TNPSC Thervupettagam

பாதுகாப்பான குடிநீர் தேவை

April 27 , 2023 625 days 405 0
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவது விவசாயிகளையும் சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டக் குறைவு, மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத்திற்கான பாசனநீர் தேவையையும் நிறைவுசெய்வதில் பெரும் இடர்ப்பாட்டை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.
  • நாட்டிலுள்ள 6 ஆயிரத்து 965 தாலுகாக்களில், மொத்தம் 2 ஆயிரத்து 529 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக்குறைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், உப்புநீர் உட்புகத் தொடங்கி, நிலத்தடி நீரின் இயல்புத்தன்மை மாறத் தொடங்கிவிட்டது.
  • சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஐந்து அடி வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால்தான், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அதன் தன்மையும் மாறுகிறது. விவசாயத்துக்கு நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டே போவது, ஆபத்தான அணுகுமுறை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1960-களில் நம்முடைய விவசாயத்துக்கான பாசனத்தில் 29 சதவீதமாக இருந்த நிலத்தடி நீரின் பங்களிப்பு, இப்போது 68 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
  • அப்போது இருந்ததைவிட விவசாயப் பரப்பும் அதிகரித்திருக்கிறது. நிலத்தடி நீர் பாசனத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. ஆனால், நீராதாரங்களான குட்டை, குளங், ஏரி ஆகியவற்றின் பரப்பு குறைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
  • குடிநீர் தயாரிப்பும், குளிர்பான தயாரிப்பும் இன்று மிகப்பெரிய வர்த்தகமாகிவிட்டன. அவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள், நிலத்தடி நீரை ராட்சத வேகத்தில் உறிஞ்சுகின்றன.
  • நிலத்தடி நீர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக, 2014-இல் தமிழக அரசு கொண்டுவந்த வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகம் முழுவதும் நிலத்தடிநீர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டுதல்களைத் தொடர வேண்டும்' என மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
  • இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வந்த பிறகும், தமிழக அரசு சட்டம் இயற்ற முனையவில்லை என்பது கவலையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் சமுதாயத்துக்கு எவ்வளவு தீமையோ, அதைவிடப் பலமடங்கு அதிக தீமை, நிலத்தடி நீர் குறைவதால் ஏற்படும் பாதிப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பை உறுதிப்படுத்த, சட்ட ரீதியான உறுதியான ஏற்பாட்டை உருவாக்குவது மிகமிக அவசியமாகும்.
  • மழைநீர் சேமிப்பை அதிகரித்தல், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், குட்டை, குளம், ஏரி முதலான நீர்நிலைகளைப் பாதுகாத்தல், கழிவுநீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் விவசாயம் இவற்றை ஊக்குவித்தல் என, நிலத்தடி நீர் பாதுகாப்புக்கான வழிகளைப் பயன்படுத்தி, நிலத்தடி நீர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு, உணவு தானிய பிரச்னை, ஆரோக்கியக் குறைபாடு என பல அபாயங்களை மக்கள் சந்திக்க நேரிடும்.
  • பொதுவாக கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீரை குழாய் மூலம் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக "ஜல் ஜீவன்' எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.
  • இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாட்டில் 3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த மாத இறுதிவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 8.36 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 11.59 கோடி வீடுகள், குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன.
  • நாட்டில் மொத்தமுள்ள 19.43 கோடி கிராமப்புற வீடுகளில் 11.59 கோடி வீடுகளுக்கு அதாவது 59 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.
  • கிராமப்புறங்களில் 59 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு என்பது வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரம், அந்தத் தண்ணீர் சுத்தமானதாக இருந்தாலும், வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.
  • "ஜல்ஜீவன்' திட்டத்தில் 3.5 லட்சம் கிராமங்களில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் உறுப்பினராக இருக்கும் 7.1 லட்சம் பெண்களுக்கு பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்தி தண்ணீரின் தரத்தை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
  • நம்நாட்டில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் 3.5 லட்சம் கிராமங்களில் மட்டுமே தண்ணீர் வழங்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கும் பயிற்சி பெற்ற பெண்கள் இருக்கின்றனர். மற்ற கிராமங்களில் அந்த வசதி இன்னமும் இல்லை என்று தெரிகிறது.
  • குழாய் மூலம் தண்ணீர் விநியோகிப்பதால், குடிதண்ணீருக்காக பெண்கள் நீண்ட தொலைவு நடந்து செல்லும் சிரமம் குறைந்துள்ளது என்றாலும், பல கிராமங்களில் குழாயில் கிடைக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமான சுண்ணாம்பு சத்து கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
  • அடுத்து, ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் அப்படியே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்தத் தண்ணீர் எந்த இடத்திலும் சாதாரண வடிகட்டுதல்கூட இல்லாமல் அப்படியே விநியோகிக்கப் படுகிறது என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.
  • சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை உயர்வுக்கு, பாதுகாப்பில்லாத, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள குடிநீரை உட்கொள்வதும் ஒரு காரணம் என்று மருத்துவத்துறை கூறுகிறது. எனவே, மத்திய அரசு எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு என்பதோடு பாதுகாப்பான குடிநீர் என்பதையும் உறுதிசெய்வது அவசியமாகும்.

நன்றி: தினமணி (27 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories