TNPSC Thervupettagam

பாகுபாட்டை மறுதலிக்கும் அரசமைப்பு அறம்

November 26 , 2024 2 hrs 0 min 18 0
  • உலகின் மிக நீண்ட நெடிய இந்திய அரசமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய அவையில் ஏற்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகின்றன. இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி; கருத்து, நம்பிக்கை, வழிபாட்டுக்குரிய சுதந்திரம்; சட்டத்தின் முன் சமத்துவமும் சம வாய்ப்பும்; தனிமனித மாண்பை வலியுறுத்தும் சகோதரத்துவம், தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படும் என்று அரசமைப்பின் அடிநாதமாகத் திகழும் முகப்புரை அறிவிக்கிறது.

அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்:

  • தனிமனிதனின் மாண்பைக் காப்பாற்று​வ​தில்தான் இந்நாட்டின் மேன்மை பறைசாற்​றப்​படு​கிறதே தவிர, பண்டைய நாகரிகப் பெருமிதங்​களிலோ, எதிர்கால வல்லரசுக் கனவுகளிலோ அல்ல. அதனால்தான் தனிமனித மாண்பையும் சமத்து​வத்​தையும் அரசமைப்பின் முகப்பு​ரையில் அம்பேத்கர் இடம்பெறச் செய்தார். முடியரசுகளின் கீழும் அந்நியர் ஆக்கிரமிப்பு​களாலும் ஆட்பட்​டிருந்த இம்மண்​ணில், எண்ணற்ற சட்டங்கள் வகுக்​கப்​பட்​டிருப்​பினும் அவை இங்கு புரையோடிப்​போ​யிருந்த சாதிய சமூக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்க​வில்லை. முதன்​முறையாக, சாதிப் பாகுபாட்டை ஏற்க மறுத்த அரசமைப்புச் சட்டம் இந்த வகையில்தான் ஒரு முதன்​மையான சமூக ஆவணமாக மிளிர்​கிறது.
  • நம்முடைய அரசமைப்புச் சட்டம் உருவாக்​கப்​படும் வரை, ஒருவர் என்ன சாதியில் பிறந்​திருக்​கிறார் என்பதை அளவுகோலாகக் கொண்டே அவருடைய தகுதி வரையறுக்​கப்​பட்டு, அவருடைய பிறப்பு​ரிமையான வாக்குரிமையும் இன்ன பிற உரிமை​களும் தீர்மானிக்​கப்​பட்டன. இதை நிராகரித்து, இந்நாட்டில் பிறந்த ஒருவர் எவ்விதப் பிறவிப் பாகுபாடும் இன்றி - முற்றும் முதலுமாக - ஒரு மனிதராக அங்கீகரிக்​கப்​படு​கிறார்; அவருக்கு ஒரு மதிப்பு இருக்​கிறது; வயது வந்ததும் அவருக்கு ஒரு வாக்கு இருக்​கிறது என்பதை அம்பேத்கர், ‘ஒரு மனிதன் - ஒரு மதிப்பு - ஒரு வாக்கு’ என்றார். இதுவே நம் அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய தலைசிறந்த அங்கீகாரமாகும்.
  • அரசமைப்புச் சட்டம் உருவாக்​கப்​படு​வதற்கு முன்பும், தற்போது சட்டரீ​தி​யாகத் தேர்ந்​தெடுக்​கப்​படும் பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்திக்கும் தீண்டாமைக் கொடுமைகள் நாள்தோறும் செய்தி​யாக்​கப்​படும் இன்றைய சூழலிலும், கிராமங்களே அமைதிக்கும் ஜனநாயகப் பண்புக்கும் பிறப்​பிட​மாகப் போற்றப்​படு​கின்றன. ஆனால் இதை ஏற்க மறுத்த அம்பேத்கர், ‘இந்திய நாட்டின் அழிவுக்குக் கிராமக் குடியரசுகளே பொறுப்பு. வட்டார, வகுப்பு​வாதப் போக்கு​களைக் கண்டிப்​பவர்கள், கிராமங்​களைத் தூக்கிப் பிடிப்​பவர்களாக இருப்பது வியப்​பளிக்​கிறது.
  • வட்டார வெறியின் கழிவுத்​தொட்​டி​யாகவும் அறியாமை நிறைந்த இருள் குகையாகவும் குறுகிய மனப்பான்மை, சாதியத்தின் பிறப்​பிட​மாகவும் உள்ளதுதானே கிராமம்? எனவேதான் கிராமத்தை ஒதுக்​கி​விட்டு, அரசமைப்புச் சட்டம் தனிமனிதனைத் தன்னுடைய அடிப்படை அலகாகக் கொண்டுள்ளது’ என்று நாடாளு​மன்​றத்தில் எடுத்​துரைத்தார் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:13; பக். 62).

சிவில் சமூகத்தின் கடப்பாடு:

  • அரசமைப்புச் சட்டத்தைக் கையளித்து நவம்பர் 25, 1949 அன்று நாடாளுமன்ற அவையில் அம்பேத்கர் ஆற்றிய வரலாற்று முக்கி​யத்துவம் வாய்ந்த பேருரை, நம் கல்விக்​கூடங்​களின் பாடத்​திட்டம் ஆக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் தயாரிக்​கப்​பட்​டபோது எழுந்த சவால்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்டம் அடிப்​படை​யாகக் கொண்டிருப்​ப​தற்கான நியாயம், அரசமைப்புச் சட்டம் முன்மொழியும் அடிப்படை உரிமைகள் ஏன் எவ்வித நிபந்​தனையும் இன்றி இருக்க வேண்டும் என்பதற்கான தர்க்கம், பிற நாட்டின் அரசமைப்புச் சட்டங்​களுக்கும் நம் நாட்டுச் சட்டத்​துக்​குமான ஒப்பீடு, 2,473 சட்டத் திருத்​தங்கள் செய்யப்​பட்​டதற்கான காரணங்கள், கூட்டாட்சித் தத்துவம் குறித்த தெளிவான விளக்கம், மத்திய - மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் என முற்பகுதி உரை அமைந்​திருக்​கிறது.
  • அம்பேத்கர் உரையின் பிற்பகுதி, நாம் இதுவரை கவனப்​படுத்​தி​யிராத சிவில் சமூகத்தை நெறிமுறைப்​படுத்து​வதற்​கானது. நாம் அரசியல் ஜனநாயகத்தோடு நிறை வடைந்​து​விடக் கூடாது; நம்முடைய அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாக மாற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தும் அம்பேத்கர், அடித்​தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாது போனால், அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்காது என்கிறார்.
  • தவிர, சமூக ஜனநாயகம் என்பது சுதந்​திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையே வாழ்க்கையின் அடிப்​படைக் கொள்கைகளாக அடையாளப்​படுத்தும் ஒரு வாழ்க்கை முறை என்றும், அவற்றைத் தனித்​தனியாக விளங்​கிக்​கொள்ளக் கூடாது என்றும் சுதந்​திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்பவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை; ஒன்றி​லிருந்து மற்றொன்றைப் பிரித்து​விட்​டால், ஜனநாயகத்தின் அடிப்​படையே வீழ்த்​தப்​படும் என்றும் அம்பேத்கர் எச்சரிக்​கிறார்.
  • தீண்டாமை அதன் அனைத்து வடிவங்​களிலும் ஒழிக்​கப்​படு​கிறது என்று சட்டத்தில் இடம்பெற்றுக் குற்ற​மாகவும் ஆக்கப்​பட்டு, அது ஒரு பாவம் என்று பள்ளிக்​கூடங்​களில் கற்பிக்​கப்​படும் நிலையிலும் அது முற்றாக ஒழிக்​கப்​பட​வில்லை என்ற ஆதங்கத்​தால், 75 ஆண்டு கால இந்தியக் குடியரசு திகைத்து நிற்கிறது.
  • அன்றாடம் சக மனிதர்கள் மீது தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமை நடக்கும்​போதெல்லாம் அரசாங்கம், நிர்வாகம், காவல் துறை, ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மீதான விமர்சனம் என்கிற அளவில் சிவில் சமூகம் நிறை வடைந்​து​விடு​கிறது. தவிர, சட்டம் தீவிரமாக நடைமுறைப்​படுத்​தப்பட வேண்டும்; குற்ற​வாளி​களுக்குக் கடும் தண்டனை உறுதிப்​படுத்​தப்பட வேண்டும்; பாதிக்​கப்​படும் பட்டியல் சாதியினருக்கு விழிப்பு​ணர்வு அளிக்​கப்பட வேண்டும் என்றெல்லாம் பரிந்​துரைக்கும் சிவில் சமூகம், தனக்கான கடப்பாட்டை மட்டும் கடைப்​பிடிக்கத் தவறுகிறது.
  • கிராமங்​களில் வெளிப்​படை​யாகவும் (மா)நகரங்​களில் நுட்ப​மாகவும் சாதிப் பாகுபாட்டைக் கடைப்​பிடிக்கும் சிவில் சமூகம், உலக அளவிலும் அகமணங்​களைக் குற்ற​மாகக் கருது​வ​தில்லை என்பதோடு, அதை நியாயப்​படுத்​தவும் செய்கிறது. பிறப்பின் அடிப்​படையிலான சாதியை அடிப்படை அலகாகச் சட்டம் நிராகரித்த பிறகும், அதையே திருமண விளம்​பரங்​களில் முன்னிலைப்​படுத்த சிவில் சமூகம் கிஞ்சித்தும் வெட்கப்​படு​வ​தில்லை.
  • சமூகத்தின் ஒரு பிரிவினரை வெறுத்து ஒதுக்குவது (Social ostracisation) மரண தண்டனையை​விடக் கொடூர​மானது என்பார் அம்பேத்கர். ஆனால், ஜனநாயகத்​துக்கு எதிரான சிவில் சமூகத்தின் போக்கைத் தண்டிப்​ப​தற்கு இங்கு எந்தச் சட்டமும் இல்லை. தவிர, சிவில் சமூகத்தின் பிரதி​நி​தி​கள்தான் சட்டத்தை நிறைவேற்றும் அலுவலர்​களாகவும் வலம் வருகின்றனர்.
  • காலங்​காலமாக அரசு/ அரசியல் மீது பழியைச் சுமத்தும் சாதியச் சமூகம், தன்னைக் குற்றநீக்கம் செய்து​ கொள்​ளும்வரை, அம்பேத்கர் சுட்டிக்​காட்​டியது போல, ஜனநாயகமற்ற இந்திய மண்ணில் ஜனநாயகம் என்பது மேற்பூச்சாக மட்டுமே இருக்​கும். தீண்டாமையை மட்டுமே குற்ற​மாக்கி, சாதியைப் பண்பாடாக ஆராதிக்கும் நிலையே அரசமைப்பின் துடிப்பான செயல்​பாட்டுக்குத் தடையாக இருக்​கிறது. இத்தருணத்​தில், சமூகத்தின் தார்மிக மனசாட்​சி​யால்தான் உரிமைகள் பாதுகாக்​கப்​படு​கின்றனவே தவிர, சட்டங்​களால் அல்ல என்ற அம்பேத்​கரின் கூற்றை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அரசமைப்பு அறம்:

  • இறுதியாக, அரசமைப்பு அறத்தைத் தீர்வாக முன்னிறுத்தும் அம்பேத்கர், வேறு சில ஆபத்துகளையும் சுட்டு​கிறார்: ‘அரசமைப்புச் சட்டம் அமைதி வழியில் செயல்​படுத்​தப்​படு​வதற்கு அரசமைப்பு அறம் (Constitutional morality) வளர்த்​தெடுக்​கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்​கொண்​டாலும், அத்துடன் பின்னிப் பிணைந்​துள்ள இரு செய்தி​களைப் பொதுவாக ஏற்க மறுக்​கிறோம்.
  • ஒன்று, ஒரு நாட்டின் அரசமைப்பும் நிர்வாக அமைப்பு முறையும் நெருங்கிய தொடர்​புடைய, ஒத்திசைவோடு பயணிக்க வேண்டியவை. மற்றொன்று, நிர்வாக அமைப்பு முறையின் வடிவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் வழியாக, அரசமைப்புச் சட்டத்தின் வடிவத்தையே மாற்றியமைத்து, அதைச் செயலற்றதாக மாற்றி​விடக்​கூடிய சாத்தி​யப்​பாடும் இருக்​கிறது.
  • இது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்​படைக்கே எதிரானது’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:13; பக். 60). அரசமைப்பின் அடிப்​படையைக் காக்கும் பொறுப்பை நமக்கு உணர்த்தும் வகையில், பாரெங்கும் நெடிதுயர்ந்து நிற்கும் அம்பேத்​கரின் கரங்களில் தவழும் அரசமைப்புச் சட்டம் - சாதிய மனப்பாங்கை மறு​தலித்து - அரசமைப்பு அறத்தை நம் சமூக ​வாழ்க்கை ​முறைப் பண்​பாடாக வளர்த்​தெடுக்க வேண்டிய அவசியத்தையே நொடிதோறும் உணர்த்துகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories