TNPSC Thervupettagam

பாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை

August 23 , 2023 507 days 301 0
  • ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற வகையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் சீனமும் நட்பாக இருந்து வந்தாலும் இந்த நட்பு, இரு நாடுகளுக்கும் பெரிய பலனைத் தந்துவிடவில்லை; மக்களிடமும் இது நெருக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணங்களை அறிவது, நாடுகளுக்கு இடையிலான நட்பு என்பது இரு தரப்பு ஒப்பந்தங்களாலும் ராணுவக் கூட்டுகளாலும் ஏற்பட்டுவிடாது என்பதைப் புரியவைக்கும். பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் ‘டான்’ நாளிதழிலேயே இந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. அதன் சுருக்கம்:
  • சீன மக்கள் குடியரசு என்ற நாடு உதயமான உடனேயே அதை அங்கீகரித்த நாடுகளில் பாகிஸ்தான் முதன்மையானது; மிகத் தீவிரமாகச் சிந்தித்தும், கொள்கைகள் அடிப்படையிலும் சீனத்துடன் நீண்ட காலமாகவே நட்பாக இருக்கிறது பாகிஸ்தான். எந்தவிதச் சூழலிலும் தொடரும், காலத்தை வென்ற இந்த நட்பு சமூக – பொருளாதார தளங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் வலுவாக எழுப்பப்பட்டிருக்கிறது. தடையற்ற வர்த்தக உடன்பாட்டை 2006இல் செய்துகொண்ட பிறகு பாகிஸ்தானுடன் அதிக பணமதிப்பில் வர்த்தக உறவுள்ள நாடாக சீனம் வளர்ந்திருக்கிறது.
  • ‘சீன – பாகிஸ்தான் பொருளாதாரக் கூடம்’ (சிபிஇசி) என்ற பெயரில் செய்துகொள்ளப்பட்ட பல கோடி டாலர்கள் மதிப்பிலான அடித்தளக் கட்டமைப்பு – வளர்ச்சி திட்ட ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • பாகிஸ்தானில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், சமையல் எரிவாயு – எண்ணெய் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல நீண்ட தொலைவுக்கான குழாய்ப் பாதைகள், தொழிற்சாலை உற்பத்திக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், இன்னும் இதுபோல பல கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர சீனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது பாகிஸ்தான்.

தொடரும் மன இடைவெளி

  • பாகிஸ்தானின் பங்குச் சந்தையில் பரிமாறிக்கொள்ளப்படும் நிறுவனப் பங்குகளில் 40% மதிப்புள்ளவை, சீன முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டவை. சீன நிதிப் பரிமாற்ற நிறுவனங்கள், ஷாங்காய் பங்குச் சந்தை, ஷென்சென் பங்குச் சந்தை போன்ற பெரிய அமைப்புகளே இப்படி வாங்கியுள்ளன. இந்த அளவுக்கு வலுவான பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட பிறகும் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான தொழில் கூட்டுத் திட்டங்கள் வலுப்படவில்லை.
  • அப்படி நிகழ்ந்திருந்தால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளும், பாகிஸ்தானின் வெவ்வேறு துறைகளில் இலக்கு சார்ந்த முதலீடும், உற்பத்திக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப பரிமாற்றங்களும், உற்பத்தி – வாணிபம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் பெருமளவில் இடம் பெற்றிருக்கும்.
  • இரு நாடுகளுக்கும் இடையில், இரு நாடுகளின் தொழில் துறைகளுக்கும் இடையில் - ஏன் மக்களுக்கும் இடையிலேயேகூட பல்வேறு அடுக்குகளில் தயக்கமும் எதிர்ப்பும் ஆர்வமின்மையும் அச்சமும் நிலவுவதால் எதிர்பார்த்தபடி இந்த ஒத்துழைப்பு வலுவாகவும் பயன் தரும் விதத்திலும் இல்லை.
  • பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் மன இடைவெளி காணப்படுகிறது, இது பாகிஸ்தானின் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு முக்கியத் தலைவலியாகிவிட்டது. போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழில்நுட்ப – நுண்ணறிவுத் துறைகளிலும், தகவல் தொழில்நுட்பத்திலும் பாகிஸ்தான் முன்னேற வேண்டியது நிறைய இருக்கிறது. அதன் முதலீடும் திட்டமிடலும் செயலாற்றலும் போதவில்லை.
  • பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மேற்கத்திய நாடுகளில் பயின்றவர்கள் என்பதால் (அந்தந்த நாடுகளின் குடியுரிமையுடன்) அதே மனோபாவத்தில் தொடர்கின்றனர். அவர்களுடைய மேட்டிமைக் கண்ணோட்டமும், பிரிட்டிஷ் காலனியாதிக்கம் ஏற்படுத்தி வைத்த நிர்வாக நடைமுறைகளின் நீட்சியும், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைகளாகத் தொடர்கின்றன.

சோஷலிஸம்

  • சீனத்தில் டெங் சியோபிங் 1978இல் கொண்டுவந்த புரட்சிகரமான பொருளாதார – நிர்வாக மாற்றங்களால் சீன அரசு அதிகாரிகளின் மனோபாவம், நிர்வாக நடைமுறை அனைத்தும் மாறின. இது தொடர்பாக, “பூனை கறுப்பா, வெளுப்பா என்பது முக்கியமில்லை – அது எலியைப் பிடித்தால் போதும்” என்ற டெங்கின் மேற்கோள் உலகம் முழுவதும் பிரசித்தம்.
  • சீனத்தில் ஆட்சியாளர்கள் தாங்கள் எட்ட விரும்பும் இலக்கை அடைய, வழிமுறை சோஷலிஸம் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் முதலாளித்துவ வழிமுறைகளையும் தயக்கம் இன்றிக் கையாளுகின்றனர். ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் நீதித் துறையும் ஏற்படுத்திவரும் தடங்கல்கள் சீன அரசுக்குக் கோபத்தையும் கடும் எரிச்சலையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.
  • உள்நாட்டில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தவறுவதால், சீனத்துக்கு அது பெருத்த அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்காக சீனர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தாக்குகிறார்கள். ஆயுதம் ஏந்திய தீவிரவாத கும்பல்கள் சீனர்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றன, பணம் தர மறுத்தால் அங்கு எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று விரட்டுகின்றன.
  • பாகிஸ்தானின் மேற்குப்புற எல்லை (ஆப்கானிஸ்தான் – ஈரானை ஒட்டியது) மிகவும் ஆபத்தானதாகி விட்டது. அங்கே ஏராளமான பயங்கரவாத கும்பல்கள் தனித்தனியாக செல்வாக்குடன் இயங்குகின்றன. சீன முதலீட்டுக்கு மட்டுமல்ல, கூட்டு ஒப்பந்தங்களின்படி வேலை செய்யும் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்ற நிலை ஆங்காங்கே நிலவுகிறது.

அரசியல் கட்சிகளின் நிலை

  • பாகிஸ்தானின் அரசியல் கட்சிகளாவது இரு நாடுகளின் தூதகர உறவுகளைப் பயன்படுத்தி அரசியல் உறவுகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கலாம். பாகிஸ்தானில் உள்ள எந்தப் பெரிய அரசியல் கட்சியும் சோஷலிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கையோ ஆர்வமோ கொண்டவை அல்ல. அங்கே மதம் சார்ந்த அணுகுமுறைக்குத்தான் மக்களிடையே ஆதரவு என்பதால், சீனத்துடன் சித்தாந்தரீதியாக இணக்கமாகச் செல்லும் கட்சி எதுவுமில்லை.
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியோ சோஷலிஸ சித்தாந்த அடிப்படையில் எல்லாவற்றையும் தீர்மானித்து அமல்படுத்துவதால், அரசியல் கள ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லை.

இடதுசாரிகளுக்கு எதிர்ப்பு

  • பாகிஸ்தான் என்ற நாடு தோன்றிய காலத்திலிருந்தே அமெரிக்காவுடன் நட்பை வளர்த்துக் கொண்டது, தெற்காசிய ஒப்பந்த அமைப்பின் உறுப்பினரானது. ஆசியாவின் கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிராகவே, முதலாளித்துவ நாடுகளின் கண் ஜாடைப்படி செயல்பட்டு வந்தது. அதுபோக நாட்டுக்குள்ளேயே அடிக்கடி ஆட்சிக் கவிழ்ப்புகளும் ராணுவப் புரட்சியும் தொடர் கதைகளாகி விட்டன.
  • அப்படி மாற்றாக ஏற்படும் அரசுகள் எதுவுமே இடதுசாரிகளை எதிரிகளாக பாவித்து, கடுமையாக ஒடுக்கிவந்ததால் பாகிஸ்தானில் இடதுசாரி சித்தாந்தத்துக்கு ஆதரவு கிடையாது.
  • ஏழ்மை, சமத்துவமின்மை, ஊழல், ஊதாரித்தனம், தவறான நிர்வாகம், வளர்ச்சி திட்டங்களில் அக்கறையற்றத்தன்மை ஆகியவற்றால் பாகிஸ்தானில் மக்கள் எப்போதுமே அமைதியற்ற வாழ்க்கைதான் வாழ்கின்றனர். எனவே, அவர்களை உணர்ச்சிவசப்பட வைப்பது தலைவர்களுக்கு எளிதாகிவிடுகிறது.
  • அரசியல் முழக்கங்களைப் புதிது புதிதாக கண்டுபிடித்து எழுப்பி அதன் மூலமே பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்று நம்ப வைக்கின்றனர். எனவே, இருதரப்பு ஒப்பந்தங்கள் பலன் தர வேண்டும் என்றால் அரசியல் தளத்தில் பாகிஸ்தான் மேலும் செயல்பட்டாக வேண்டும்.

சீன நிறுவனங்கள்

  • தொழில் துறையில் சீனம் இரண்டு வளர்ச்சி மேடைகளைத் தனித்தனியே கொண்டுள்ளது. அதில் ஒன்று சீன அரசுத் துறை நிறுவனங்கள், இன்னொன்று சீன தனியார் நிறுவனங்கள். சீனத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக அமைதியிலும் அரசுத் துறை நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால் சீனத்தில் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகிறது.
  • மின்சார உற்பத்தி, போக்குவரத்து, தொலைத்தகவல் தொடர்பு ஆகியவற்றில் சீன அரசு நிறுவனங்கள் வலுவாக இருக்கின்றன. பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்பத் துறை வளரவில்லை, கல்விப்புலமும் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பின் தங்கியிருக்கிறது. இதனால் திறமையுள்ள ஊழியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, எண்மப் பொருளாதாரத்தை (டிஜிட்டல் எகானமி) கட்டமைக்க பாகிஸ்தானால் முடியவில்லை. இந்தக் காரணத்தால் சீனத்தாலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட முடியவில்லை.
  • சீனத் தனியார் துறை மின்னணுவியல், மின்னியல், ஜவுளி, தொழில்நுட்பம், மின் வணிகம் ஆகியவற்றில் உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கின்றன. அலிபாபா, டென்சென்ட், ஹுவாவே அதில் முக்கியமானவை.
  • பாகிஸ்தானின் தனியார் துறைக்கு இதில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் வலிமை இல்லை. அதற்கு மாறாக, சீனத்திடமிருந்து நேரடி அன்னிய முதலீட்டை இந்தியத் தனியார் துறை இதே காலத்தில் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

மொழி மிகப் பெரிய தடை

  • சீனமும் பாகிஸ்தானும் நெருங்க முடியாதபடிக்கு இரு நாடுகளின் மொழிகளும் மிகப் பெரிய தடையாக இருக்கின்றன. பாகிஸ்தான் உருது, பஷ்டூன், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளைப் பேசும் நாடு. படித்தவர்களிடையே ஆங்கிலம் பிரபலம். சீனத்திலோ மண்டாரின்தான் முக்கியம். இப்படி மொழி மட்டுமல்ல இனம், மதம், கலாச்சாரம் ஆகியவையும் பிற காரணிகளாக இருக்கின்றன.
  • பிற நாடுகளின் மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை ஏற்கும் பக்குவம் பெற பாகிஸ்தானியர்களுக்கு நிறைய கற்றுத்தர வேண்டியிருக்கிறது. இதனாலேயே சீனர்களுக்கு பாகிஸ்தானில் தங்கி வேலை பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
  • (சமீபத்தில் ஒரு சீன அதிகாரி, ரம்ஜான் பண்டிகைக்காக அனைவரும் தொழுகைக்குப் போய்விட்டுத் திரும்பியபோது, ஏன் அடிக்கடி போகிறீர்கள், அதுவும் நிறைய நேரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டதை மத நிந்தனைக் குற்றம் செய்துவிட்டதாகக் கூறி மற்ற பாகிஸ்தானியர் அவரை அடிக்கப் போக, காவல் துறையினர் உரிய நேரத்தில் வந்து அவரை மீட்டு காவலில் வைத்தனர். இது சீன அரசுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது).
  • இப்படிப் பல காரணங்களால் ஆண்டாண்டு காலமாக நட்பு நாடாகத் தொடர்ந்தாலும் சீன – பாகிஸ்தான் உறவு பெரிய அளவுக்குப் பலன் தராமல் இருக்கிறது.

நன்றி: அருஞ்சொல் (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories