TNPSC Thervupettagam

பாதுகாவலரே நம்மைத் தாக்கினால் என்னவாகும்

March 2 , 2024 143 days 159 0
  • ஆமிர்கான் நடிப்பில் 2016இல் வெளியாகிப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய பாலிவுட் திரைப்படம் ‘தங்கல்’. அதில் அவருடைய மகளாக பபிதா என்கிற பாத்திரத்தில் சிறுமியாக நடித்தவர் சுஹானி பட்நாகர். 19 வயதான அவர் ‘டெர்மட்டோ-மையோசைட்டிஸ்’ எனும் ‘ஆட்டோ இம்யூன் நோய்’ காரணமாகக் கடந்த பிப்ரவரி 16 அன்று உயிரிழந்தார்.
  • இதே ஆட்டோ இம்யூன் நோயினால் பாதிக்கப்பட்டுச் சிறிது காலம் நடிப்பில் இருந்தே விலகி இருந்ததுடன் இன்றும் அதற்கான சிகிச்சையில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போல இன்னும் பல பெண்கள் இந்நோயினால் தாக்கப்பட்ட செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
  • அது என்ன ‘ஆட்டோ இம்யூன் நோய்’, அது பெண்களை மட்டும் தான் தாக்குகிறதா, அதனைக் கண்டறிந்து குணப்படுத்துவதும், வராமல் தடுப்பதும் எப்படி? பொதுவாக நமது உடலின் நோயெ திர்ப்புத் திறன் அதிகம் என்றால் நாம் ஆரோக்கியமாக இருப்போம் என்றுதானே நினைத்திருந்தோம். ஆனால், அந்த நோயெதிர்ப்பே ஒரு நோயாக மாறினால்? பாதுகாவலனே எதிரியானால்? அதுதான், ஆட்டோ இம்யூன் எனும் தன்னுடல் தாக்கு நோய்.

எப்படி நிகழ்கிறது?

  • பொதுவாக, நமது உடலுக்குள் ஏதேனும் புதிய பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்று அல்லது வேறு ஏதாவது நச்சுகள் உள்ளே நுழையும்போது, அவற்றை ஆன்டிஜென், அதாவது எதிரிகள் என்று நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கண்டறிந்துவிடும்.
  • உடனடியாக ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி நேரடி யாகவோ அல்லது ஆன்டிபாடிகள் எனும் எதிரணுக்களைத் தயாரித்தோ அந்த எதிரிகளுடன் போரிட்டு நம்மைக் காக்கிறது. அதேபோல, எதிர்காலத்தில் மீண்டும் அந்த எதிரிகள் நம்மைப் பாதிக்காதபடி, பாதுகாப்பு அரணையும் ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அதன் இரண்டு ஆற்றல்கள்.
  • நமது உடலில் உள்ள செல்களுக்கு எது நமது உடலைச் சார்ந்த உறவு, எது நமது உடலுக்குள் நுழைந்திருக்கும் எதிரி என்கிற புரிதலும், இனி அந்த எதிரி மறுபடியும் வந்தால் அதை வெளியிலேயே அடையாளம் காணும் ஞாபகமும்தான் அவை.
  • ஆனால், இந்த ஞாபகத்திறனால் உருவாகும் ஆன்டிபாடிகள், அரிதாகச் சிலருக்கு உள்நுழையும் எதிரிகளுக்குப் பதிலாகத் தவறுதலாகச் சுய திசுக்களை எதிர்த்துப் போரிடும்.
  • இப்படி நம் உடலில் உள்ள எந்தவொரு திசு அல்லது அணுவுக்கும் ஆதரவாகச் செயல்பட வேண்டிய ஆன்டிபாடிகளே அவற்றுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றின் செயல்திறனை முடக்கியோ கூட்டியோ திசுக்களை முற்றிலும் அழித்தோ பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதைத் தான் ‘ஆட்டோ-இம்யூன் நோய்’ (Autoimmune Diseases) என்கிறோம்.
  • இவ்வாறாக தோல் - தசைகள் பாதிப்பு ஏற்பட்டு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படாம லிருந்து அறியாமையினால் ‘தங்கல்’ பட நடிகை சுஹானி உயிரிழந்திருக்கிறார்.

நோயைப் புரிந்துகொள்வோம்

  • பொதுவாக இதனை மாலிகுலர் மிமிக்ரி (molecular mimicry), அதாவது மூலக்கூறு போலிமை என்று அழைக்கிறது அறிவியல். ஒரு கிருமித்தொற்று அல்லது நமது அன்றாட வாழ்வில் உள்நுழையும் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ், வேதி உரங்கள், புகை மாசு உள்ளிட்டவைதாம் இதற்கான தொடக்கப்புள்ளி என்று பெரும்பாலும் அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அதே நேரம், இவையே முழுமையான முடிவுகள் அல்ல, இதில் புரிதல்கள் ஏற்பட இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை என்பதுதான் தற்போதைய நிலை.
  • இவ்வாறு போலியாக எதிரணுக்களை உருவாக்கித் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும், சிலநேரம் ஆளையே கொல்லும் இந்த நோயை 1901ஆம் வருடமே மருத்துவ விஞ்ஞானி, ‘பால் எர்லிஷ்’ கண்டறிந்துவிட்டார். இவர் ‘ஹாரர் ஆட்டோ-டாக்சிகஸ்’ என்று இதைப் பற்றி எச்சரித்தாலும், 1950களில் தான் மருத்துவ உலகம் இவற்றைக் கண்டுக்கொள்ள ஆரம்பித்தது.
  • அன்றிலிருந்து இன்றுவரை சிறுநீரகம், குடல், தைராய்டு, மூட்டுகள், தசைகள், கண், இதயம், நரம்பு மண்டலம், தோல் என உடல் உறுப்புகளைப் பாதிக்கும் இந்தத் தன்னுடல் தாக்கு நோய்களில் மட்டுமே கிட்டத்தட்ட 100 நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இதிலும் குறிப்பாக ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் எனும் சரவாங்கி, லூபஸ் எனப்படும் எஸ்.எல்.ஈ., க்ரேவ்ஸ் தைராய்டு நோய், சோரியாசிஸ், இளவயது சர்க்கரை நோய், குடல் அழற்சி நோய்கள், மையாஸ் தீனியா, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனும் நரம்புத் தளர்ச்சி நோய்கள் எனப் பல நாள்பட்ட நோய்களும் இந்த ஆட்டோ இம்யூன் நோய்கள்தாம் என்கிற புரிதலே தற்போதுதான் ஏற்படத் தொடங்கியிருக் கிறது.
  • பெண்களுக்கே அதிக பாதிப்பு: உலக அளவில் 4 சதவீதத்தினரைத் தாக்கும் இந்தத் தன்னுடல் தாக்கு நோய், மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கர்களிடையே 8% வரை காணப்படுகிறது. இதிலும் 80% வரை பெண்களைத்தாம் இந்நோய் பாதிக் கிறது. ஆண்களைக் காட்டிலும் 8 மடங்கு அதிகமாகப் பெண்களை இந்த நோய் பாதிப்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், பெண்களுக்கே உரித்தான மற்றொரு எக்ஸ் குரோமோசோம், பெண்களின் பிரத்யேக ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டீரோன் ஹார்மோன்கள் அல்லது மரபணுக்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.
  • இதில் பெரும்பாலான நோய்கள் கை கால் குடைச்சல், முட்டி வலி, காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை எனப் பொது அறிகுறிகளுடன்தான் ஆரம்பத்தில் வெளிப்படுகின்றன. நோய்மை அதிகரிக்கும்போது மூட்டு வீக்கம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய் அறிகுறிகள், முடி உதிர்தல், சரும நோய், பார்வை இழப்பு, இதய நோய், எலும்பு முறிவு எனத் தனித்தனியாக அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆனால், இவையனைத் தும் ஒன்றாக வந்து முழுமையாகப் பாதிக் காமல் ஏதாவது ஒன்று அவ்வப்போது கூடி, குறைந்து, மீண்டும் கூடி என remissions and relapses முறையில்தான் பாதிக்கின்றன.

விழிப்புணர்வு தேவை:

  • இவற்றில் ‘ரீலேப்ஸ்’ எனப்படும் நோய் மீள்நிகழ்வுக்குப் பெரும் காரணியாக இருப்பது நமது வாழ்க்கை முறைதான் என்று கூறும் மருத்துவர்கள், மேற்கத்திய உணவு முறை, உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றுடன் சில வைரஸ் தொற்றுகள், சுற்றுச்சூழல் மாசு, புகைபிடித்தல், மது அருந்துதல், சில வகை மருந்துகள் போன்றவை மீண்டும் நோய் அதிகரிக்கக் காரணமாகின்றன என்கிறார்கள்.
  • ஆட்டோ இம்யூன் நோய்களும் அதன் நோய் அறிகுறிகளும் பரந்த அளவில் இருப்பது போலவே அவற்றுக்கான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் தேவைப்படும் மருத்துவர்களும் கட்டுக்குள் இல்லாமல் இருப்பதுதான் இதன் சிக்கல்.
  • ரத்த அளவு, CRP, ESR, போன்ற பொதுப் பரிசோதனைகளில் ஆரம்பித்து ஆன்டி நியூகிளியர் ஆன்டிபாடி (ANA), ஆன்டி தைராய்டு ஆன்டிபாடி, ஆன்டி சிசிபி ஆன்டிபாடி போன்ற குறிப்பிட்ட சில பரிசோதனைகளும் நோயைக் கண்டறிய உதவுகின்றன.
  • அதேபோல இவற்றிற்கான சிகிச்சை முறைகளும் பொதுநல மருத்து வர், வாத நோய் நிபுணர், சிறுநீரக நோய் நிபுணர், எலும்பியல் வல்லுநர், கண் நோய் நிபுணர் எனப் பல்துறை மருத்துவ அணுகுமுறைகளும் இவர்களுக்குத் தேவைப்படுகிறது. பெரும்பாலும் அதிக நோயெதிர்ப்புத் திறனைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டு மருந்துகள் இதில் பரிந்துரைக்கப்படுகின்றன. சிகிச்சை ஒருபுறம் என்றால், நோய் குறித்த புரிதல்களும் அவற்றில் ரீலேப்ஸ் வராமல் இருக்க உதவும் வாழ்க்கை முறைகளும் இதில் மிக மிக அவசியம்.
  • பெண்களை அதிகமாகத் தாக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் அவசியம் தேவை. நடிகை சமந்தா தொடர்ந்து சிகிச்சைகள் பெற்றுவருவதுடன், ‘டேக் 20’ எனும் தனது ‘பாட்-காஸ்ட்’ பதிவுகளில் இந்த நோய் குறித்துப் பேசி பெண்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
  • Inspire Inclusion’ எனும் இந்த ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருள் பெண்ணுரிமைக்கானது மட்டுமல்ல, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் சேர்த்துத்தான்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories