- கதைக்கும் வரலாற்றுக்குமான இடைவெளி ஆய்வுகளால் மட்டுமே வெளிச்சப்படுத்தப்படும். சில கதைகள் வரலாற்றின் வீச்சுப் போலவேமுகங்காட்டினாலும், வரிக்கு வரி கற்பனைப் பூச்சுடன் எழுதப்பட்டிருப்பதை நுணுக்கப் பார்வை தெளிவுபடுத்தும். வரலாறும் அப்படித்தான். உண்மைகளையே அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும் எழுத அல்லது சொல்லப்பட்டிருக்கும் முறையால், ‘இது கதையோ’ என்று உணர வைக்குமாறு அமைந்துவிடும். சொல்லப்போனால், சில கதைகள் சாகா வரம் பெற்று வரலாறாகவே வாழ்கின்றன. சில வரலாறுகள் சரியாக வெளிப்படாமையினால் கதைகளோ என்று மருளவைக்கின்றன.
- மூன்று பேர் வாழ்க்கையில் நேர்ந்த ஒரேநிகழ்வைப் புராணக்கதையாகவும் கல்வெட்டுச் சொல்லாடலாகவும் காலம் நம் முன் நிறுத்துகிறது. தேவார மூவரில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானின் தோழராகக் கொண்டாடப்படுபவர். அவரது வாழ்க்கையை விளக்கும் திருத்தொண்டர் புராணம், ஒற்றியூரில் தாம் காதலித்து மணந்த சங்கிலிக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால், அவருக்கு நேர்ந்த பார்வையிழப்பையும் அதன் தொடர் விளைவுகளையும் விரிவாகப் பேசுகிறது.
- ‘உன்னைப் பிரியேன், ஒற்றியூரில் உன்னுடன் உறைவேன்’ என்று உறுதியளித்துச் சங்கிலியை மணந்தார் சுந்தரர். சில நாட்களில் பரவை நங்கையுடன் அவர் வாழ்ந்த திருவாரூர் நினைவுகள் ஆட்கொண்டன. ஆரூர் வயப்பட்டவராய், சிவபெருமான் அறியத் தாம் சங்கிலிக்கு அளித்த உறுதிமொழி மறந்து, ஒற்றியூர் நீங்கிய சுந்தரருக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தவறால் நேர்ந்த துன்பம் இது என்பதை உணர்ந்த சுந்தரர் ஆரூர் இறைவனைப் பாடிப் பார்வை பெறுவேன் என்று பாடியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்.
- பாடல்கள் வளர்ந்தன, பயணமும் நீண்டது. ஆனால், பார்வை வரவில்லை. திருவெண்பாக்கத்தை அடைந்து ஆற்றாமை யால், ‘இறைவனே இங்குள்ளீரோ’ என்று கேட்டபோதும், ‘உளோம் போகீர்’ என்று மறுமொழித்து, தடுமாறாது நடக்க சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்தாராம் இறைவன். காஞ்சிபுரத்தில்தான் கடவுள் கருணை காட்டி, அவருக்கு இடக்கண் பார்வையை மீளத் தந்தார். வலக்கண் பார்வை சுந்தரருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழியெல்லாம் கதறியும் புலம்பியும் பாடிச் சென்றவருக்கு, மறு கண் பார்வை ஆரூரில்தான் கிடைத்தது.
- இப்படிப் பார்வை போவதும் இறையருளால் மீளக் கிடைப்பதும் சுந்தரருக்கு மட்டுமே நிகழ்ந்ததன்று. சிராப்பள்ளி மாவட்டம் பெருங்குடி அகத்தீசுவரம் கோயிலிலும் புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டி ஆலத்தூர்த் தளியில் (கோயில்) பொறிக்கப்பட்டிருக்கும் இரண்டு கல்வெட்டுகள் அவ்வூர்களில் வாழ்ந்த இருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டுச் சரியானதாகச் சொல்கின்றன.
- சிராப்பள்ளிப் பகுதியைப் பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டளவில் ஆண்ட ஒய்சாள மன்னர்களுள் ஒருவரான வீரராமநாதன் ஆட்சிக் காலத்தில், பெருங்குடி இருந்த பகுதி ஜகதேகவீரச் சதுர்வேதிமங்கலமாக அறியப்பட்டது. அங்கு வாழ்ந்த தட்டார் மருதாண்டார் அறச் சிந்தனையாளர். அகத்தீசுவரம் கோயிலில் அவர் காலத்தே திருப்பணி நிகழ்ந்தது. அப்போது அங்கு பணியாற்றிய கல்தச்சர்களுக்கு உரிய ஊதியம் அளிக்கப் போதுமான தொகை கோயிலாரிடம் இல்லை. நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இச்சிக்கலான சூழலை அறிந்த மருதாண்டார், உடனே தம்மிடமிருந்த மூன்று கழஞ்சுப் பொன்னைத் தந்து உழைத்த தச்சர்கள் ஊதியம் பெறத் துணையானார்.
- மருதாண்டாருக்கு நல்லமங்கை என்ற பெயரில் ஒரு பெண் இருந்தார். அவருக்குத் திடீரெனப் பார்வை மங்கிப் பார்வையிழப்பு நேர்ந்தது. மகளின் பார்வையிழப்பால் உளம் சோர்ந்த மருதாண்டார் அகத்தீசுவரரிடம் முறையிட, இறையருளால் நல்லமங்கை பார்வை பெற்றதாகவும் அந்த மகிழ்வைக் கொண்டாட, மருதாண்டார் ஒரு கழஞ்சுப் பொன்னில் தங்கப் பட்டம் செய்து பெருங்குடி இறைவனுக்கு வழங்கியதாகவும் கோயிலில் பதிவாகியுள்ள கல்வெட்டுக் கூறுகிறது.
- பல்லவ மன்னரான தந்திவர்மர் காலத்தில் குவாவன் சாத்தன் எனும் முத்தரையரால் மலையடிப்பட்டியில் குடையப்பெற்ற ஆலத்தூர்த் தளி சிறப்புக்குரிய குடைவரைக் கோயிலாகும். தமிழ்நாட்டின் மிகப் பழைமையான எழுவர் அன்னையர் சிற்பத் தொகுதிகளுள் ஒன்று இங்குள்ளது. வாகீசுவரர் கோயிலாகவும் கல்வெட்டு ஒன்றால் அறியப்படும் இத்தளியில், வெகுதானிய ஆண்டு, தைத் திங்கள் 11ஆம் நாளில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு, ஆவுடையாதேவன் என்பாருக்கு நேர்ந்த பார்வையிழப்பைப் பதிவுசெய்துள்ளது.
- பூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையாதேவன். அவருக்கும் சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருநெடுங்களத்து விலைமாதுஒருவருக்கும் உறவிருந்தது. தேவன் அப்பெண்ணின் இல்லத்தில் தங்கியிருக்கையில், அப்பெண்மணி பிராமணர் ஒருவரையும் வரச்செய்து உறவாக்கிக் கொண்டமை ஆவுடையாதேவனைச் சினமுறவைத்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத ஆவுடையான் இருவரையும் வெட்டிக் கொன்றார். பின் அங்கிருந்து மலையடிப்பட்டிக்கு வருகையில் அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு நேர்ந்தது.
- தம் கொலைச் செயலுக்கு நேர்ந்த தண்டனையோ இது என்று உளம் மருகிய ஆவுடையான், பார்வை மீண்டால் தம் வயலை வாகீசுவர சுவாமிக்கு அளிப்பதாக வேண்டிக்கொள்ள, பார்வை திரும்பக் கிடைக்கிறது. இழந்த பார்வை மீளப்பெற்ற மகிழ்வில் தம் காணியான குடிகாட்டை வாகீசுவரருக்கு எழுதித் தந்த ஆவுடையான், அதை ஆலத்தூர்த் தளியில் கல்வெட்டாகவும் பொறிக்கவைத்தார்.
- சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் இம்மூவருக்குமே திடீரெனப் பார்வையிழப்பு நேர்ந்து, சிறிது காலத்தில் அது மீளக் கிடைக்கிறது. சுந்தரர் நிகழ்வைக் கதையென்று ஒதுக்குவாருக்குப் பெருங்குடி, மலையப்பட்டிக் கல்வெட்டுகள் அது வரலாறாக இருக்க வாய்ப்புண்டு என்பதைக் கண்முன் காட்சியாக நிறுவுகின்றன.
- கண் மருத்துவத்தில் அமோரோஸிஸ் பியுகாக்ஸ் (Amaurosis Fugax) என்றொரு நிலை பேசப்படுகிறது. பார்வைத்திரையாகப் பார்க்கப்படும் ரெட்டினாவுக்குத் திடீரென ஏற்படும் ரத்தஓட்டக் குறைவினால் ஒரு கண்ணிலோ, இரண்டு கண்களிலுமோ நேரும் தற்காலிகப் பார்வையிழப்பு நிலையே அமோரோஸிஸ் பியுகாக்ஸ். இது சில நிமிடங்களில் சரியாகக்கூடியது என்றாலும், சிலருக்கு உள்ளிருக்கும் பிற நோய்களால் தொடரலாம். சுந்தரர், நல்லமங்கை, ஆவுடையாதேவன் மூவருக்கும் நேர்ந்த பார்வையிழப்பு இதனால்தானா என்பதை யாரறிவார்? ஆனால், இந்த மூன்று நிகழ்வுகளும் கதையல்ல, வரலாற்றின் பதிவுகள்.
நன்றி: இந்து தமிழ் திசை (05– 05 – 2024)