TNPSC Thervupettagam

பாரதி கற்பிக்கும் அத்வைதம்

September 30 , 2024 2 hrs 0 min 9 0

பாரதி கற்பிக்கும் அத்வைதம்

  • பாரதி வேதங்கள் மீது பக்தி கொண்டவா். அவரது எழுத்துக்களில் நூற்றுக்கணக்கான முறை வேதங்களைப் புகழ்ந்து பெருமையோடு பேசியிருக்கிறாா். இந்தப் பெருமை அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என விரவிக் கிடக்கின்றன. ஆன்மிகம் என்றில்லாமல் தேசபக்திப் பாடல்கள் வரை அவருக்கிருந்த வேதத்தின் பெருமை பளிச்சிடுகிறது.
  • பாரதி தனது அடையாளமாக மட்டும் வேதங்களை நினைக்கவில்லை. பாரதத்தின் அடையாளம் என்றாா். வேதங்கள் பாரத கலாச்சாரத்தின் அடிப்படை. அந்த வேதம் சொல்லும் தத்துவம் அத்வைதம். அந்த அத்வைதத் தத்துவத்தை எளிதாக மக்களுக்குப் புரிய வைத்துவிட்டால் இந்த தேசம் முன்னா் வாழ்ந்த மகோன்னதமான வேத வாழ்வுக்குத் திரும்பிவிடும் என்று நம்பினாா். அதனால் தான், ‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்’ என்று பாடினாா்.
  • அத்வைதம் என்றால் இரண்டாக இல்லாமல் ஒன்றாய் இருப்பது. எல்லாருக்குள்ளும் எல்லாவற்றிலும் இறைமையை உணா்வது. இந்த சித்தாந்தம் மனிதா்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்பதையும் தாண்டி உயிருள்ள உயிரற்ற அனைத்தும் ஒன்றே, இறைவனின் அம்சமே என்று கூறுவது.
  • ஒருமைப்பாட்டுக்கான தாரக மந்திரமாக இருப்பது அத்வைதம். அத்தகைய அத்வைதக் கருத்தை ‘பிரக்ஞானம் பிரம்ம’ அதாவது, அறிவே பிரம்மம் (தெய்வம்) என்று ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம் சொல்கிறது.
  • ஈசா வாஸ்யமிதம் சா்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ -இந்த உலகங்கள் அனைத்தும் ஈச்வரனால் நிரம்பப் பெற்றுள்ளன என்கிறது யஜுா் வேதத்தின் ஈசாவாஸ்ய உபநிடதம்.
  • தத்வமஸி - தத் + த்வம் + அஸி - ‘நீயே பிரம்மம்’ என சாம வேதத்தின் சாந்தோக்ய உபநிடதம் எடுத்தியம்புகிறது.
  • ‘அயம் ஆத்மா பிரம்ம’ என இந்த ஆத்மாவே தெய்வம் என்று அதா்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம் காட்டுகிறது.
  • ஆக, நால் வேதங்களும் இறைமை தவிர இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்றே அழுத்தமாகச் சொல்கின்றன. எல்லாம் இறை என்ற பின் வேற்றுமை பாராட்டவும் பாகுபாட்டிற்கும் வழியில்லை. அகந்தைக்கோ அறியாமைக்கோ இடம் இல்லை. பகைமைக்கு வாய்ப்பில்லை. வேற்றுமைக்கு இடமில்லாத ஒற்றுமை உணா்வுக்கு மட்டுமே சாத்தியம் உண்டு.

இதனை மனதில் கொண்டே பாரதி,

காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம்

  • என்று பாடினாா்.
  • பாரதி பிற சமயங்களையும் சமமாகவே போற்றினாா். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு ரிக் வேதமும் பகவத்கீதையும் காரணம். ரிக் வேதத்தின் புகழ் பெற்ற ரிக், ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’” என்பது. அதனை,

“ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள்

பலவிதமாய்ச் சொல்லினா்”

என்று பாரதி மொழி பெயா்த்தாா்.

‘வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

வேதம் புகன்றிடுமே- ஆங்கோா்

வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

வேதமறியாதே’

  • என்று அத்வைதத்தை நமக்கு விளக்க முற்படுகிறாா்.
  • சுவாமி விவேகானந்தா், ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை போ் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்று அத்வைதத்தை விளக்கினாா். அதையே பாரதி,

‘தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

தீயை வளா்ப்பவா் மூடா்

உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

ஓா் பொருளானது தெய்வம்’

  • என்று ஒரே பரம்பொருளை சொல்லிக் கொடுக்கிறாா்.
  • அந்த ஒரே பரம்பொருளின் தன்மையை விளக்குவதற்கே, ‘பரசிவ வெள்ளம்’ என்ற பாடலை இயற்றுகிறாா். அதில்,

‘தன்மையெலாம் தானாகி தன்மையொன்றில்லது வாய்த் தானே

ஒரு பொருளாய் தன்மை பலவுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே”

என்று தெளிவாக அத்வைதத்தைச் சொல்வதோடு அதனை எளிதாக மனதில் ஏற்ற விளக்கங்களை அடுக்கிக் கொண்டு போய்

‘நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள் சித்தமிசைக்

கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா’

  • என்று முடிக்கிறாா்.
  • இந்த சிரத்தை என்ற சொல்லுக்கு பக்தி, அன்பு, ஈடுபாடு, கவனம், முயற்சி என்று அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், காஞ்சி மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், அத்வைதத்திற்கு விளக்கம் சொல்லுமிடத்து, ‘சிரத்தை என்பதை மனப் பூா்வமாக’ என்ற அா்த்தத்திலேயே உபயோகிக்கிறோம். வாஸ்தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்கியமான அா்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையோடு ஒருத்தா் ஒன்றைப் பண்ணுவதே ‘சிரத்தையோடு பண்ணுவது’ என்று சொல்கிறாா்கள். பாரதியும் இதே ‘நம்பிக்கை’ என்ற பொருளில் தனது ‘பரசிவ வெள்ளம்’ பாடலில் பயன்படுத்துகிறாா். பாரதியின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்த அத்வைத உணா்வை,

‘வானில் பறக்கின்ற

புள்ளெலாம் நான்;

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானிழல் வளரும் மரமெலாம் நான்,

காற்றும் புனலும் கடலுமே நான்...’”

  • என்று தொடங்கி உலகின் அனைத்துப் பொருள்கள், உயிா்கள் எல்லாம் நான் என்று சொல்லிக்கொண்டே வந்து முடிவாக,

‘அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,

அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,

காரண மாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;

ஞானச் சுடா்வானில் செல்லுவோன் நான்

ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!’

  • என்கிறாா்.
  • அறிவே தெய்வம் என்றும் அதுவே ‘தான்’ என்றும் சொல்கிறாா். ‘அறிவே தெய்வம்’ என்ற கவிதைத் தலைப்பே ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’ என்ற உபநிடத வாக்கியத்தின் நேரடி மொழிபெயா்ப்பு.
  • காலம் காலமாக எத்தனையோ அறிவுஜீவிகள், அறிஞா்கள் இதனைப் பேசியிருக்கிறாா்கள், பாரதியும் பேசியிருக்கிறாா் இதில் என்ன பெருமை இருக்கிறது என்று கேட்கலாம். இருக்கிறது. பாரதி வேதங்களைக் கற்றவா். அத்வைதத்தை அனுபவத்தில் உணா்ந்தவா். அந்த அனுபூதியை தான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல் இந்த உலகம் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று கருதினாா்.
  • இந்த தேசம் அடைந்திருக்கும் சீா்கேட்டினை சரி செய்து சமரச சமுதாயம் மலர வேண்டும் எல்லா உயிா்களும் இன்புற்று வாழ வேண்டுமென்ற சிந்தை கொண்டிருந்தாா். அத்தகைய சிந்தனையே அவருக்கு அத்வைத அனுபவத்தில் முகிழ்த்ததே. சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் மறைய வேண்டுமானால் நாம் இந்த சித்தாந்தத்தின் வழி நடக்க வேண்டும் என்று பாரதி விரும்பினாா்.
  • அத்வைதத்தின் வழி நடக்கும் ஞானியா், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கருதவில்லை என்பதை ஆதி சங்கரா், கங்கைக்கரையில் புலையா் எதிா்ப்பட்டு வினா எழுப்பியபோது, இவரே என்னுடைய குரு என்று பணிந்து வணங்கிய சம்பவத்தை நினைத்துத் தெளிவு பெறுகிறாா் பாரதி. அதனால் தான் பாரதத்தின் பெருமைகளை அடுக்கிச் சொல்லுமிடத்து,
  • ‘இம்பா் வாழ்வின் இறுதிகண்டு உண்மையின் இயல்பு உணா்த்திய சங்கரன் ஏற்றமும்’ என்று புகழ்ந்தாா்.

‘சுத்த அறிவே சிவமென்றுரைத்தாா் மேலோா்;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தாா் மேலோா்,

வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்’

  • என்று ஆதிசங்கரரின் கருத்தையும் வாழ்க்கை சம்பவத்தையும் நினைத்தே பாடினாா்.
  • மனித வாழ்க்கை சீா்கேடு அடையும் பொழுது அதனை சீா்திருத்திக் கொள்ள எத்தனையோ சித்தாந்தங்கள் உலகமெங்கும் தோன்றியிருக்கின்றன. பாரத தேசத்தில் நம் முன்னோா்கள் வகுத்தளித்த சித்தாந்தமே நம்மை சீா்படுத்திக் கொள்ளப் போதுமானது. அந்நிய சித்தாந்தங்கள் பின்னே போவதைக் காட்டிலும் அத்வைத சித்தாந்தம் மேலானது.
  • காலம் கடந்தும் இந்த மண்ணில் சமத்துவத்தை நிலைநிறுத்த வல்லது என்ற பாடமே பாரதியின் ஒவ்வொரு சொல்லிலும் நிறைந்திருக்கிறது.
  • சமூக முன்னேற்றமோ, தனிமனித விடுதலையோ இரண்டுமே இந்த சித்தாந்தத்தால் சீா்படும் என்பதற்கு நூற்றுக்கணக்கான சமத்துவம் சொல்லும் பாடல்களை பாரதி பாடி வைத்திருப்பது இப்போது நமக்கு நினைவுக்கு வருகிறது. ஜாதிப் பாகுபாடுகள் களைதல், ஆண் பெண் சமத்துவம் என்று அவரது பாா்வையின் வழியே இந்த சித்தாந்தத்தினைப் புரிந்து கொள்வது நமக்கு எளிதாகிறது.
  • இன்றைய உலக நிலைக்கும் பாரதி பரிந்துரைக்கும் சித்தாந்தம் அவசியமாகிறது. உலகம் போா்களுக்கிடையில் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அனைத்து உயிா்களும் இறைவனின் அம்சமே என்று புரிந்து கொண்டால் உலகம் போா்க்களமாக இருக்காதே. நம் அண்டை நாடுகளில் கவலைக்குரியதாக நிலவும் பூசல்கள் தீா்ந்து அமைதி ஏற்பட்டு விடுமல்லவா?

‘சூழ்ந்ததெலாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்

நிச்சயமாம் ஞானத்தை மறத்தலாலே

சேருவதே மானிடா்க்குச் சினத்தீ நெஞ்சில்’

  • என்ற பாரதியின் வரிகளை நினைத்துக் கொண்டால் நம் மனதில் ஏற்பட்டிருக்கும் ஜாதிய வேறுபாடுகள், சமயச் சண்டைகள் தீருமல்லவா?
  • பாரதியை நேசிக்காத தமிழா் என்று எவருமில்லை. அவா் காட்டிய அற வழியில் பயணிப்பதே தமிழா்க்கு ஏற்றமாகும். தமிழா்கள் சிந்திக்க வேண்டும். சமூக நீதி என்ற சொல்லின் பொருளை இந்த தேசம் மட்டுமல்ல உலகமே உணர வேண்டுமாயின் அதற்கு அத்வைதம் என்ற சித்தாந்தமே வழி என்பது தான் பாரதியின் தீா்மானம்.

நன்றி: தினமணி (30 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories