TNPSC Thervupettagam

பாரதி ஒரு வள்ளல்!

April 4 , 2019 2096 days 1849 0
  • இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தனது எளிய  தமிழில் பாமர மக்களுக்கும் எளிதில் விளங்குமாறு பொருள் பொதிந்த அருமையான கவிதைகள்  இயற்றியவர் மகாகவி பாரதியார். பெரும்பாலும் கவிஞராகவே மக்களுக்கு  பாரதியார் விளங்கியவர் என்றாலும், தனது கட்டுரைகளாலும் கதைகளாலும் மக்களைக் கவர்ந்தவர். அத்துடன் இசைகளில், குறிப்பாக கர்நாடக  இசையிலும் அவரது ஞானம் தெள்ளிதின் விளங்கியது. ஆகவே, அவர் மகாகவி மட்டுமல்லாது இயல், இசையிலும் வல்லவர். ஆனால், வாழ்வில் பெரும்பாலும் வறுமையில் வாடியவர் மகாகவி. பட்டினியால் வாடினாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.
பாரதியார்
  • அவரது சிந்தனைகள் எப்போதும் வானளாவி நிற்கும். மக்களைப் பற்றிய சிந்தனையே பெரும்பாலும் இருக்கும். மக்கள் துயரம் அடைந்தால் அவரது உள்ளம் வாடியது. அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தவரானாலும், பொருள் வசதி அற்றவராக இருந்தாலும் ஏழை மக்களின் துயரைத் தீர்ப்பதில் அவரது வாழ்வில் நடந்த சம்பவங்கள் பல. கையில் இருப்பதைக் கொடுத்துவிட்டு, தனது குடும்பத்தின் பசியைப் பற்றி கவலைப்படாதவர். இனி அவர் வள்ளலாக வாழ்ந்து காட்டிய சம்பவங்களைப் பார்போம். சம்பவம்-1: ஒரு நாள் திருநெல்வேலி பொருநை நதி  மணல் வெளியில் அருமை நண்பர் சுத்தானந்த பாரதியோடு மகாகவி பாரதியார் நடந்து சென்றார். அப்போது பாரதியின் மனதிலே கற்பனை கரைபுரண்டு ஓடுகிறது.
  • பாரதியார் பேச ஆரம்பிக்கிறார்.
  • நம்மிடத்திலே கொஞ்சம் பணம் இருக்கிறது. அது விரைவில் இரண்டாயிரம் ஆகும். இருபதாயிரம் ஆகும் என்று அடுக்கிக்கொண்டே பேச்சை தொடர்கிறார். இதைக் கேட்ட சுத்தானந்தருக்கு வியப்பால் கண் புருவங்கள் விரிந்தன. எப்படி என்று கேட்கிறார். பாரதி தொடர்கிறார். அமுதம் என்றொரு தமிழ் பத்திரிகை தொடங்க இருக்கிறோம்.  இரண்டாயிரம் இருபதாயிரம் ஆகும். பாரும் ஓய்! பாரும் என்று ஓய் போட்டுக்கொண்டே ஓங்காரமாய்ப் பேசுகிறார்.
கற்பனை
  • இப்படி மகாகவி கற்பனையில் சிறகடித்து மிதந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்கிறது.
  • அதைக் கேட்ட மகாகவி பாரதி தாயே வா இங்கே! பாரதி வாழும் காலத்தில் ஓர் ஏழைத்தாய் வாடுவதா! வருந்துவதா! வா இங்கே! என்கிறார். அவர் கூடையை இறக்குகிற வரைக்கும்கூட பொறுக்காமல், தானே இறக்கி மேலே இருந்த துணியை அகற்றி, இருந்த பழங்களை அள்ளிக் கொள்கிறார். சுத்தானந்தருக்கும் கொடுக்கிறார். சாப்பிடும் ஓய்! என்கிறார். சாப்பிட்டாயிற்று. வேண்டிய வரை அள்ளியாயிற்று. ஆறு ரூபாயை எடுத்து அந்த அம்மாளிடம் நீட்டுகிறார். அந்த அம்மாளுக்கு வியப்பு. இதற்கு ஆறு ரூபாயா! என்கிறாள். ஆமாம் தாயே! ஆமாம். நீ சாப்பிடு உன் குழந்தைகளுக்கும் கொடு. நன்றாய் இரு என்றார். பிறகு, உனக்கு எத்தனை குழந்தைகள் என்றார்.அவள் இரண்டு பெண்கள் என்றாள். நமக்கும் அப்படியே என்று நடக்க ஆரம்பித்து விட்டார். ஓர் ஏழைத்தாயின் வறுமைக்கோலம் அவரை வாட்ட ஆரம்பித்தது. பாரதியின் கனவான இரண்டாயிரம், இருபதாயிரம் எல்லாம் மறந்தே போயிற்று. மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ என்று பாடியவர் அல்லவா பாரதி!
சான்று
  • சம்பவம்-2: புதுச்சேரியில் பாரதியார் இருந்த காலம். ஞாயிற்றுக்கிழமைகளில் கடலிலே குளித்து திளைத்துக் குதூகலிப்பது பாரதியாருக்குப் பழக்கமாக இருந்தது. திருமலாச்சாரியார், மண்டையம் சீனிவாசாச்சாரியார், நாகசாமி ஆகியோருடன் குழந்தைகளெல்லாம் மகிழ்ச்சியோடு புறப்பட்டார்கள். அதிலே மண்டையம் சீனிவாச்சாரியாரின் அருமை மகள் யதுகிரியும் உண்டு. கடற்கரையிலே பெருங்கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு பாம்பாட்டி. பெருங்கூட்டம் அவனைச் சுற்றியிருக்கிறது. பாரதியார் பக்கத்திலே வருகிறார். பாம்பாட்டி கேட்கிறான் பாம்புக்குப் பால் வார்க்க வேண்டும்.
  • பைசா கொடு சாமி என்று.பாரதியார் நின்று நிமிர்ந்து பார்க்கிறார்.  குளிர் கொத்தித் தின்னுகிறது. வயிறோ காய்ந்து வெடிக்கிறது என பாம்பாட்டி பேசுகிறான். யதுகிரி அண்ணன் காசு போடுகிறான். இப்போது பாம்பாட்டி யதுகிரியிடம் காசு கேட்கிறான். யதுகிரியின் தாயார் கடல் அரசனுக்கு காசு போட்டு விட்டுத்தான் குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்குக் கோபம் வரும் என்று யதுகிரியிடம் காலணா கொடுத்துள்ளார். அந்தக் காசை கடலிலேதான் போட வேண்டும் என்பது திண்ணமான எண்ணம். அதனால் பாம்பாட்டிக்கு காசு கொடுக்கவில்லை.
  • பாரதியார் பார்த்துக்கொண்டே நிற்கிறார். குளிர் கொத்தித் தின்னுகிறது என்றானே பாம்பாட்டி. அது  அவரது மனதை வாட்டியெடுக்கிறது. பாரதியார் மேல் வேட்டியை இடையிலே சுற்றிக் கொண்டார். இடை வேட்டியை அவிழ்த்து பாம்பாட்டிக்குத் தந்து விட்டார். அதற்குக் காரணம் மேல் வேட்டி சற்று கிழிசலாக இருந்தது. கிழியாத வேட்டியை பாம்பாட்டிக்குக் கொடுத்து விட்டார். தாராளத்திலும் உயர்ந்த பண்பான உள்ளம். பாம்பாட்டியின் நெஞ்சமெல்லாம் நிறைந்தார் பாரதியார். கடற்கரைக்கு வந்தார்கள். குளிப்பதற்கு முன் கடலிலே யதுகிரி காசு  போடுகிறாள்.
  • பாரதி யதுகிரியிடம் செல்லமாகக் கடிந்துகொண்டு சொல்லுகிறார். இதெல்லாம் அர்த்தமில்லாத வழக்கம். முன் காலங்களில் குளங்களில் குளிப்பவர்கள் காசுகளைக் குளத்தில் போட்டால் குளத்தைச் சுத்தம் செய்யும் கரையார்களுக்கு அந்தத் துட்டுகள் அகப்படும். அதைக் கொண்டு அவர்கள் ஜீவிப்பார்கள். நம் பெரியவர்கள் குளத்திற்குச் செய்தால் நீ சமுத்திரத்திற்கு இப்படி காசு சேர்க்கிறாயே? இங்கே சுத்தம் செய்வது அலை. அதற்குக் காலணாவால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. போனது போகட்டும். இனிமேல் இப்படிச் செய்யாதே என்று பாரதியார் குழந்தைகளுக்கு மூடப்பழக்கங்களைத் தவிர்க்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் போக்கில் மானுட நேயத்தையும் கற்றுத் தந்தார்.
  • கடலில் போட்ட காலணா மூலம், பாம்பாட்டியின் குழந்தைக்குச் சாதம் கிடைக்கும் என்பதை வலியுறுத்தினார் பாரதி.
மற்றொரு சான்று
  • சம்பவம்-3: ஒரு சமயம் தூத்துக்குடியில் நாவலர் சோமசுந்தர பாரதியாரைப் பார்க்க வந்தார். மெலிந்தும் நலிந்தும் இருந்த பாரதியாரைப் பார்த்து வருந்தினார் நாவலர். உடனே வீட்டினுள் சென்று புதிய சரிகை வேட்டியுடன் வந்து நண்பரே இவற்றை அணிந்து  கொள்ளுங்கள் என்றார். பெற்றுக் கொண்ட பாரதியார் மாலையில் வருவதாகக் கூறினார்.
  • மீண்டும் மாலையில் வந்த பாரதியாரிடம், தான் கொடுத்த வேட்டியைக் கட்டாததால் வேட்டி எங்கே பாரதி என்று கேட்டார் நாவலர்.
  • சோமு என்னுடன் வா என்று நாவலரைச் சிறிது தூரம் அழைத்துச் சென்றார் பாரதியார். அங்கே தெரு ஓரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரனின் உடம்பில் நாவலர் பாரதிக்கு அளித்த வேட்டி கிடந்தது. மானத்தை மறைக்கவே மக்களுக்கு ஆடையில்லை. எனக்கு எதற்கப்பா வேட்டி என்றார் பாரதியார். நாவலர் அப்படியே அசந்து போனார். சம்பவம்-4: ஒரு நாள் ஒரு ரிக்ஷாக்காரர் தனது வறுமையை பாரதியிடம் கூற, மனமிறங்கிய பாரதி அன்று வாங்கி வந்திருந்த சம்பளப் பணம் முழுவதையும் தூக்கிக் கொடுத்து விட்டார்.
  • வீட்டுக்கு வந்து செல்லம்மாளிடம், தான் செய்ததை மகிழ்ச்சியுடன் சொன்னார். வீட்டில் சாப்பாட்டுக்கு  என்ன செய்வது என்றுகூட யோசிக்காமல் அப்படி செய்து விட்டாரே என்று செல்லம்மாள் வருந்தினார். அதே குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்த ராமுவுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. அந்த ரிக்ஷாக்காரர் அவருக்குத் தெரிந்தவராக இருந்ததால் அவர் செலவழித்ததுபோக அவரிடம் இருந்த மீதம் 45 ரூபாயை வாங்கி செல்லம்மாளிடம் கொடுத்தார்.
  • தனக்குப் போகத்தான் தானம் என்று சொல்வார்கள். ஆனால், பாரதியைப் பொருத்தமட்டில் தன்னைப் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை. இருந்தாலும், இல்லாவிட்டாலும்  அவர் வள்ளல்தான். பிறர் துயரம் தாங்கா மனதில் தன் துயரம் நினைவில் நிற்பதில்லை. பாரதி வறுமையைத் துணிவாக எதிர்கொண்டார். இன்னும் சொல்லப்போனால், தனது வள்ளல் தன்மையால் தானே வறுமையை வரவழைத்துக் கொண்டார்.
மற்றொன்று
  • சம்பவம்-5: இந்தியா பத்திரிகையின் சந்தா: 1906 முதல் 1910 வரை அவர் நடத்திய இந்தியா பத்திரிகை சுதந்திர உணர்வைப் பாமரரிடையே பரப்புவதில் செய்த சேவை மகத்தானது. அந்தப் பத்திரிகைக்கு தமக்கே உரிய பாணியில் சந்தா விகிதங்களை  நிர்ணயித்தார் என்பதை அறிய வியப்பாக உள்ளது. அரசாங்கத்தாருக்கு ரூ.50, ஜமீன்தார்களுக்கும் ராஜாக்களுக்கும் ரூ.30,  மாதம் ரூ.200-க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.15, மற்றவர்களுக்கு ரூ.3 என்று சந்தா நிர்ணயித்தார். இப்படி அவரவர் நிலைக்கு ஏற்ப சந்தா நிர்ணயித்த முதல் பத்திரிகை ஆசிரியர் உலகிலேயே பாரதியாராகத்தான் இருக்கும். அவர் உணர்ச்சி பொங்க எழுதிய இந்தியா பத்திரிகையை அனைவரும் குறிப்பாக எளிய மக்களும் படித்துப் பயனுற வேண்டுமென்று நினைத்து அந்தப் பத்திரிகையின் சந்தா விகிதங்களை தனக்கே உரிய முறையில் நிச்சயித்தார். இவ்வாறு பொது மக்கள் துன்பத்தைக் கண்டால் பாரதியின் மனம் பெரிதும் கலங்கிவிடும்;. கண்ணீர் பெருகும். பொது மக்கள் துயரைத் தன் துயர்போல் எண்ணித் தன்னால் இயன்ற உதவியைத் தயங்காமல் செய்வார். இதுதான் அவரது வள்ளல் மனம்.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories