- சமீப காலத்தில், மிகக் குறைந்த கால இடைவெளியில் இரண்டு கட்டிட விபத்துகள் நடைபெற்றுள்ளன. சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் இருந்த ஒரு பழைய கட்டிடம், மே மாதம் 3 ஆம் தேதி இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர், பாரிமுனையையும் மண்ணடியையும் இணைக்கும் அரண்மனைக்காரன் தெருவில் இருந்த ஒரு பழைய கட்டிடம், ஏப்ரல் 19 அன்றுஇடிந்து விழுந்தது. பட்டாளம் கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்; பாரிமுனைக் கட்டிடத்தின் வயது 60 ஆண்டுகளாக இருக்கலாம்.
- இரண்டு விபத்துகளும் கூட்டம் மிகுந்த தெருக்களில் நடைபெற்றன. கட்டிடங்கள் தகர்ந்து விழுந்தசில நிமிடங்களுக்குள் மாநகராட்சி, தீயணைப்புத் துறை, காவல் துறை ஊழியர்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடங்களை சென்றடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் நேரவில்லை.
- நகரின் சிதிலமடைந்த கட்டிடங்களைச் சென்னை மாநகராட்சி பட்டியலிட்டிருக்கிறது. அதில் பட்டாளம் கட்டிடமும் இருந்திருக்க வேண்டும். கடந்த பிப்ரவரியில் கட்டிடத்தைவிட்டு வெளியேறுமாறு அதன் உரிமையாளர்களிடம் மாநகராட்சிகேட்டுக்கொண்டது. அதற்குப் பலன் இருந்தது. விபத்துநடந்தபோது கட்டிடத்தில் யாருமில்லை.
- பாரிமுனைக் கட்டிடம் பட்டியலில் இருந்ததா என்று தெரியவில்லை. கட்டிடத்தில் திருத்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதில் நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. எனினும், விபத்து நடந்தபோது இடிபாடுகளுக்குள் எவரும் சிக்கவில்லை என்பதை மீட்புக் குழுவினர் தங்கள் உணரிகள் (sensor) மூலமும் மோப்ப நாய்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இடிபாடுகளை அகற்றினர்.
சிதிலமடைந்த கட்டிடங்கள்:
- சென்னை மாநகராட்சி, முதற்கட்டமாக நகரில் 337 கட்டிடங்கள் சிதிலமடைந்தவை எனப் பட்டியலிட்டிருக்கிறது. எனில், இந்தக் கட்டிட உரிமையாளர்கள் எல்லாருக்கும் அவர்களது கட்டிடங்களை இடிக்கச் சொல்லி இன்னும் அறிவிக்கை வழங்கப்படவில்லை. விபத்து நடந்த பட்டாளம் கட்டிடத்தில், வீட்டைக் காலி செய்யுமாறு அறிவுறுத்திய மாநகராட்சி, கட்டிடத்தை இடிக்கச் சொல்லி முறையான அறிவிக்கை வழங்கவில்லை என்றே தெரிகிறது. ஆகவே, கட்டிடம் இடிக்கப்படவில்லை. எனினும் தானாகவே இடிந்து விழுந்துவிட்டது.
- அறிவிக்கை வழங்கப்பட்ட கட்டிட உரிமையாளர்களில் சிலர், தங்கள் கட்டிடம் பாரம்பரியச் சிறப்புமிக்கது, ஆகவே இடிக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள். வேறு சிலர், தங்கள் கட்டிடங்களில் வாடகைக்கு இருப்பவர்களுடனோ அல்லது உரிமையாளர்களுக்கு இடையிலோ நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது; ஆகவே, தங்களால் இடிக்க முடியவில்லை என்று சொல்லிவருகிறார்கள். ஆக, மாநகராட்சி சிதிலமடைந்ததாக இனங்கண்ட கட்டிடங்களில் பல இடிக்கப்படவில்லை. இதிலுள்ள சட்டப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கட்டும். இதன் பொறியியல் கூறுகளைப் பார்க்கலாம்.
எது சிதிலமடைந்த கட்டிடம்?
- ஒரு கட்டிடத்தின் ஆயுள் எத்தனை ஆண்டுகள்? கான்கிரீட் கட்டிடங்களின் வடிவமைப்பு ஆயுள் (design life) 50 ஆண்டுகள்.அதாவது, விதிநூல்களின்படி தரமாகக் கட்டப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்ட ஒரு கான்கிரீட் கட்டிடத்தின் குறைந்தபட்ச ஆயுள் 50 ஆண்டுகள். தரமான கட்டிடங்கள் விதிக்கப்பட்ட 50 ஆண்டுகளைவிட அதிகக் காலமும் நீடித்திருக்கும். செங்கற்களாலும் கருங்கற்களாலும் சுண்ணாம்புக் காரையாலும் கட்டப்பட்ட கட்டிடங்கள் பொதுவாக கான்கிரீட் கட்டிடங்களைவிட நீடித்து உழைக்கும்.
- பட்டாளம் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் கான்கிரீட் புழக்கத்தில் இருந்திருக்காது. சுண்ணாம்புக் காரையால் கெட்டிக்கப்பட்ட தளங்கள் (slabs), அவற்றைத் தாங்கும் உத்தரங்கள், உத்தரங்களைத் தாங்கும் செங்கல் சுவர்கள் என்பதாக அந்தக் கட்டிடத்தின் பாரப்பாதை (load path) அமைந்திருக்கலாம்.
- பாரிமுனைக் கட்டிடத்தை அதன் கட்டுமானக் காலத்தை வைத்து மதிப்பிடும்போது அதில் கான்கிரீட் தூண்களும் உத்தரங்களும் இருந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனால், கான்கிரீட் தளங்கள் இருந்திருக்கலாம். அவற்றைச் செங்கல் சுவர்கள் தாங்கியிருக்கலாம்.
- ஒரு கட்டிடத்தின் வயதை வைத்து மட்டும் அது சிதிலமடைந்ததாகச் சொல்லிவிட முடியாது. தரமாகக் கட்டப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்பட்டுவரும் கட்டிடங்கள் நூறாண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோலக் கட்டுமான, பராமரிப்புக் குறைபாடுகளால் ஆயுள் குறைந்த கட்டிடங்கள் விரைவில் பழுதடையும். பழுதடைந்த கட்டிடங்களைத் திருத்தப் பணிகள் மூலம் மேம்படுத்தலாம்.
- ஆனால், திருத்தப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையை எட்டிய கட்டிடங்களும் இருக்கும். பொறியியல் ஆய்வில் அது தெரியவரும். அவைதான் சிதிலமடைந்த கட்டிடங்கள். அவற்றை இடித்தே தீர வேண்டும். அது கட்டிடங்களில் வசிப்பவர்களின் பாதுகாப்புக்காக மட்டுமல்ல, அயலில் வசிப்பவர்களுக்கும் சாலைப் பயனர்களுக்கும் அவசியமானது.
என்ன செய்யலாம்?
- முதலாவதாக, அரசு வல்லுநர் குழுஒன்றை அமைத்து, பாரிமுனை விபத்துக்கான காரணங்களை ஆராயலாம். அந்தக் கட்டிடம் சிதிலமடைந்திருந்ததா? அது உரிமையாளருக்கும் பொறியாளருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் தெரியவில்லையா? அந்தக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டவை திருத்தப் (repair) பணிகளா, சீரமைப்புப் (retrofit) பணிகளா? அதற்கான வரைபடங்களைத் தயாரித்தது யார்? கட்டிடத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டதா? பணிகளின்போது ஏதேனும் பாரம்தாங்கும் சுவர்களின்மீது (load bearing walls) தவறுதலாகக் கை வைத்துவிட்டார்களா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இந்தக் குழு கண்டறிய வேண்டும்.
- இரண்டாவதாக, எந்தக் கட்டிடமாக இருந்தாலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் வரைபடங்கள், கணக்கீடுகள் முதலானவற்றைச் சமர்ப்பித்து, மாநகராட்சியின் ஒப்புதல் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அடுத்ததாக, நகரின் சிதிலமடைந்த கட்டிடங்களைப் பட்டியலிட்டு, அவற்றை இடிப்பதற்கான அறிவிக்கைகளை வெளியிட வேண்டும்.
- சிதிலமடைந்த கட்டிடங்களைப் பொறியியல் ஆய்வின் வழியாக இனங்காணப் பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்பை நாடுவோம் என்று சொல்லியிருக்கிறார் மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர். கல்விப் புலத்திலும் களப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் கட்டுமானப் பொறியாளர்களையும் இந்தப் பணியில் இணைக்கலாம்.
- பொறியியல் ஆய்வின் அடிப்படையில் பழுதுபார்க்க வேண்டிய கட்டிடங்களையும் சிதிலமடைந்த கட்டிடங்களையும் தனித்தனியே பட்டியலிட வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முன்னதில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளவும், பின்னதைத் தகர்க்கவும் ஆணை பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக இப்போதுள்ள சட்டங்களை மேம்படுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர்கள் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொள்வதைத் தடுக்க வேண்டும்.
உறுதிப்பாட்டுச் சான்றிதழ்:
- கடைசியாக, தனியார் கட்டிட உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் கட்டிடங்களுக்கான உறுதிப்பாட்டுச் சான்றிதழ் (stability certificate) பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். இந்தச் சான்றிதழ்களை வழங்கத் தகுதிவாய்ந்த கட்டுமானப் பொறியாளர்களை அரசு அங்கீகரிக்கலாம். இவர்களுக்குக் கட்டிட உரிமையாளர்கள் வழங்க வேண்டிய ஊதியத்தையும் அரசே நிர்ணயிக்கலாம்.
- உறுதிப்பாட்டுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு ஈராண்டுகளுக்கு ஒருமுறையும், முப்பது ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் இந்தச் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கலாம்.
- பெரம்பூர் பாரக்ஸ் சாலை, பட்டாளம் என்பவை காரணப் பெயர்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸ் ராணுவத்தின் முகாம் அமைந்திருந்த பகுதிகள் அவை. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வணிகம் செய்யவந்த ஆர்மேனியர்களின் பெயரால் அமைந்த தெருதான் தமிழரின் பேச்சு வழக்கில் அரண்மனைக்காரன் தெரு ஆகியது. சென்னை நகரம் தொன்மையானது. அதன் தெருக்கள் பலவும் வரலாற்றை ஏந்தி நிற்கின்றன.
- அதில் பழைய கட்டிடங்கள் இருக்கவே செய்யும். அவை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதற்குப் பழைய கட்டிடங்களைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிதிலமடைந்த கட்டிடங்களை அடையாளப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் வேண்டும். அது சென்னைக்கு நாம் செய்யும் மரியாதை!
நன்றி: தி இந்து (10 – 05 – 2023)