பாரதமெங்கும், பாரதம் தாண்டியும் அறியப்பட்ட பாரதி
- இந்திய விடுதலை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகவும் உலகப் பார்வை கொண்ட மகாகவியாகவும் திகழ்பவர் பாரதி.
- எனினும் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டு அளவில்கூடப் பரவலாக அறியப்படவில்லை, போற்றப்படவில்லை எனப் பலரும் கருதி வருகின்றனர். பொருளியல் நிலையிலும் புகழியல் நிலையிலும் அவர் தாகூரைப் போலக் கொண்டாடப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாடு தொடங்கி இந்தியம் அளாவி வாழ்ந்த காலத்திலேயே அவர் மதிப்பார்ந்த நிலையில் அறியப்பட்டிருக்கின்றார்.
- 1907-ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவெங்கும் பயணம் செய்து திலகர், கோகலே, அரவிந்தர் முதலியவர்களையெல்லாம் சந்தித்த ஹென்ரிவுட் நெவின்சன் என்னும் உலகளாவிய ஆங்கிலேயப் பத்திரிகையாளர் நேரில் கண்டு வியந்து போற்றி விவரித்த ஒரே இந்தியக் கவிஞர் பாரதிதான். 1908-இல் லண்டனிலிருந்து வெளிப்பட்ட "தி நியூ ஸ்பிரிட் இன் இந்தியா' என்னும் அவரது உலகளாவிய நூலில் "சென்னையின் தமிழ்க் கவிஞன்' என விதந்து குறிப்பிடப்பட்டிருந்தவர் பாரதி மட்டுமே. அயர்லாந்து நாட்டு அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்த ஜேம்ஸ் எச். கசின்ஸ் என்பவரால் தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு, பாரதி என இந்தியாவின் நான்கு முக்கியமான கவிஞர்களில் ஒருவராகச் சுட்டப்பட்ட நிலையைப் பாரதி வாழ்நாளிலேயே பெற்றிருக்கின்றார்.
- களச் செயல்பாட்டுக் கவிஞனாகப் பாரதியைப் போல தாகூர் நெவின்சனை ஈர்க்கவில்லை; தாகூரை அறிந்த கசின்ஸ் அதே காலகட்டத்தில் பாரதியையும் அறிந்தே இருந்திருக்கின்றார் என்பன கருதத்தக்கன.
- 1914-ஆம் ஆண்டளவில் தென்னாப்பிரிக்கா டர்பனிலிருந்து பாரதியின் "மாதா மணிவாசகம்' என்னும் கவிதை நூல் வெளிவரும் அளவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களுக்கான கவியாக - குரல் கொடுக்கும் போராளியாகப் பாரதியைக் கருதியிருக்கின்றனர்.
- தமிழ்மண்ணிலும் தான் வாழ்ந்த காலத்தில் பாரதி பரவலாக நன்கு அறியப்பட்டிருந்தார். குறிப்பாக 1920, 1921-ஆம் ஆண்டுகளில் சென்னை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, இராஜபாளையம், அருப்புக்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், சீர்காழி எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய கூட்டங்களில் பாரதியின் பாடல்கள் உணர்ச்சி பொங்கப் பாடப்பட்டன என்பதன் பதிவுகள் "சுதேசமித்திரன்' நாளிதழின்வழி கண்டறியப்பட்டுள்ளன. பாரதியின் வலிகளைப் பிறர் அறியாமலிருந்திருக்கலாம். பாரதியின் வலிமைமிக்க கவிதைகளைப் பலரும் அறிந்தேயிருந்திருக்கின்றனர்.
- பாரதி வாழ்ந்த காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு அப்பால் வங்க மண்ணிலும் மராட்டிய மண்ணிலும் அறியப்பட்டிருக்கின்றார்; அங்கெல்லாம் நிகழ்ந்த வெளிப்பாடுகளால் இந்தியாவெங்கும் பாரதி அறியப்பட்டிருக்கின்றார் என்னும் பாரதியின் மாபெரும் பரிமாணம் கண்டறியப்பட்டுள்ளது.
- இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் முன்னணியில் திகழ்ந்த வங்க மண்ணின் தலைநகரமாகிய கல்கத்தாவிலிருந்து வெளிவந்து இந்தியா முழுவதும் விடுதலை இயக்கத்தை வீறுகொள்ள வைத்த ஆங்கில நாளிதழ் "வந்தே மாதரம்' ஆகும்.
- அரசியல் களத்தில் பாரதியின் முன்னோடிகளாகக் குருநாதர் நிலையில் விளங்கியவர்கள் திலகரும் விபின சந்திர பாலரும் ஆவர். பாலர் தொடங்கி நடத்திய இதழே "வந்தே மாதரம்' ஆகும். ஒருகட்டத்தில் அரவிந்தர் இதன் ஆசிரியராகத் திகழ்ந்தார் என்பதும் வரலாறு. அரசியலில் புதிய கட்சி எனப்படும் தீவிரப் போக்குடைய அணியின் இதழாக இந்த இதழ் விளங்கியது.
- கல்கத்தாவிலிருந்து "வந்தே மாதரம்' நாளிதழாக மட்டுமல்லாமல், வார இதழாகவும் வெளிவந்தது. நாளிதழ் 1906-ஆம் ஆண்டும், வார இதழ் 1907-ஆம் ஆண்டும் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தியாவைத் தாண்டி அயல்நாடுகளிலும் இவை வாசிக்கப்பட்டு வந்தன. பாரதி நடத்திய பத்திரிகைகள், பாரதி எழுதிய நூல், பாரதி ஆற்றிய சொற்பொழிவுகள், பாரதியின் விடுதலை இயக்கச் செயல்பாடுகள், பாரதியாரைக் குறித்த மற்றவர்களின் பதிவுகள், இதுவரை நாமறியாத பாரதி பங்கேற்ற கூட்டங்கள் எனப் பாரதி குறித்த பன்முகச் செய்திகள் இவ்விதழ்களில் வெளிவந்துள்ளமையை இப்போது முதன்முறையாகக் கண்டறிந்துள்ளேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க "வந்தே மாதரம்' நாளிதழில் பாரதி முக்கியத்துவம் பெற்று இந்தியா முழுதிலும் சமகாலத்தில் அறியப்பட்டிருக்கின்றார் என்பதை இந்தப் பதிவுகள் உணர்த்துகின்றன.
- தமிழ்நாடு முழுமைக்கும் உணர்வூட்டும் வகையில் பாரதி 1905-1908-ஆம் ஆண்டுகளில் இந்திய விடுதலை இயக்கச் செயல்பாடுகளை முன்னோடியாகச் சென்னையில் முன்னெடுத்தார். திலகர், விபினசந்திர பாலர் அணியின் தமிழகத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கவிதைகள், இதழ்வழி முயற்சிகள், நேரடிக் களச் செயல்பாடுகள் என விடுதலைப் போரில் முன்னின்றார். இவற்றின் பதிவுகள் பல கல்கத்தாவிலிருந்து வெளிவந்த "வந்தே மாதரம்' நாளிதழில் இடம்பெற்றுள்ளன.
- "சக்ரவர்த்தினி', "இந்தியா' முதலிய தமிழ் இதழ்களை ஆசிரியராக இருந்து நடத்திய பாரதி ஓர் ஆங்கில இதழைச் சிறு பெயர் வடிவ மாற்றத்துடன் சென்னையில் இருமுறையும், புதுவையில் ஒருமுறையும் நடத்தினார். "தி பால பாரத்', "பால பாரதா ஆர்(அல்லது) யங் இந்தியா', "பால பாரதா' என்பனவாகும் இவை.
- "வந்தே மாதரம்' ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் சென்னையிலிருந்து பாரதி நடத்திய "பால பாரதா' இதழின் படைப்புகள் சிலமுறை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில் வெளிவந்த நாளிதழின் முதல் பக்கத்தில் பெரும்பகுதி அளவிற்குப் பாரதி நடத்திய இதழின் படைப்புகள் எடுத்தளிக்கப்பட்டன என்பது பாரதியின் இதழ் பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 1907 நவம்பர் 11, 1908 ஜனவரி 8 முதலிய இதழ்களில் இப்பதிவுகள் காணப்படுகின்றன. இத்தகைய மீள் பிரசுரங்களால் கிடைக்காமல்போன "பால பாரதா' இதழில் வெளிவந்த சில படைப்புகளை நாம் இப்போது பெற முடிந்துள்ளது.
- "வந்தே மாதரம்' நாளிதழ்ப் பதிவுகளுள் ஒன்றை மட்டும் இங்கு நோக்கலாம். 1908 ஜனவரி 31-ஆம் நாளிட்ட "வந்தே மாதரம்' நாளிதழ். முதல் பக்கத்தில் ஒரே ஒரு செய்திதான் இடம்பெற்றிருந்தது. அந்தச் செய்தியின் தலைப்பு "சென்னையில் தேசியத்தின் பெருவெற்றி' என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் அமைந்ததாகும். அன்றைய சென்னை மாகாணத்தின் முதன்மையான பிரமுகர்கள் பங்கேற்ற, தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் படும் துயரம் முதலியவற்றைக் குறித்துப் பேசிய கூட்டம் அது. அந்தக் கூட்டத்தின் பின்புலத்தில் பாரதி அணியினரின் செயல்பாடு இடம்பெற்றிருந்தது.
- இராவ்பகதூர் பி.அனந்தாசார்லு, பின்னாளில் நீதிபதியான வி.கிருஷ்ணசாமி ஐயர், "சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், "இந்தியன் பேட்ரியாட்' ஆசிரியர் கருணாகர மேனன், பின்னாளில் சென்னை மேயரான வி.சக்கரைச் செட்டியார் முதலியோர் பங்கேற்றதாகச் செய்தியின் தொடக்கத்தில் பதிவாகியிருந்தது. இவர்களின் பெயர்களோடு இன்னொருவர் பெயரும் இடம்பெற்றிருந்தது. அது சி.எஸ்.பாரதி என்னும் நம் பாரதியின் பெயராகும்.
- பாரதியின் பெயருக்குப் பின்னால் ஒரு குறிப்பு இடம்பெற்றிருந்தது. "பால பாரத்' இதழின் ஆசிரியர் மற்றும் "இந்தியா' தமிழ் வார இதழின் ஆசிரியர் என்னும் குறிப்பே அது. இக்குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. "இந்தியா' இதழின் ஆசிரியர் அவர் என்பது நாடறிந்த உண்மையாகவே அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றது. மேலும் அந்தக் கூட்ட நடவடிக்கையில் பாரதி ஒரு தீர்மானத்தை வழிமொழிந்து தமிழில் பேசினார். மேலும் பாரதியின் பேச்சின் விவரமும் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்ட நடவடிக்கை அக்காலத்தில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரதி முன்னெடுத்த விபினசந்திர பாலர் விடுதலைக் கூட்டம், தஞ்சையைச் சேர்ந்த தேசியப் பிரமுகர் என்.கே.இராமசாமி ஐயர் பாரதியைக் குறிப்பிட்டு எழுதிய கடிதம், பாரதியின் கவிதைகளைக் குறித்துச் சென்னையிலிருந்து ஒருவர் எழுதிய கடிதம் முதலிய முக்கியத்துவம் வாய்ந்த பல பதிவுகள் "வந்தே மாதரம்' நாளிதழில் இடம்பெற்றிருந்தன.
- மராட்டிய மண்ணில் திலகரின் கைபட்டு உருவாகி வளர்ந்த ஆங்கில வார இதழ் "மராட்டா'வாகும். இவ்விதழில் பாரதி குறித்த பதிவுகள் வெளிவந்துள்ளன என்பதையும் இப்போது கண்டுபிடித்துள்ளேன். அவற்றுள் ஒன்று, பாரதி வரலாற்றில் நெடுங்காலமாக நிலவிவந்த ஒரு புதிரை விடுவித்து வைக்கின்றது.
- பாரதி நடத்திய "பாலபாரதா' என்னும் பெயரமைப்பைத் தாங்கிய ஆங்கில இதழ்களுள் சென்னையிலிருந்து முதலில் வெளிவந்த இதழ்களிலும், புதுவையிலிருந்து மூன்றாவதாக வந்த இதழ்களிலும் ஓர் இதழ்கூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. நிவேதிதா உள்ளிட்டவர்கள் இவற்றில் எழுதினர் என்பதை மட்டும் அறிய முடிகின்றது. இவற்றில் இடம்பெற்ற பாரதியின் ஆங்கில எழுத்துகளையும் நாம் கண்ணுற இயலவில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "பால பாரதா' ஆங்கில இதழ் ஓரிதழ்கூடக் கிடைக்கவில்லை என்பதையும் 1910-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதழ் வெளிவரத் தொடங்கி மூன்று அல்லது நான்கு மாதங்களே வெளிவந்தன எனவும் பாரதியியல் முன்னோடி சீனி.விசுவநாதன், சுவாமி கமலாத்மானந்தர் முதலியோர் எடுத்துரைத்திருக்கின்றனர்.
- "மராட்டா' 1909 ஆகஸ்ட் 29-ஆம் தேதி இதழில் வெளிவந்த "பால பாரதா' இதழ் அறிமுகச்செய்தியால் 1909 ஆகஸ்ட் மாதமே இதழ் வெளிவந்துவிட்டமையை அறிய முடிகின்றது. முன்னோடிகளின் குறிப்புக்கு மாறாக ஓராண்டுக்குமேல் இதழ்கள் வெளிவந்துள்ளன என்பது உறுதியாக இப்போது வெளிப்பட்டுள்ளது. இதழ்கள் மட்டும்தான் இனி வெளிப்பட வேண்டும். மேலும் "மராட்டா' வார இதழில் திலகரின் சொற்பொழிவையும் பாரதியின் தமிழ் மொழிபெயர்ப்பையும் கொண்ட நூலின் ஆங்கில அறிவிப்பு தொடர்ந்து வெளிவந்திருக்கின்றது.
- இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போலப் பாரதியின் விடுதலை இயக்க இதழியற் செயல்பாடு, இந்தியாவுக்கு அப்பால் ஒரு மாபெரும் ஆளுமையின் பார்வையில்பட்டுத் தொடர்ந்து உலகளாவிய நிலையில் சமகாலத்திலேயே பகிரப்பெற்று வந்திருக்கின்றது.
- காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவின் நேட்டால் நகரிலிருந்து நடத்திய தனது "இந்தியன் ஒப்பீனியன்' என்னும் வார இதழில் 1910-இல் புதுவையிலிருந்து வெளிவந்த "பால பாரதா'வைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவந்திருக்கின்றார். காந்தியடிகளின் பதிவால் புதுவை "பாலபாரதா' 1910 ஆகஸ்ட் வரை வெளிவந்தது என்னும் உண்மையும் வெளிப்பட்டுள்ளது. காந்தி - பாரதி சந்திப்பின்போது "பாலபாரதா' ஆசிரியர் என்பது நினைவுகூரப்பட்டு, அறிந்துதான் காந்தி மதித்து உரையாடினார் எனவும் கருதலாம்.
- வாழும் காலத்திலேயே வங்கத்து நாளிதழ் முதலியவற்றின் வாயிலாகப் பாரதி இந்திய அளவில் அறியப்பட்டிருக்கின்றார். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி நடத்திய இதழின் வழி இந்தியாவுக்கு அப்பாலும் கவனம் பெற்றிருக்கின்றார். இவை இப்போது கண்டறியப்பட்டுள்ள, இனி கவனம் பெற வேண்டிய பாரதியின் புதிய பரிமாணங்களாகும்.
நன்றி: தினமணி (11 – 12 – 2024)