TNPSC Thervupettagam

பாரிஸ் ஒலிம்பிக் 2024 | ஒலிம்பிக் வரலாறு

July 17 , 2024 179 days 576 0
  • உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஒலிம்பிக் போட்டி, நவீன ஒலிம்பிக் போட்டிக்குவித்திட்ட பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.
  • ஜூலை 26 அன்று ஆரம்பித்து, ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்.
  • கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் போட்டி இது. இதில் 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் 206 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பதால் அத்தனை நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளும் போட்டியாளர்களும் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியின் வயது சுமார் 2,800 ஆண்டுகள்.
  • பழங்கால கிரேக்கத்தில் பொ.ஆ.மு (கி.மு) 8ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டி, பொ.ஆ (கி.பி) 2ஆம் நூற்றாண்டு வரை விளையாடப்பட்டுவந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பியா என்கிற இடத்தில் ‘ஜீயஸ்’ கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் போர்க்குணமிக்க வீரர்கள் பங்கேற்க ஆரம்பித்த பிறகு, விளையாட்டுகளில் சுவாரசியம் கூடியது. 18ஆம் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதித்தல் போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன. 20ஆம் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை சேர்க்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
  • பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தை ரோமானியர்கள் கைப்பற்றிய பிறகு, ஒலிம்பிக் போட்டிகள் வீழ்ச்சியடைந்தன.
  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் வரலாற்றாளருமான பியர் டி கூபெர்டின், உடற்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அப்போதுதான் ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் உருவானது.
  • ‘போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம்’ என்கிற நோக்கத்தை முன்வைத்து, கூபெர்டின் முயற்சியில் 1896ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்தது. கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 280 வீரர்கள் கலந்துகொண்டனர்.
  • 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 997 வீரர்களில் 22 பேர் பெண்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட சம அளவில் ஆண்களும் பெண்களும் கலந்துகொள்கின்றனர்.
  • 1924ஆம் ஆண்டு முதல் பனிப்பகுதியில் விளையாடக்கூடிய விளையாட்டுகளுக்காக, ‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் நடத்தப்படு கின்றன. கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.
  • 1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போது ஹிட்லர் ஆட்சியில் இருந்தார். ஆரிய இனமே உயர்வானது என்கிற நாஜிகளின் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் நோக்கில், நாஜிகள் அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று நினைத்தார். வீரர்களிடம் பாரபட்சம் காட்டினார்.
  • ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜெஸி ஓவன்ஸ், ஹிட்லரின் இனவாத எண்ணத்தை மாற்ற நினைத்தார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் ஜெர்மனியின் ‘லஸ் லாங்’ முதல் முயற்சியில் தகுதி பெற்றார். பதற்றத்தில் இருந்த ஜெஸி ஓவன்ஸ் இரண்டு முறை தோல்வி அடைந்தார்.
  • அப்போது லஸ் லாங், பதற்றப்படாமல் விளையாடினால் வெற்றி பெறலாம் என்று ஜெஸி ஓவன்ஸிடம் கூறினார். இறுதிப் போட்டியில் ஜெஸி ஓவன்ஸ் தங்கம் வென்றார். வெள்ளி வென்ற லஸ் லாங், ஹிட்லர் எதிரிலேயே ஜெஸி ஓவன்ஸைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். அந்த ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று ஹிட்லரின் இனவாத எண்ணத்தைத் தகர்த்தெறிந்தார் ஜெஸி ஓவன்ஸ்.
  • இரண்டாம் உலகப் போரின்போது இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
  • 1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆப்ரிக்க அமெரிக்கர்களான டோம்மி ஸ்மித் தங்கமும் ஜான் கேர்லோஸ் வெண்கலமும் வென்றனர். பதக்கம் பெறும்போது தங்கள் தலையைத் தாழ்த்தி, கையை உயர்த்தி, அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நடத்தப்படும் விதத்துக்கு எதிர்ப்புக் காட்டினார்கள்.
  • 1980ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா தலைமையில் 65 நாடுகள் புறக்கணித்தன.
  • 1979ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தான் மீது எடுத்த படையெடுப்புக்காக இந்தப் புறக்கணிப்பு நடந்தது. 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை சோவியத் தலைமையில் கம்யூனிச நாடுகள் புறக்கணித்தன.
  • இன்று ஒலிம்பிக் போட்டிகள் வர்த்தக நோக்கில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories