பாதைகள் மாறிய காவிரியும்: பழந்தமிழர் நாகரிக வளர்ச்சியும்
March 13 , 2019 2094 days 1894 0
சமீபத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலை உணர்வுத் துறையில் நானும் எனது ஆய்வு மாணவர்களும் நடத்திய ஆய்வு, தமிழ் இனத்தின் நாகரிக வளர்ச்சியில் காவிரி நதியின் பங்கு பற்றியது.
செயற்கைக்கோள் சார் படங்கள், புவியறிவியல், வரலாற்றுக் குறிப்புகள், தொல்பொருள் எச்சங்கள், தமிழ் இலக்கியச் சான்றுகள் மற்றும் கார்பன் வயதுக் கணிப்பு ஆகியவை காவிரி நதியின் வாழ்க்கை பற்றிய புதிய பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
சென்னையில் காவிரி
இன்றிலிருந்து சுமார் 5 லட்சம் வருடங்கள் முதல் 3,000 ஆண்டுகள் வரை மேற்கே தலைக்காவிரியில் இருந்து கிழக்கே ஒகேனக்கல் வரை கிழக்காக ஓடிய காவிரி நதி, அங்கிருந்து வட கிழக்காக பாலக்கோடு, காவேரிப்பட்டினம், ஆம்பூர், வாலாஜாபாத், திருவள்ளூர் வழியாக ஓடி, சென்னைக்கு வடக்கே உள்ள பழவேற்காடு ஏரியில், வங்காள விரிகுடா கடலில் கலந்திருக்கிறது. பின்னர், சென்னைப் பகுதியில் பூமி மேல் எழும்பிய காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெற்கே பாதை மாறி, தற்கால ஆரணி ஆறு, கொற்றலை ஆறு, கூவம், அடையாறு மற்றும் பாலாறு பாதைகளில் ஓடி, இறுதியில் முற்றிலுமாக சென்னைப் பகுதியை விட்டுவிட்டு தற்கால தோப்பூர் ஆறு, வாணி ஆறு, ஹரூர், திருக்கோவிலூர் வழியாகவும், தற்கால பொன்னையாறு பாதை வழியாகவும் 2,700 ஆண்டுகள் முதல் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடி கடலூரில் கடலில் கலந்திருக்கிறது.
இந்தக் காலகட்டத்தில் கடலூர் கடலோரப் பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததாலும், தென்னிந்தியப் பகுதிகளில் வடக்கு - தெற்காகப் பூமி வெடிப்புகள் உருவானதாலும், இது போன்று ஒகேனக்கல் - தற்கால மேட்டூர் அணை - ஈரோடு வழியாக உருவாகிய ஒரு வெடிப்பின் வழியாக, முற்றிலுமாகத் தெற்கே திரும்பி ஈரோடு வரை ஓடி, பின் கிழக்காகவும் தெற்கு தென் கிழக்காகவும் ஓடி 2,300 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மண்டலத்தை அடைந்திருக்கிறது.
சோழ மண்டலத்தில் ஆரம்பத்தில் தெற்காக, தற்கால புதுக்கோட்டை வெள்ளாறு பாதை வழியே ஓடிய காவிரி நதி, சோழ மண்டலத்தின் தெற்குப் பகுதியான பட்டுக்கோட்டை - மன்னார்குடி - கடலோரப் புதுக்கோட்டை நிலப்பகுதி மேல் எழும்பிய காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாக கடிகாரச் சுற்றுக்கு எதிராகச் சுற்றுவதுபோல் பாதையை மாற்றிக்கொண்டது. திருச்சிராப்பள்ளியை அச்சாகக்கொண்டு தெற்கிலிருந்து வடக்காக புதுக்கோட்டை வெள்ளாறு, அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழங்காவேரி ஆகியவற்றின் தற்காலப் பாதைகளில், புதுக்கோட்டை - வேதாரண்யம் - நாகப்பட்டினம் - பூம்புகார் பகுதிகளில் 2,300 ஆண்டுகள் முதல் 900 வருடங்களுக்கு முன்புவரை ஓடி, பின்னர் 750 ஆண்டுகளுக்கு முன் காவிரிப் படுகையின் வடக்கு எல்லையில் கொள்ளிடம் நதியாக நிலைகொண்டிருக்கிறது.
காவிரி நதி இதுபோன்று தன் பாதையை மாற்ற மாற்ற சென்னை பகுதிகளிலே ஆரணியாறு, கொற்றலை ஆறு, கூவம், அடையாறு, மற்றும் பாலாறு ஆகிய நதிகளும், மேட்டூர் அணை - கடலூர் பகுதியில் காவிரி விட்டுச் சென்ற பாதையை தோப்பூர் ஆறு, வாணியாறு, பொன்னையாறு ஆகிய நதிகளும், தெற்கே காவிரிப் படுகையில் காவிரி விட்டுச்சென்ற பாதைகளில் புதுக்கோட்டை வெள்ளாறு, அக்னியாறு, அம்புலியாறு, வெண்ணாறு, வெட்டாறு, அரசலாறு, குடமுருட்டி ஆறு, பழங்காவேரி ஆகிய நதிகளும் ஆக்கிரமித்துக்கொண்டு தற்போது ஓடுகின்றன.
நதிக்கரை நாகரிகங்கள்
காவிரி நதி காலம்தோறும் தனது போக்கை மாற்றிக்கொண்டிருப்பதால், பழந்தமிழர் நாகரிக வளர்ச்சியும் காவிரி நதி சார்ந்ததாகவே தோன்றுகிறது. சென்னைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கொற்றலையாற்றின் கரைகளில் 26 லட்சம் முதல் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய ‘பேலியோலித்திக்’ கருவிகளைத் தொல்பொருள் ஆய்வாளர் ராபர்ட் ப்ருஸ்புட் 1864-ல் கண்டுபிடித்தார். அதற்குப் பின்னர், கிருட்டிணசாமி என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் 1934-ல் கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கில் அத்திரம்பாக்கம், வடமதுரை, நெய்வேலி, கடியம், பூண்டி ஆகிய பகுதிகளில் 6,500 - 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனித நாகரிகத்துக்கான ‘மெகாலித்திக்’ சின்னங்களைக் கண்டுபிடித்தார்.
இவர்கள் இருவரும் அதற்குப் பின் வந்த தொல்லியலாளர் ராமச்சந்திரனும் கொற்றலையாற்றுப் பகுதியில் காணப்படும் ஆதி மனித நாகரிகச் சின்னங்கள், செம்மண் சரளைக் கற்களின் படுகைகளில் புதையுண்டு இருப்பதாகக் கண்டறிந்தனர். மேலும், இச்செம்மண் சரளைக் கற்களின் படுகைகள், சுமார் ஏழு லட்சம் வருடங்கள் வயதான உருளைப்பாறைப் படுகைகளின் மேல் பரவி இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். இப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள், நர்மதா பள்ளத்தாக்கு மனித இனத்துக்கு ஒப்பானவர்கள் என்றும் அவர்கள் 3 முதல் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார் ராமச்சந்திரன்.
இந்த ஆய்வு முடிவுகளோடு எங்களது ஆய்வுக் குழு கண்டறிந்த முடிவுகளையும் ஒப்பிடும்போது பழந்தமிழர் வரலாறு குறித்த சில சித்திரங்கள் துலக்கமாகத் தெரிகின்றன. காவிரி நதி சென்னைப் பகுதியில் 5 லட்சம் முதல் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடியிருக்கிறது. எனவே, தொல்லியல் ஆய்வாளர்கள் கொற்றலையாற்றுப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்த பண்டைய நாகரிகச் சின்னங்கள் காவிரியின் வெள்ளப்படுகையைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வர முடிகிறது. சுமார் ஏழு லட்சம் ஆண்டுகள் வயதான உருளைப்பாறைகள் தென் மேற்கே திருவள்ளூர் பகுதிகளிலே காணப்படுகின்றன. இவை, காவிரி நதியால் அரிக்கப்பட்டு வட கிழக்கே தற்போதைய கொற்றலையாறு வரை சரளைக்கற்களாகப் பரப்பப்பட்டு, பின்னர், மேலும் வட கிழக்கே படிகள் போன்று பல உயரங்களில் கொட்டப்பட்டிருக்கின்றன. இவற்றின் மேலாகத்தான் பின்னர் கொற்றலையாறு ஓடியது. ஆகவே, இன்று கொற்றலையாற்று நாகரிகம் என்பதும் காவிரி சார்ந்ததே. பெரிய உருளைப்பாறைகள் காணப்படும் திருவள்ளூர் பகுதியில் கொற்றலையாறு ஓடவே இல்லை என்பதையும், காவிரிதான் கொற்றலையாறு வரைக்கும் ஓடி வந்திருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அழகரை நாகரிகச் சின்னங்கள்
இந்த ஆராய்ச்சி முடிவை இதுவரையில் கண்டறியப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு, வெவ்வேறு காலகட்டத்தில் பாதைகள் மாறி ஓடிய காவிரிதான் தமிழகத்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூற முடியும். மேட்டூருக்கும் கரூருக்கும் இடையே காவிரியின் கரைகளில்தான் 2,700 - 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரச் சின்னங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. கரூருக்குக் கிழக்காகத் தற்கால பொன்னையாறு பாதையில் ஓடி கடலூருக்கு வடக்கே கடலில் கலக்கும் இடத்தில்தான் அரிக்கமேடு இருக்கிறது. 2,300 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி தெற்காகத் திசை மாறி ஈரோடு வரை ஓடி, பின்னர் கிழக்காகத் திரும்பி சோழ மண்டலத்தை அடைந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரி நதியோர வெள்ளப் படுகையில் கண்டறியப்பட்ட அழகரை மற்றும் திருக்காம்புலியூர் நாகரிகச் சின்னங்கள் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவை. அதன் பிறகு, கொள்ளிடம் நதியாக நிலைகொண்ட காவிரியின் முகத்துவாரத்தில் காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்தது. பாதைகள் மாறிப் பயணம் தொடர்ந்தாலும் தன் இருமருங்கிலும் நாகரிகத்தைக் காலம்தோறும் வளர்த்தெடுத்திருக்கிறது காவிரி.