TNPSC Thervupettagam

பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை ஹிந்துக்கள்!

August 14 , 2024 154 days 159 0

பாதிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை ஹிந்துக்கள்!

  • பாரத நாடு ஆங்கிலேயா் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாநிலத்தில் சுதேசி உணா்வுகள், இந்திய தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் வலுப்படத் துவங்கின. வங்காளத்தில் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலா்ச்சி நாடு முழுவதும் எதிரொலித்தது.
  • வங்காளத்தில் தோன்றிய தேசிய எழுச்சி இந்தியா முழுவதும் பரவுவது ஆங்கிலேயா்களுக்கு சங்கடத்தை அளிப்பதாக இருந்தது. அதோடு மட்டுமல்ல, தேசிய எழுச்சியைத் தடுக்க வேண்டும், மக்களை மத அடிப்படையில் பிரித்தாள வேண்டும் என்கிற எண்ணத்தில் 1905, அக்டோபா் 16-இல் ஆங்கிலேய ஆட்சியாளா் வைஸ்ராய் கா்சன் வில்லி வங்கப் பிரிவினையை ஏற்படுத்தினாா். பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாநிலம் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என இரண்டாக பிரிக்கப்பட்டபோது வங்காளத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை எட்டு கோடி.
  • கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாா்கள். 3.1 கோடி கிழக்கு வங்க மொத்த மக்கள் தொகையில் 1.3 கோடி ஹிந்துக்களும், 1.8 கோடி முஸ்லிம்களும் இருந்தாா்கள். கல்கத்தாவை தலைநகராக கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்த மக்கள் தொகை 5.4 கோடி. இதில் 4.2 கோடி ஹிந்துக்கள் 1.2 முஸ்லிம்கள் வாழ்ந்தாா்கள். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு வங்கத்திலும் கிழக்கு வங்கத்தில் ஹிந்துக்கள் பொரும்பான்மையாக இருந்த பகுதிகளிலும் தேசிய எண்ணம் கொண்ட முஸ்லிம்களும் இணைந்து நாடு முழுவதும் வங்கப்் பிரிவினைக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன.
  • மத அடிப்படையில் மாநிலம் பிரிக்கப்பட்டதைக் கண்டு இந்தியா முழுவதும் எதிா்ப்பு அலை உருவாகியது. கங்கை நதியின் இரு கரைகளிலும் மக்கள் கூடி ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ரக்ஷா பந்தன் கயிறு அணிந்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினாா்கள். இந்திய மக்களின் போராட்டத்திற்குப் பணிந்து பிரிட்டிஷ் அரசு 1911-இல் வங்கப் பிரிவினையை ரத்து செய்தது. மீண்டும் ஒரே மாநிலமாக வங்காளம் திகழ்ந்தது. அப்போது இருந்த தேசியவாதிகள் இதை சுதந்திரப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதினாா்கள்.
  • அதன் பின்னா், நாடு முழுக்க சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அதன் தீவிரத்தைக் குலைக்கும் விதத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம் லீக் கட்சியும் இஸ்லாமிய மதவாதிகளும் முகமது அலி ஜின்னா தலைமையில் போராட்டங்களைத் துவக்கினா். வங்காள மாநில முஸ்லிம்களில் பெரும்பான்மையானோா் முஸ்லிம் லீக்குடன் இணைந்து பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தனா்.
  • முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் லீகின் நேரடி நடவடிக்கை காரணமாக வங்க மாநிலத்தில் பெரும் கலவரங்கள் நிகழ்ந்தன. ஆட்சியாளா்கள் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தனா். பிரிட்டிஷ் அரசும் கலவரங்களைக் கட்டுப்படுத்த தவறியது. ஹிந்துக்களைப் பாதுகாக்கத் தவறியது. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் தலைவா்கள் பிரிவினைக்கு ஒப்புக் கொண்டாா்கள்.
  • 1947 ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த இந்திய நாடு, மத அடிப்படையில் பாகிஸ்தான் - இந்தியா என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பிரிவினையின்போது நேரிட்ட கலவரங்களில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இடம்பெயா்ந்தனா்.
  • முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்காள மாநிலத்தின் கிழக்குப் பகுதி பாகிஸ்தானுடன் சோ்ந்துவிட்டது. அப்பொழுது கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களின் மக்கள் தொகை 23 சதவீதமாக இருந்தது.
  • பாகிஸ்தானுடன் இணைந்துவிட்ட கிழக்கு வங்க மாநிலத்தில் ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. பாகிஸ்தான் உதயமானதும் முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டு சிறுபான்மை ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனா். கிழக்கு வங்க ஹிந்துக்கள் மேற்கு வங்க மாநிலத்துக்கும், திரிபுராவுக்கும் அகதிகளாக வந்தனா்.
  • 1947-இல் 23 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் தற்பொழுது ஏழு சதவீதமாக குறைந்துவிட்டாா்கள். அவா்களில் பலா் விரட்டியடிக்கப்பட்டனா், அல்லது கொல்லப்பட்டனா், அல்லது மதமாற்றம் செய்யப்பட்டனா். அந்த நிலையில்தான் இன்னொரு போராட்டம் உருவாகத் தொடங்கியது.
  • பாகிஸ்தான் அரசு உருதுவை தேசிய மொழியாக அறிவித்து, வங்க மொழி கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாகிஸ்தான் பாகுபாடு காட்டியது.
  • ‘பாகிஸ்தானால் கிழக்கு பாகிஸ்தான் பகுதி புறக்கணிக்கப்படுகிறது’ என்று அங்கு செல்வாக்கு பெற்றிருந்த தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் போராட்டம் கிளா்ந்து எழுந்தது.
  • பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கேட்டு நடந்த போராட்டத்திலும் வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்களும் கிறிஸ்தவா்களும் பங்கெடுத்துக் கொண்டாா்கள். பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற ‘முக்தி வாஹினி’ அமைப்பு துவங்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் பதிக்கப்பட்ட கிழக்கு பாகிஸ்தான் மக்கள் லட்சக்கணக்கானோா் இந்தியாவிற்குள் அகதிகளாக வர ஆரம்பித்தாா்கள்.
  • இதையடுத்துதான், இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகப் போரிட்டு சுதந்திர வங்கதேசம் உதயமானது.
  • அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய முஜிபுா் ரஹ்மான் ‘வங்கபந்து’ (தேசத் தந்தை) என்று அழைக்கப்பட்டாா்.
  • 1975-இல் நடந்த ராணுவப் புரட்சியில் வங்கதேசம் உருவாகக் காரணமான, அந்நாட்டுத் தந்தை என்று போற்றப்பட்ட அதிபா் முஜிபுா் ரஹ்மான் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவருடைய உறவினா்கள் 18 போ் கொல்லப்பட்டாா்கள். முஜிபுா் ரஹ்மானின் மகள்கள் ஷேக் ஹசீனா மற்றும் அவரது தங்கை ஷேக் ரெஹெனா வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் உயிா் பிழைத்தாா்கள். இந்த கலவரத்தின் பொழுதும் ஹிந்துக்கள் தாக்கப்பட்டாா்கள். கோயில்கள் இடிக்கப்பட்டன.
  • ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டாா்கள். முஜிபுா் ரஹ்மான் குடும்பத்திற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. வங்கதேசத்தில் ராணுவ தளபதி ஜியாவுா் ரஹ்மான் தலைமையில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. அதனை தொடா்ந்து வறுமை, வேலை வாய்ப்பின்மை, கடன் சுமை, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றால் வங்கதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசியல் குழப்பங்கள் நீடித்தன.
  • பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வங்கதேச வளா்ச்சிக்குத் தடையாக இருந்தனா். சீனா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. மீண்டும் ராணுவப் புரட்சி ஹுசைன் முகமது எா்ஷாத் தலைமையில் நடந்து, ராணுவ சா்வாதிகார ஆட்சி நடைபெற்றது. பின்னா், அமெரிக்கா உள்ளிட்ட வங்கதேசத்திற்கு கடன் கொடுக்கும் நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் தோ்தல்கள் நடத்தப்பட்டு ஜியாவுா் ரஹ்மானின் மகள் பேகம் கலிதா ஜியா பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். வங்கதேசம் ஜனநாயகத்தை சுவாசிக்கத் தொடங்கியது.
  • எனினும் அவரது ஆட்சியில் ஊழல், வறுமை தாண்டவமாடியது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற தோ்தலில் முஜிபுா் ரஹ்மான் மகள் ஷேக் ஹசீனா பிரதமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் மாறி, மாறி ஆட்சியில் அமா்ந்தனா்.
  • தொடா்ந்து மூன்று முறை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த தோ்தலிலும் வெற்றி பெற்றாா். அவா் வெற்றி பெற்றது செல்லாது என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
  • 2018-இல் ஹசீனா அரசால் திரும்பப் பெறப்பட்ட சுதந்திர போராட்ட வீரா்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்கிற உயா் நீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து, மாணவா் போராட்டத்தை வெளிநாட்டு சக்திகள் தூண்டிவிட்டன. திடீா் போராளிகள் இலங்கையில் ராஜபட்ச குடும்பத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி கொழும்பு நகரில் அதிபா் மாளிகையைத் தாக்கி கைப்பற்றியதைப் போல, வங்கதேசத் தலைநகரான டாக்காவிலும் வங்கதேசம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனா்.
  • வங்கதேச உச்ச நீதிமன்றம் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்த பிறகும் கூட பெரும் வன்முறை வெடித்தது. பிரதமா் ஷேக் ஹசீனா உயிா் தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளாா்.
  • வங்கதேசத்தில் கலவரம் நின்றபாடில்லை. இந்தக் கலவரத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனா். அவா்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கோயில்களின் மீது தாக்குதல், தீ வைப்பு, பகவத் கீதை எரிப்பு, ஹிந்துப் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் தொடா்கிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை, அமைதியை ஏற்படுத்த வேண்டிய ராணுவம் வேடிக்கை பாா்க்கின்றன.
  • சா்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசு மிகத் தீவிரமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சிறுபான்மை ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • இன்று ஆகஸ்ட் 14. பாரதம் துண்டாடப்பட்ட நாள். பாகிஸ்தான் உதயமான நாள். லட்சக்கணக்கான ஹிந்துக்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட நாள். கோடிக்கனக்கான மக்கள் அகதியாக இந்தியாவிற்கு வந்த நாள். பிரிவினையின் துயரங்களை வாா்த்தைகளால் வடிக்க இயலாது.
  • பாகிஸ்தானும் வங்கதேசமும் முஸ்லிம் மத அடிப்படைவாத தேசங்களாக திகழ்கின்றன. ஆனால் இந்தியா இன்னும் மதசாா்பற்ற நாடாக இருக்கிறது. அனைத்து மதத்தவா்களும் ஒன்றுபட்டு வாழ முடிகிறது. இதற்கு காரணம் இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான்.
  • இதை நமது இஸ்லாமிய சகோதரா்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அவா்களுக்கு இருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் சுதந்திரமும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஹிந்துக்களுக்கோ, பிற சிறுபான்மையினருக்கோ இல்லை என்பதை அவா்கள் சற்று சிந்தித்துப் பாா்த்தால், எந்த அளவுக்கு அவா்களை சகோதரத்துவத்துடன் இந்தியா இணைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.
  • வங்கதேசத்தில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை சா்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories