TNPSC Thervupettagam

பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான்

June 27 , 2020 1668 days 1365 0
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்1பி நுழைவு அனுமதி (விசா) குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தவில்லை.பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கும், பணியாற்றுவதற்கும் தடைகளை விதிப்பது குறித்த அவரின் அறிவிப்பு எதிர்பார்த்ததுதான்.
  • நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலின்போதே அவர் கொடுத்த வாக்குறுதிதான் இது.
  • நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நுழைவு அனுமதிக்குத் தடை

  • இந்த ஆண்டு முழுவதும் இனிமேல் வழங்க இருக்கும் ஹெச்1பி நுழைவு அனுமதிக்குத் தடை விதித்திருக்கிறார் அதிபர் டிரம்ப்.
  • பொது முடக்கத்தாலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் வேலை இழந்தவர்களுக்கும், வேலையில்லாதவர்களுக்கும் உதவுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
  • கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வேலையிழந்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டினருக்கு அந்த வேலையைக் கொடுக்க சில தொழில் நிறுவனங்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது அந்த அறிக்கை.
  • அமெரிக்காவில் ஹெச்1பி நுழைவு அனுமதி என்பது ஆறு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றவும், அந்தக் காலகட்டத்தில் சொந்தமாக அசையாச் சொத்துகளை வாங்கிக் கொள்ளவும் உரிமை வழங்குகிறது.
  • வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைவாய்ப்புத் தேடியும், பல்கலைக்கழகங்களில் படிக்கவும் செல்லும் இளைஞர்கள் இந்த நுழைவு அனுமதி வரம்பில் வருவார்கள்.
  • அதிபர் டிரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து சுமார் 5.25 லட்சம் பேர் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள்.
  • ஏற்கெனவே நுழைவு அனுமதி பெற்று அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்றாலும், வெளிநாடுகளுக்கோ தாய்நாட்டுக்கோ சென்றுவிட்டவர்கள், மீண்டும் அமெரிக்காவில் நுழைந்து பணியாற்றுவது இந்த ஆண்டு இறுதிவரை தடை செய்யப்பட்டிருக்கிறது.
  • இதுவரை வழங்கப்பட்டிருக்கும் 3.88 லட்சம் ஹெச்1பி நுழைவு அனுமதிகளில் சுமார் 2.78 லட்சம், அதாவது 78%, இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை.
  • தங்களது வர்த்தகத்தை அதிகரிக்கவும், புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவும் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஊழியர்களை அனுப்பும் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெசிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

அமெரிக்கா - அதிக பாதிப்பு

  • இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைவிட அதிகமாக பாதிக்கப்பட இருப்பது அமெரிக்காதான்.
  • அறிவியல் தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் அமெரிக்கா மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பது வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து குடியேறியவர்களால்தான்.
  • ஜாதி, மதம், இனம் பார்க்காமல் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் சூழல் அமெரிக்காவில் இருந்ததால், உலகெங்கிலும் இருந்து, குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து, அதிலும் இந்தியாவிலிருந்து படித்த இளைஞர்கள் பலர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
  • ஹெச்1பி நுழைவு அனுமதி நிறுத்தப்பட்டிருப்பது, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் உத்தி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
  • ஏனைய துறைகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 15%-க்கும் அதிகமாக இருக்கும்போது, தொழில்நுட்பத் துறையில் அது வெறும் 2.8% மட்டுமே. மேலும், கணினித் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை, விண்வெளி ஆய்வு, மருத்துவ ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட அமெரிக்கர்கள் இல்லை என்கிற நிலையில், இதனால் அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
  • அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாமல் போவதும், தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாமல் தடுக்கப்படுவதும், அண்டை நாடான கனடாவுக்கும், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும்தான் சாதகமாக மாறும்.

மயக்கம் தீரும்

  • இந்த வாய்ப்பை சீனாவும் பயன்படுத்திக் கொள்ளும். "சுயசார்பு இந்தியா' என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு, அதற்கேற்ற சூழலை ஏற்படுத்துமானால், நமது பலவீனத்தை பலமாக்கிக் கொள்ள இதுவே வாய்ப்பாகவும் அமையும்.
  • நோபல் பரிசு பெற்ற இந்தியர்களான ஹர்கோபிந்த் குரானா, எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமார்த்திய சென், அபிஜித் பானர்ஜி என்று அனைவருமே அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான்.
  • இந்தியாவில் இருந்திருந்தால் இவர்கள் வெற்றிகரமாக ஆராய்ச்சியை மேற்கொண்டு நோபல் விருது பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதற்கான சூழலை இந்தியா ஏற்படுத்தித் தருவதில்லை.
  • அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் உடனடி பாதிப்புக்கு உள்ளாவது மாணவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களின் பெற்றோரும் குழந்தைகளும்கூடத்தான்.
  • வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் ஹெச்1பி நுழைவு அனுமதி பெற்றுத் திரும்ப முடியாது.
  • அமெரிக்காவில் குடியேறியவர்களை ஒரே நொடியில் தனது எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப்.
  • 2019 செப்டம்பர் 22-இல் ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி. மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டு அமெரிக்கவாழ் இந்தியர்களின் ஆதரவைக் கோரிய அதிபர் டிரம்ப்பா இப்போது இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார் என்று வியப்படைய வேண்டாம்.
  • இனிமேல் எல்லா நாடுகளும் இதைத்தான் பின்பற்றப் போகின்றன. அதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தீரும்!

நன்றி: தினமணி (27-06-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories