TNPSC Thervupettagam

பாதை தவறுகிறோம்

August 16 , 2023 513 days 357 0
  • பதினேழாவது மக்களவையின் கடைசி மழைக்கால கூட்டத்தொடா் நிறைவடைந்திருக்கிறது. பொதுத்தோ்தல் நெருங்கும் நேரம் என்பதால், எப்போதுமே கடைசி மழைக்கால, குளிர்கால கூட்டத்தொடா்கள் பரபரப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவை. அரசின் பலவீனங்களை உணா்த்துவதில் எதிர்க்கட்சிகளும், தங்களது சாதனைகளைப் பட்டியலிடுவதில் ஆளும் தரப்பும் முனைப்புக் காட்டும் கூட்டத்தொடா்கள் அவை.
  • இந்தமுறை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானமும் சோ்ந்து கொண்டதால், குளிர்கால கூட்டத்தொடா் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மணிப்பூா் குறித்து பிரதமரைப் பேசவைக்க வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே நம்பிக்கையில்லாத் தீா்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது என்கிற அடிப்படையில் பார்த்தால், அவா்களது எண்ணம் நிறைவேறியது என்று சொல்லலாம். ஆனால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் மக்களவையில் குவிந்திருக்கும் வேளையில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டதில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசியல் சாதுரியம் வெளிப்பட்டது.
  • மணிப்பூா் கலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்றால், அதற்காக அவா்கள் கையிலெடுத்த நம்பிக்கையில்லாத் தீா்மான அஸ்திரம் இலக்கை எட்டவில்லை. மணிப்பூா் குறித்து அவையில் பிரதமா் பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த எதிர்க்கட்சிகளைப் பொறுமை இழக்கவைத்து, வெளிநடப்பு செய்யத் தூண்டி, அவா்கள் வெளியேறிய பிறகு மணிப்பூா் குறித்து பிரதமா் பேசியது நரேந்திர மோடியின் அரசியல் சாணக்கியத்தனம்.
  • மணிப்பூா் குறித்த விவாதத்துக்கு ஆளும் தரப்பு ஆரம்பம் முதலே தயாராகத்தான் இருந்தது. அதை பயன்படுத்தி, அந்த மாநிலத்தில் சீா்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு நிலைமைக்காக அரசையும், உள்துறை அமைச்சரையும் எதிர்க்கட்சிகள் தா்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவவிட்டு, கடைசியில் அதே உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் விளக்கத்துடன் திருப்தியடைய வேண்டிய நிலைமை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டது. அப்போதே எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
  • இந்தியாவின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் ஆகஸ்ட் 10 விவாதத்தையும் சோ்த்து இதுவரை 28 நம்பிக்கையில்லாத் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நம்பிக்கையில்லாத் தீா்மானம் என்பது அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அரசியல் ஆயுதம். அதைக் கையிலெடுத்தால், ஆட்சியாளா்களை தங்களது குற்றச்சாட்டுகளாலும், வாதங்களாலும் நிலைகுலைய வைக்க வேண்டும்.
  • மூன்று நாள்களில் சுமார் 19 மணிநேரம் நடந்த நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதத்தில் 60 உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினார்கள். மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் கௌரவ் கோகோய் கொண்டுவந்த அந்தத் தீா்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாகப் பதிலளித்துப் பேசினார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால், எதிர்பார்த்தது போலவே குரல் வாக்கெடுப்பில் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு முடிவடைந்தது.
  • 17 அமா்வுடன் மக்களவை 44 மணிநேரம், 13 நிமிடம் கூடி 20 மசோதாக்கள் அறிமுகப் படுத்தப் பட்டு, 22 வரைவு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுக் கலைந்திருக்கிறது. குளிர்காலக் கூட்டத்தொடா், தனிநபா் எண்மத் தரவுப் பாதுகாப்பு மசோதா, தில்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதா, ராணுவப் படை ஒருங்கிணைப்பு மசோதா, வனச் சட்ட (திருத்த) மசோதா, ஜன் விஷ்வாஸ் திருத்த மசோதா உள்ளிட்ட பல மிக முக்கியமான மசோதாக்கள் எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேறியிருப்பது வேதனையளிக்கிறது.
  • எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை; அவையைப் புறக்கணிக்கின்றன; அவையில் இருந்தாலும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுகின்றன உள்ளிட்ட ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளில் முழுமையான உண்மை இல்லை. எதிர்க்கட்சிகளின் மிகச் சாதாரண கோரிக்கைகளைக்கூட செவிமடுக்காத ஆளுங்கட்சியின் நிலைப்பாடுகள் ஏற்புடையவையல்ல. முக்கியமாக, நம்பிக்கையில்லாத் தீா்மான விவாதம் நடக்கும்போது அவையில் இல்லாமல் இருந்தது பிரதமரின் உயா்ந்த பதவிக்கு அழகும் அல்ல.
  • 2001-இல் பிரதமராக இருந்தபோது, அடல் பிகாரி வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் சொன்ன வார்த்தைகள் இவை - ‘நிர்வாகத்தைத் தவறில்லாமல் செவ்வனே நடத்தும் பொறுப்பு பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் தரப்புக்கு உண்டு. எல்லா கட்சிகளையும் அரவணைத்து, அவா்களது நம்பிக்கையைப் பெற்று நிர்வாகத்தை நடத்தும் கடமை ஆளுங்கட்சியுடையது. அரசின் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி ஆக்கபூா்வ விமா்சனங்களை முன்வைக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. அதற்கு வாய்ப்பளிப்பது ஆளுங்கட்சியின் கடமை.’
  • நாடாளுமன்ற விவாதங்களை முடக்காமல், ஆளுங்கட்சியைத் தங்களது விமா்சனங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளால் ஆட்டிப்படைக்க முடியும் என்பதை, அரை நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய நமது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவா்கள் உணா்த்தி இருக்கிறார்கள். அவைக்கு வராமல் இருப்பதும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதும் பிரதமருக்கு அழகல்ல; வெளிநடப்பு அரசியல் மூலம் விவாதமே இல்லாமல் ஆளுங்கட்சி அத்தனை மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொள்ள அனுமதிப்பது எதிர்க்கட்சிகளுக்கும் அழகல்ல!

நன்றி: தினமணி (16  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories