- இருபத்தி ஐந்து வயதுடைய பெண் ஒருவர் கண் பரிசோதனைக்குக் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்குக் கண்ணில் நீர் அழுத்தம் (Intraocular Pressure) அதிகமாகிக் கண்ணில் உள்ள பார்வை நரம்பு 25% பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
- மருத்துவர் அவரைக் கண் நீர் அழுத்தத்தைக் குறைக்கும் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.ஆனால், அந்தப் பெண் சில நாள்கள் மட்டுமே சொட்டு மருந்தைப் பயன்படுத்தியுள்ளார். அதன்பிறகு மருந்தை நிறுத்திவிட்டார்.
- இதனால், அப்பெண்ணின் கண் நரம்பு கூடுதலாகப் பாதிக்கப்பட்டு அவரது பார்வை பாறிபோனது. கண் நீர் அழுத்த நோய் (கிளாகோமா) குறித்து மக்களிடம் அறியாமை நிலவுவதால் இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
கிளாகோமா என்றால் என்ன?
- ஒரு மனிதனின் உடலில் ரத்த அழுத்தம் 120/80 MMHg முதல் 140/ 90 MMHg வரை இருக்க வேண்டும். அதுபோலக் கண்ணில் நீர் அழுத்தம் 10 mmhg முதல் 21 mmhg வரை இருக்க வேண்டும். மாறாக, உடலில் ரத்த அழுத்தம் 140/90க்கு மேல் அதிகமானால் மிகை ரத்த அழுத்தம் என்பதைப் போல் கண்ணில் நீர் அழுத்தம் 21க்கு மேல் அதிகமானால் கிளாகோமா நோய் ஏற்பட்டு அது பார்வை நரம்பைப் பாதிக்கும். முதலில் பார்வை நரம்பின் ஓரப்பகுதி பாதிக்கப்படும். பின் நரம்பின் மையப் பகுதி பாதிக்கப்பட்டுப் பார்வை முழுவதும் குறைந்துவிடும். இதுதான் கிளாகோமா எனப்படும் கண் நீர் அழுத்த நோய்.
பரிசோதனைகள்:
- கண் நீர் அழுத்தம் அளக்கும் கருவி மூலம் உங்கள் கண் நீர் அழுத்தத்தைக் கண் மருத்துவர் கண்டறிவார். பின் கண் நரம்பில் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படும். கண் நரம்பு பாதிப்பு இருந்தால் உங்கள் பார்வையின் தரம்,மையப் பார்வை, பக்கவாட்டுப் பார்வையைக் கண்டறியும் பார்வைப்புலப் பகுப்பாய்வு செய்யப்படும். கண் நீர் அழுத்தம் அதிகமாகக் காணப்பட்டால் கிளாகோமா பாதிப்பு உள்ளதை OCT ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்படும். மருத்துவச் சோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை முறையை மருத்துவர் தேர்வுசெய்வார்.
இரண்டு வகைகள்:
- முதல் வகையில் கண்ணின் உள்புறத்தில் அமைந்துள்ள கோணம் குறுகலாகி நீர்ப் பாதை அடைப்பு இருந்தால் கண் சிவத்தல், தலைவலி இரண்டும் அடிக்கடி ஏற்படும். இதனால், கண் நீர் அழுத்தம் அதிகமாகி, கண் நரம்பு பாதிக்கப்படும். இதற்குச் சிறிய லேசர் (Laser peripheral iridotomy (LPI)மூலம் சிகிச்சை அளித்தால் கண் நரம்பைப் பாதுகாத்துக்கொள்ளலாம். ஒரு நாள் சிகிச்சை, தொடர் கவனிப்பு நம் பார்வையைப் பாதுகாக்கும்.
- இரண்டாவது வகை, கண் நீர்ப் பாதை வடிகால் அடைப்பு ஏற்பட்டு வரும் கிளாகோமா (Open Angle Glaucoma). இதற்குக் கண் நீர் அழுத்தத்தைக் குறைக்கும் கண் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
- பிறந்த குழந்தைகளுக்கும் கிளாகோமா ஏற்படலாம். இதைப் பிறவி கிளாகோமா (Congenital Glaucoma) என்று கூறுவார்கள். இதற்கு முறையான தொடர் சிகிச்சை அவசியம். கவனக் குறைவு, குழந்தைக்குத் திரும்பப்பெற முடியாத பார்வையிழப்பை ஏற்படுத்தும்.
- கண்ணில் நரம்பு பாதிப்பு அதிகமாகத் தெரிந் தால் உங்கள் நரம்பைப் பாதுகாக்கக் கண் நீர் அழுத்தத்தைக் குறைக்கும் கிளாகோமா அறுவைசிகிச்சை செய்துகொள்ள மருத்துவர் அறிவுறுத்துவார்.
அறியாமையும் அலட்சியமும்:
- கிளாகோமா நோயைக் கட்டுப்படுத்த நம்மிடம் சிறந்த சிகிச்சை முறைகள் இருந்தாலும் மக்களிடையே உள்ள அறியாமையால் மருத்துவரின் அறிவுரைப்படி கண் சொட்டு மருந்து போடாமல் கண் நரம்பு பாதிப்பு அதிகமாகி பார்வையை இழக்கும் சூழல் உள்ளது.
- கிளாகோமாவில் ஏற்படும் கண் நரம்புப் பாதிப்பு திரும்ப சரிசெய்ய இயலாத பாதிப்பு என்பதை உணர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். கிளாகோமா சிகிச்சைகள் அனைத்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமின்றிக் கிடைக்கின்றன.
- கிளாகோமா அறுவைசிகிச்சையைத் தனியார் மற்றும் தொண்டு நிறுவன கண் மருத்துவமனைகளில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாகச் செய்து கொள்ளலாம். தெளிவான பார்வை மனித குலத்தின் பிறப்புரிமை; அதைக் காப்பது நமது கடமை.
என்னென்ன அறிகுறிகள்?
- பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல்கூடக் கண் நீர் அழுத்தம் அதிகமாகிக் கண் நரம்பு பாதிக்கப்படலாம். இதனால், இந்நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம். ஆகவே கிளாகோமா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் நாம் அனைவரும் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- # வலியுடன் கூடிய சிவந்த கண்கள்
- # தலைவலி, கண் சிவத்தல்
- # பொறுக்க முடியாத கண் வலி
- # பார்வை மங்கலாகத் தெரிதல்
- # பார்வையில் வண்ண வண்ண வளையங்களாகத் தெரிதல்.
- # குறுகிய மையப்பார்வை.
- # கண்ணாடி பவர் அடிக்கடி மாறிக் கொண்டிருத்தல்
- - இவை கிளாகோமாவினால் பரவலாக ஏற்படும் அறிகுறிகள்.
யாரைப் பாதிக்கும்?
- # 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
- # சிறுவயதிலேயே கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை காரணமாகக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள்
- # ஆஸ்துமா, சரவாங்கி (Rheumatoid Arthritis) மற்றும் பிற நோய்களுக்காக ஸ்டீராய்டு மருந்து தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள்.
- # சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள், கண்ணில் ஆழமாகக் காயம் ஏற்பட்டவர்கள்.
- # கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள்.
- # குடும்பத்தில் யாருக்காவது கிளாகோமா பாதிப்பு இருந்தால் மரபு ரீதியாகவும் பரவக்கூடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 04 – 2024)