிப்புகளும் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.
  • அங்கு வலங்கைச் ஜாதியினர் ஆதிநாராயணப் பெருமாளையும் இடங்கைச் ஜாதியினர் சமையீசுவரனையும் வழிபட்டு வந்துள்ளனர்.
  • அங்கு 613 வீடுகளும் 134 குடிசைகளும் இருந்திருக்கின்றன. அப்போது அங்கு ஆண், பெண், குழந்தைகள் உள்பட மக்கள் தொகை எண்ணிக்கை 4,286.
  • பழவேற்காட்டில் மட்டும் 400 வீடுகளிலும் ஆறு குடிசைகளிலுமாக 2,458 பேரும் கோட்டைக்குப்பத்தில் 72 வீடுகளில் 450 பேரும் நல்ல தண்ணீர்க் குளத்தைச் சுற்றி 29 வீடுகளில் 101பேரும் இடமணியில் 84 வீடுகளில் 443 பேரும் இடமணி குப்பத்தில் 27 வீடுகளில் 172 பேறும் சாட்டங்குப்பத்தில் 30 குடிசைகளில் 145 பேரும் வைரவன் குப்பத்தில் ஓர் வீட்டிலும் 16 குடிசைகளிலுமாக 92 பேரும் கொடிமரத்துக் குப்பத்தில் 11 குடிசைகளில் 66 பேரும் கூனங்குப்பத்தில் 15 குடிசைகளில் 69 பேரும் தீவுக்குப்பத்தில் 56 குடிசைகளில் 290 பேரும் வசித்து வந்துள்ள தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
  • அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரிலும் வீடுகளில் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்?, குடிசைகளில் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
  • மேலும் தொங்குமுத்தன் நல்ல தண்ணீர்க் குளத்தின் மேற்குக் கரையில் பார்ப்பனர் வீடு பத்தும் வடக்குக் கரையிலே கம்மாளர் வீடு மூன்றும் வீரசைவப் பண்டாரம் வீடு மூன்றும் தெற்குக் கரையிலே பள்ளிகள் வீடு இரண்டும் வண்ணார் வீடு இரண்டும் இருந்தன என்று அவர்களின் வசிப்பிடம் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
  • அவர்கள் வள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, கவலைக் கிழங்கு, கொட்டிக் கிழங்கு, சிட்டிக் கிழங்கு, தாமரைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை உணவாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த விவரம் அப்போது அங்கு கிடைத்த கிழங்குகளின் பட்டியலாக உள்ளது.
  • காடை, குயில், கவுதாரி, மயில், வெüவால் ஆகிய பறவைகளின் பட்டியலும் ஆடு, உடும்பு, கடமை, கரடி, நாய், பன்றி, பூனை, மாடு, மான், முயல் ஆகிய விலங்குகளின் பட்டியலும் ஆதிநாராயண பெருமாள் கோயில், சமையீசுவரன் கோயில், சிவன் கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், தர்மராஜா கோயில், துர்க்கை முகுந்தம்மன் கோயில் ஆகிய கோயில்களின் பட்டியலும் அரிசி, நெல், சோளம், பயிறு, புளி, வெல்லம் ஆகியவற்றின் பட்டியலும் இங்குலிகம், இலவங்கம், ஜாதிக்காய், சாபத்ரி, மிளகு ஆகிய நறுமணப் பொருள்களின் பட்டியலும் ஆறு, ஏரி, கடல், கழி, காட்டு ஓடை, குளம் ஆகிய நீர்நிலைகளின் விவரங்களும் அங்கு கிடைத்த 78 வகையான மீன்களின் பெயர்களும் அவற்றில் ஆற்று மீன்கள் எவை கடல் மீன்கள் எவை என்ற தகவல்களும் என்னென்ன பருவ காலங்களில் என்னென்ன மீன்கள் கிடைத்தன, அவற்றைப் பிடிக்க மீனவர்கள் பயன்படுத்திய பெருவலை, தூரி வலை, மரவலை, கண்ணி வலை, சிறுவலை, கொண்டை வலை, கல்லுவலை ஆகிய ஏழு வகையான வலைகளின் விவரங்களும் அங்கிருந்த மக்களின் நெசவுத் தொழில் மற்றும் அங்கிருந்த பழங்குடி மக்களின் தொழில், வாழ்க்கை முறை ஆகிய விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
  • பழங்குடி மக்களின் திருமண முறைகள், வேட்டையாடும் வாழ்க்கை, அணிகலன்கள், பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் ஆகிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படகோ வலையோ இல்லாத பழங்குடி மக்கள் நீர் நிலைகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீருக்குள் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடக்கிறார்கள். அங்குக் கரையேறிப் புறப்பட்ட இடத்துக்கே கரையில் நடந்து வந்து, மீண்டும் நீரில் இறங்கி, தாம் முன்பு சென்ற தடம் வழியே நடந்து தங்கள் காலடி, ஏற்கெனவே நீருக்குள் பதித்துள்ள தடங்களில் அடைந்திருக்கும் இறால்களைக் கையால் பொத்திப் பிடிக்கிறார்கள்.
  • இவர்களின் காலடி பட்ட இடத்தில் சேறு நீங்கப் புதிய மண் தெரிவதால் இறால் வந்து படுத்துக் கொள்கிறது. இவர்கள் மெதுவாகச் சென்று அவற்றைப் பிடித்துப் பைகளில் போட்டுக் கொள்வதை 1986-இல் கட்டுரையாளர் நேரில் பார்த்திருக்கிறார்.
  • பிடித்த மீன்களை அங்கேயே விற்றால் என்ன விலை? பட்டணத்திற்குச் சென்று விற்றால் என்ன விலை? - போன்ற விவரங்களும் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. குடிப் பழக்கத்தால் அவர்களின் வாழ்நிலை பாதிக்கப்படுவதையும் ஆவணம் குறிப்பிடுகிறது.
  • பழவேற்காடு, உலகத்தில் ஆண்டு முழுவதும் இறால் கிடைக்கும் ஒரே இடம் எனும் பெருமைக்கு உரியதாக இருக்கிறது. கூடவே மக்கள் கணக்கெடுப்பிற்கும் இந்திய மொழியில் எடுக்கெடுக்கப்பட்ட ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கும் "பழவேற்காடு கைபீது' எனும் இந்தத் தமிழ் ஆவணம், கணக்கெடுப்பு வரலாற்றில் காலத்தில் முதலாகவும் இருக்கிறது.

நன்றி: தினமணி (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories