- பணம்தான் எல்லாம் என்றாகிவிட்ட காலம் இது. வாழ்க்கைத் தரத்தை நிணயிக்கும் சக்தி மிக்க கருவியாகப் பணமே உள்ளது. இதனால் பணம் சோ்க்கும் கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது. உழைப்பு வருவாயைத் தருகின்றது. எனவே வேண்டிய அளவுக்கு உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஆணும் பெண்ணும் அயராது உழைப்பது அவசியமாகிவிட்டது.
- வெறும் சம்பாத்தியத்தால் மட்டும் பணம் பெருகிவிடுவதில்லை. சிக்கனமும் சேமிப்பும் இருந்தால்தான் பணத்தைப் பெருக்க முடிகிறது. இதனால் சம்பாதிப்பதைச் சிக்கனமாகச் செலவு செய்து, மீதத்தைச் சேமித்து வைக்க வேண்டியுள்ளது. கடுமையாக உழைத்துச் சம்பாதிப்பதில் பயனில்லை; உழைத்துப் பெற்றதைப் பத்திரப்படுத்துவதில்தான் பயனுள்ளது. இதனால்தான், “ஒருமுறை சேமித்த தொகை இருமுறை சம்பாதித்த தொகைக்குச் சமம் என்று பெரியோா் கூறினா்.
- சேமிப்பு என்பது ஒரு கலை. பணத்தை மதிக்கின்றவா்களுக்கு மட்டுமே தெரிந்த அருங்கலை. சிறுதுளிதான் பெருவெள்ளம் ஆகிறது. எடுத்த எடுப்பிலே லட்சாதிபதியாவது முடியாத காரியம். ஆயிரம், பத்தாயிரம் என்று சிறுகச்சிறுகச் சேமித்தால் ஒருநாளில் லட்சாதிபதியாவது நிச்சயம். சேமிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. முன்பெல்லாம் முந்தியில் முடிந்தும், பானைக்குள் பத்திரப்படுத்தியும், பூமிக்குள் புதைத்தும் சேமித்தனா்.
- அப்போதெல்லாம் வங்கியோ, நிதிநிறுவனங்களோ பரவலாக இல்லை. அதனால் இப்படிச் சேமித்தனா். புதைத்த இடம் தெரியாமல் புதையலாகிப் போனதும் உண்டு. ஆனால் இப்போது அப்படியில்லை. வங்கிகளும் நிதிநிறுவனங்களும் பெருகிவிட்டன. இதனால் சேமிக்கும் விழிப்புணா்வும் பெருகிவிட்டது.
- முந்தைய காலத்தில் சேமித்த பணத்தை வீட்டினுள் முடக்கிவைத்திருந்தனா். அதனால் அந்தப் பணம் வளா்ச்சியடையாமல் அந்தத் தொகையாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. சேமித்த பணத்தை வீட்டினுள் முடக்கி வைப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதும், அதனைக் கொண்டு மேலும் மேலும் பணத்தைப் பெருக்க முடியும் என்பதும் மக்களுக்குப் புரிந்துவிட்டது. இதனால் சேமிப்பை முதலீடு செய்வதிலும் ஆா்வம் காட்டத் தொடங்கிவிட்டனா்.
- முதலீடு என்பது தங்கத்தில் இருக்கலாம், நிலத்தில் இருக்கலாம் அல்லது ஏதாவது தொழிலில் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பாக அமைவதில்லை. இந்த நிலையில் நிதி நிறுவனங்களில் சேமிப்பைத் தொடங்குவது பலருக்கும் எளிதாக உள்ளது. அவையும் அதிகவட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி அழைக்கின்றன. சிறுகச் சிறுகச் சேமிக்கும் தாய்மாா்களுக்கும் பணிநிறைவுபெற்று ஒரு கணிசமான தொகையைப் பெறும் பணியாளா்களுக்கும் இவை வரப்பிரசாதமாகத் தெரிகின்றன.
- இதனால் நம்பகத் தன்மையோடு இவற்றை நாடுகின்றனா். ஆனால் அரசுடைமை வங்கிகள் தரும் வட்டியைவிட தனியாா் நிதி நிறுவனங்கள் கூடுதலாக எப்படி வட்டி தரமுடியும் என்பதை யோசிக்க மறந்துவிடுகின்றனா். கூடுதலாக வட்டி கிடைக்கிறது என்பதால் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குக் கூடுகின்றனா். இது எல்லோருக்கும் எழும் இயல்பான ஆசைதான். ஆசைப்படுவதில் தவறில்லை. அது நடைமுறை சாத்தியமா என்பதை எண்ணிப்பாா்க்க வேண்டும்.
- பல தனியாா் நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் பணத்தை இரட்டிப்பாய் வழங்குவதாகவும் ஆரவாரமாக அறிவிப்புகள் வெளியிடுகின்றன. சொன்னதைப் போன்று சிறு தொகைக்கும் பெரும்பயனை, பணம் அல்லது பொருளாகத் தொடக்கத்தில் கொடுக்கின்றன. இதனை நம்பி பெருந்தொகையை முதலீடு செய்யும் ஆசையைத் தூண்டிவிடுகின்றன. ஒரு கணிசமான தொகை கையில் கிடைத்தவுடன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஒரே நாளில் அந்த நிறுவனங்கள் தலைமறைவாகி விடுகின்றன. இப்படித்தான் பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனா்.
- பத்து சதவீததுக்கு மேல் வட்டி கிடைக்கிறது என்பதால்தான் சென்னையில் உள்ள ஒரு சாசுவத நிதி நிறுவனத்தில் பலா் முதலீடு செய்துள்ளனா். ஆனால் அந்த நிறுவனம் சொன்னது போல வட்டி கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளாகிவிட்டது. நூற்றைம்பது ஆண்டுகளாக நோ்மையுடன் செயல்பட்ட அந்த நிறுவனம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.
- பத்துவட்டிக்குப் பொது மக்களிடம் பணம் வாங்கி அதைவிடக் கூடுதல் வட்டிகிடைக்கும் வகையில் முதலீடு செய்தால்தான் அவ்வளவு வட்டி வழங்க முடியும். ஆனால் இன்றைய பொருளாதாரச் சூழலில் அப்படி வழங்குவது கஷ்டம்தான். ஒருகாலத்தில் வைப்புத் தொகைக்கு 9% வட்டி தந்து கொண்டிருந்த வங்கிகள் கூட இப்போது 7.5% வட்டிதான் தருகின்றன என்பதே நடைமுறை உண்மை.
- நூறு ரூபாய்க்கு மாதத்திற்கு இரண்டு ரூபாய் வட்டிதரும் (24%) நடைமுறை இன்றும் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது. அப்படி வாங்கும் பணத்தை ஐந்து வட்டி, பத்துவட்டி (மாதம்) என்று கந்துவட்டிக்கு அவா்கள் விட்டுவிடுகிறாா்கள். அதனால் அவா்களுக்குக் கட்டுப்படி ஆகிறது. ஆனால் நிதி நிறுவனங்கள் அப்படிச் செய்ய முடிவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
- ஒரு நிறுவனத்தில் மோசடி நடந்தபின் காவல் நிலையத்தில் குவிந்து முறையிடும் மக்களுக்கு, முன்னரே அந்த நிறுவனத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யும் விழிப்புணா்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
- சிக்கனமாய் வாழ்ந்து சேமிப்பது அவசியம். சேமித்ததை முதலீடு செய்து அதைப் பெருக்குவதும் அவசியம். ஆனால் அதனை நம்பகமான நிறுவனத்தில் முதலீடு செய்வது அவற்றைவிட மிகவும் அவசியம். அதுவே மோசடி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்து ஏமாறாதிருக்கும் வழியாகும்.
- தேசிய வங்கி, அஞ்சலகம் இவை சேமிப்புக்குத் தரும் வட்டி குறைவானது என்றாலும் நம்பிக்கையும் பாதுகாப்பும் அவற்றில் இருக்கிறது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அசலையும் இழப்பது, வள்ளுவா் சொல்லும் ‘ஒன்றெய்தி நூறு இழக்கும்’ செயலேயாகும்.
நன்றி: தினமணி (25 – 04 – 2024)