- பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) எதிர்ப்பவர்கள், தங்கள் கடுமையான எதிர்ப்பை பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயினும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவதாக அறிவித்துவிட்டன. இதனைத் தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்ததால், கர்நாடகமும் தெலங்கானாவும் இதே திசையில் செல்லத் தயாராகி வருகின்றன.
- மத்திய அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் பயனாக ஒவ்வொரு மாநிலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன. இதைக் காணும்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும் ஓபிஎஸ் திட்டத்திற்கு சில தடைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
- உதாரணமாக, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செüதரி, மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) 2015 மற்றும் 2023 விதிமுறைகளின்படி, ஓபிஎஸ் முறைக்கு மாறும் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களிலிருந்து என்பிஎஸ்-சுக்காக செலுத்தப்பட்ட தொகையை ஓய்வூதிய நிதியிலிருந்து திரும்பப் பெற இயலாது' என்று கூறியிருக்கிறார்.
- இந்த விவகாரத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்கு முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி சுருக்கமாக நினைவுகூர்வது அவசியம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் பெற்றிருக்கிறார்கள்; முதல் முதலாக 1881-இல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகம் செய்யப்பட்டது.
- அரசு நிறுவனங்களுக்கான அரச ஆணையம் (லீ ஆணையம்) 1924-இல் செய்த பரிந்துரையில், இந்தியாவில் ஆங்கிலேய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறுபவருக்கு, அவர் கடைசி மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதி தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
- இந்த லீஆணையப் பரிந்துரையை 1935-இல் அன்றைய ஆங்கிலேய - இந்திய அரசு சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அதாவது, நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியத்தை (பழைய ஓய்வூதியத் திட்டத்தில்) பெற்று வந்திருக்கிறார்கள்.
- ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய பாதுகாப்பு என்ற கண்ணோட்டம் மிக வலுவாக வேரூன்றி இருந்த காலத்தில், இதை மாற்றும் வகையில், 2003- டிசம்பரில் அன்றைய மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
- அதிலும், 2004 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு பணியில் இணைவோர் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தால் அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்கவே புதிய திட்டம் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
- முந்தைய ஓபிஎஸ் திட்டத்தின்படி, பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி மாத ஊதியத்தில் பாதித்தொகையைப் பெற்று வந்தனர். அதற்காக அவர்கள் ஒரு பைசா கூட செலுத்தத் தேவையில்லாத நிலை இருந்தது.
- ஆனால் "தேசிய ஓய்வூதிய திட்டம்' என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட புதிய என்பிஎஸ் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீதம் பங்களிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படுகிறது. அத்துடன் இதே அளவு தொகையை அரசும் கூடுதலாக ஓய்வூதிய நிதியில் சேர்க்கிறது. (வேலை வழங்கும் நிறுவனத்தின் / அரசின் பங்களிப்புத் தொகையானது 14 சதவீதமாக 2019-இல் அதிகரிக்கப்பட்டது). அப்போது மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து மாநிலங்களும் புதிய திட்டத்தில் இணைந்தன.
- இவ்வாறு அரசு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட (10%) பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் (14%) சேர்ந்த ஒட்டுமொத்த நிதியின் ஒரு பகுதி (மொத்தத்தொகையில் 60%) அந்த ஊழியர் ஓய்வு பெறும்போது பெருந்தொகையாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை, (மொத்தத்தொகையில் 40%) குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதனை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும்.
- அதாவது அரசு ஊழியர்கள் எந்த பங்களிப்புத் தொகையும் செலுத்தாதபோதும், ஓய்வூதியம் பெறுவது பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி (ஓபிஎஸ்) அவர்களின் உரிமையாக இருந்தது. பங்களிப்பு இல்லாதபோதும் உறுதியான ஓய்வூதியப் பலன்கள் அவர்களுக்குக் கிடைத்து வந்தன. ஆனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) ஊழியர்களின் உறுதியான பங்களிப்பு உள்ளபோதும், உறுதியற்ற ஓய்வூதியப் பலன்களே கிடைக்கின்றன.
- இந்த ஒப்பீடுகளிலிருந்து ஓபிஎஸ் தான் என்பிஎஸ்சை விடச் சிறந்தது என்பது தெரிகிறது. எனவேதான் என்பிஎஸ்சுக்கு மாற விருப்பமின்றி அரசு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆரம்பத்தில் பல்வேறு மாநிலங்கள் என்பிஎஸ் திட்டத்தை ஆதரித்தபோதும், அரசு ஊழியர்களின் எதிர்ப்பால் சில மாநிலங்கள் பின்வாங்கின.
- இதைக் கண்ட மத்திய அரசு ஊழியர்களும், என்பிஎஸ் திட்டத்தைக் கைவிடாத மாநிலங்களைச் சார்ந்த அரசு ஊழியர்களும் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக இந்திய ரயில்வே ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு கோரி, வரும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
- இந்த என்பிஎஸ் திட்டத்தை மேற்கு வங்கம் ஆரம்பத்திலிருந்தே ஏற்கவில்லை. 2003-இல் இதனை ஏற்பதாக அறிவித்த தமிழ்நாடு அரசும், இதை நடைமுறைப்படுத்த இதுவரை முனைப்புக் காட்டவில்லை. இவை குறிப்பிட வேண்டிய தகவல்கள்.
- அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பெறப்போகும் பணப்பயன் என்பதால், அவர்களை மத்திய, மாநில அரசுகளால் சமாதானப்படுத்த முடியவில்லை. ஏனெனில், என்பிஎஸ் திட்டத்தின் பலன்கள் குறைவு. இதை அரசு உணர்ந்திருந்ததால்தான், 2003 அறிவிக்கையிலேயே, "2004 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு பணியில் சேருவோருக்கு மட்டுமே என்பிஎஸ் பொருந்தும்' என்று அறிவிக்கப்பட்டது.
- இந்த புதிய திட்டத்தால் தற்போது (2004இல்) பணியில் உள்ள எந்த அரசு ஊழியருக்கும் பிரச்னை இல்லை என்பதால் தான், திட்டத்தின் தொடக்கத்தில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. என்பிஎஸ் திட்டத்துக்கு எதிரான போராட்டம் மிகவும் தாமதமாகத் தான் தொடங்கியது; 20 ஆண்டுகள் கழிந்த பிறகே போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது.
- ஓபிஎஸ் மீண்டும் கொண்டுவரப்பட்டால், அரசின் நிதிச்சுமை கூடிவிடும் என்பது அதை எதிர்ப்பவர்களின் வாதம். "ஓபிஎஸ் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசின் ஒட்டுமொத்த நிதிச்சுமை என்பிஎஸ் திட்டத்தில் இருப்பதுபோல 4.5 மடங்கு அதிகரித்துவிடும்' என்று ரிசர்வ் வங்கியின் 2023 செப்டம்பர் ஆய்விதழ் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, 2060-களில் நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 0.9 சதவீத சுமை கூடுதலாகும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது.
- ஓபிஎஸ் திட்டத்திற்கு அரசுதான் செலவிட வேண்டியிருக்கும். ஏனெனில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது அதுவரையிலான ஊழியர்களின் சேவைக்கு அளிக்கப்படும் வெகுமானம் மட்டுமே. இதனால் அரசுக்கு மூலதனச் செலவுகள் அதிகரித்து, அது அரசின் வருவாயிலும் வேலைவாய்ப்புகளிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் இதை எதிர்ப்பவர்களின் வாதம்.
- ஓபிஎஸ் திட்டம் முந்தைய காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நல்ல சமூகநலத் திட்டமாக இருந்திருக்கலாம். ஏனெனில் அப்போது நாட்டின் ஒட்டுமொத்த பணியாளர்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அதேசமயம், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் அளிப்பது, நாட்டிலுள்ள பிற தனியார் துறைத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றும், ஓபிஎஸ் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
- பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் "இந்தியாவின் பொருளாதாரம் பல மடங்காக வளர்ந்து வருவதாக மத்திய அரசு கூறுகிறது. மிக விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயரப் போகிறோம் என்று அரசு பெருமிதத்துடன் கூறுகிறது. இத்தகைய நிலையில் மிகவும் குறைந்த சதவீதத்திலான ஓய்வூதியத்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமை ஏற்படுமா' என்று கேள்வி எழுப்புகிறார்.
- மக்களின் ஆயுட்காலம் கூடுவதால் ஓபிஎஸ் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறுவோரின் கருணையற்ற மனப்பான்மை, பணம் மட்டுமே பிரதானம் என்ற குறுகிய நோக்கை வெளிப்படுத்துகிறது. அது மட்டுமல்ல, ஆயுட்கால நீட்டிப்பு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும். அப்போது மூத்த குடிமக்கள் மரியாதையுடனும் நன்மதிப்புடனும் வாழ வேண்டுமானால், அவர்கள் பொருளாதார சுதந்திரத்துடன், பிறரை எதிர்பார்க்கும் நிலை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அரசின் ஓய்வூதிய ஆதரவு அவசியம்.
- அரசு தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன் நின்றுவிடக் கூடாது. அரசுத் துறை சாராத கோடிக் கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள வேண்டிய கடப்பாடும் அரசுக்கு உண்டு. தனியார் துறைத் தொழிலாளர்களும் மூத்த குடிமக்களாகும்போது, அவர்கள் சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஓய்வூதியம் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து முதியோர் தகுதி ஓய்வூதிய திட்டத்தை (டிடிபி ஸ்கீம்) நடைமுறைப்படுத்த அரசு முயல வேண்டும்.
- எனவே தொழிலாளர் நலனுக்கான நமது தற்போதைய இலக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதாக மட்டும் இருந்துவிடக் கூடாது. தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களும் இதேபோன்ற ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என்பதே நமது தொலைநோக்கு இலக்காக இருக்க வேண்டும்.
நன்றி: தினமணி (27 – 03 – 2024)