TNPSC Thervupettagam

பாலன் என்றோர் மாமனிதன்

May 31 , 2023 591 days 489 0
  • தன் வாழ்நாள் முழுதும் மக்களுக்காகவே போராடிய மாபெரும் தலைவர் கே. பாலதண்டாயுதம் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. 1962 -ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான பால தண்டாயுதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, "என்பெயர் கே. பாலதண்டாயுதம். தோழர்கள் என்னை பாலன் என்று கூறினார்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு சென்னையில் அதே ஆண்டுதான் நடைபெற்றது. மாநில மாநாட்டை சென்னையில் நடத்துகின்ற குழுவில் தோழர் பாலன் தலைமையில் தோழர்கள் மோகன் குமாரமங்கலம், ஏ.எஸ். கே, கே. முருகேசன், ஹரிபட், பரமேஸ்வரன், கஜபதி, டி. பழனிசாமி, தா. பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பாலன் ஆயுள் தண்டனையை அனுபவித்து வெளியே வந்திருந்த நேரம் அது.
  •  சிறப்பு மாநாட்டின் நிதி வசூல் தனியே வங்கிக் கணக்கில் போடப்பட்டு வந்தது. சென்னை மாவட்ட குழுவின் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து பத்து ரூபாய் நோட்டுக்களாக ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தார். அப்போது அலுவலகத்தில் முழுநேர ஊழியராக இருந்த ஒரு தோழரிடம் பணத்தை கொடுத்து வங்கியில் போடச் சொல்லி அனுப்பி விட்டார்கள். போனவர் திரும்பி வரவில்லை "பணத்தோடு ஓடிவிட்டான்' என்றார் ஒருவர்.
  • தோழர்கள் தா. பாண்டியனும் டி. பழனிசாமியும் தோழரின் வீட்டிற்கு மாலை சென்றார்கள்.
  • அந்தத் தோழரின் வீடோ பரிதாபமான நிலையில், வறுமையின் பிடியில் இருந்தது. காற்று புகாத அறை. தோழர் போர்வையை போர்த்தி நடுங்கிக் கொண்டு படுத்திருந்தார். அருகில் அவர் மனைவியும் அழுது கொண்டிருந்தார். தோழரின் தந்தையும் கம்யூனிஸ்ட் ஆக இருந்து மறைந்தவர். சென்ற தோழர்கள் மனைவியிடம் "என்ன நடந்தது' என்று கேட்டுள்ளார்கள்.
  • மனைவி "நீங்கள் கட்சிப் பணத்தை வங்கியில் போடச் சொல்லி இவரிடம் கொடுத்தீர்களாம். வங்கியில் இவர் சீட்டு எழுதிக் கொண்டிருந்தபோது யாரோ ரெண்டு பேர் நெருங்கி வந்து பேனா எடுப்பது மாதிரி ரூபாயை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம். அழுது கொண்டே வந்தார். காய்ச்சல் மாதிரி சூடேறிவிட்டது. அனலாய் கொதிக்கிறது' என்றார்.
  • பாண்டியன் அவர் தலையைத் தொட்டு பார்த்தார். சூடு அனல் பறந்தது. கை கால்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. உதறல் எடுத்தபடியே அழுது கொண்டே "கட்சி பணம்', "கட்சி பணம்' என்று மட்டும் புலம்பிக்கொண்டிருந்தார்.
  • தோழர்கள் இருவரும் அலுவலகம் திரும்பி வந்து நடந்த செய்தியை தலைவர்களிடம் சொன்னார்கள். மூத்த தோழர் ஒருவர் "உடனடியாக போலீஸில் புகார் கொடுங்கள். நாலு தட்டு தட்டினால் நோட்டு வந்துவிழும்' என்றார். வேறு சிலரும் அதனை ஆதரித்தார்கள். பாலனும் அங்கிருந்தார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று மற்றவர்கள் அவர் முகத்தையே பார்த்தார்கள்.
  • பாலன், "நாளை கூடும் செயற்குழு கூட்டத்தில் இதுபற்றிப் பேசலாம்' என்று கூறிவிட்டு எழுந்து, தா. பாண்டியனிடம் "நீ பார்த்தாயே உனக்கு சந்தேகமா' என்று கேட்டார். தா.பா., "அவர் வீட்டைப் பார்த்தால், அவருடைய மனைவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை. பணம் திருட்டு போய்விட்டது என்று நினைக்கிறேன்' என்றார். யாரிடமும் எதுவும் பேசாமல் மெளனமாக பாலன் வீட்டுக்கு போய் விட்டார்.
  • மறுநாள் செயற்குழு கூடியது. அதே விஷயம் குறித்து விவாதம் நடந்தது. "அந்த தோழரை போலீஸில் ஒப்படைக்க வேண்டும்' என்று முதல்நாள் ஒலித்த குரல் ஓங்கி ஒலித்தது. பாலன் திடீரென கோபப்பட்டார். "ஒரு தோழனை போலீஸில் ஒப்படைப்பதா? அவன் ஒரு கம்யூனிஸ்ட். அவனுடைய அப்பாவும் ஒரு கம்யூனிஸ்ட். கட்சிக் குடும்பம். ஆயிரம் ரூபாய்க்காக அவனை போலீஸிடம் ஒப்படைப்பதா? நாம் வேண்டுமானால் அவரைஅழைத்து விசாரிக்கலாம். நான் வேண்டுமானால் அவரைஅடிக்கிறேன். ஆனால், போலீஸிடம் புகார் கொடுக்க கூடாது . நம் கட்சியில் இப்படி ஒரு யோசனையா' என்றார்.
  • மூத்த தோழர் விடுவதாக இல்லை. தன் கருத்தை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருந்தார். பாலன் உணர்ச்சிவசப்பட்டு "நான் வேண்டுமானால் பணத்தைக் கட்டி விடுகிறேன். இந்த பிரச்னையை இத்தோடு விட்டு விடுங்கள்' என்றார். அதன்பின் யாரும் எதுவும் பேசவில்லை.
  • மறுநாள் மாலை கட்சியை கவனிக்க போடப்பட்ட ஒரு போலீஸ்காரர் வந்தார். பாலனிடம், "உங்கள் பையன் ஒருத்தன் பணத்தை பேங்க்ல போடப் போனபோது ஒருத்தன் பாக்கெட் அடிச்சுட்டான். நேத்து காலையில ஸ்டேஷனுக்கு வந்து அந்த பையன் "கட்சி பணம் சார் எப்படியாவது பிடிச்சு கொடுங்க இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன்னு அழுதான். நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். ரூபாய் நோட்டுன்னா பிடிக்கிறது கஷ்டம்' என்று கூறினார்.
  • சிறைகளைக் கண்டு அஞ்சாத பாலன் என்னும் சிங்கத்தின் கண்களில் கண்ணீர் மல்கி நிற்பதை தோழர்கள் கண்டோம். இதயமும் மூளையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற தலைவனை பெற்றிருக்கிறது கட்சி என்று மகிழ்ந்தோம்.
  • பாலன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி படித்துக்கொண்டிருந்தபோது, இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்றதால் ஜவாஹர்லால் நேருவின் வேண்டுகோளை ஏற்று மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் நிதி வசூல் செய்தார்கள். அந்த நிதியை ஒரு மாணவன் கையாடல் செய்து விட்டான். இது தவறு என்று சுட்டிக்காட்டி போராடியதால் பாலதண்டாயுதத்தை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கினார்கள்.
  • பாலன் தன் சொந்த வாழ்க்கையை நினைக்கவில்லை. திருநெல்வேலி மாவட்டத்திற்கு பணியாற்ற அனுப்பப்பட்டார். அரசியல் பொதுவுடைமை இயக்கமே என்பதை முடிவு செய்தார். பேராசிரியர் நா. வானமாமலையுடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்தார். மாணவர் அமைப்பை உருவாக்கினார்.
  • எழுத்தாளர் கல்கி 1940 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கதை எழுதி இருந்தார். அதன் தலைப்பு "விநாயகத்தின் விடுதலை' என்பதாகும். விநாயகம் என்பவர் ஒரு கெளரவ ஜெயில் விசிட்டர். அவர் ஒரு கனவு காண்கிறார். கனவில், சத்தியாகிரகம் செய்து சிறைக்குப் போய் விடுதலை எப்போது வரும் என்று தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் ஒரு நாள் விடுதலை கிடைக்கிறது. விடுதலை, ஆனதும் சிறையின் வாசலிலேயே அவரை மறுபடியும் பாதுகாப்பு சட்டப்படி கைது செய்கிறார்கள். உடனே அவர் பிராணன் போய் கீழே விழுந்து விடுகிறார். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்ததும், சிறை விசிட்டர் வேலையை ராஜினாமா செய்கிறார் .
  • கதையை எழுதிய கல்கியை அவரது நண்பர் கிருஷ்ணசாமி பாரதி நேரில் சந்திக்கிறார். கதையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "உங்கள் கதை, அதாவது கற்பனை கதை, வெளியான அதே சமயத்தில் இங்கே அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் ஒரு வித்தியாசம். உங்களுடைய கற்பனைக் கதையில் விநாயகம் பிராணன் போய் விடுகிறது. இங்கே நாயகன் சிரித்தபடி தலை நிமிர்ந்து நிற்கிறான்' என்றார். "விவரமாகச் சொல்லுங்கள்' என்று கல்கி கேட்டவுடன் "பாலதண்டாயுதம் தெரியும் இல்லையா' என்று கிருஷ்ணசாமி பாரதி கேட்டார். "நேரில் தெரியாது, ஆனால் பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். சிதம்பரத்தில்...' என்றார் கல்கி. "ஆமாம் ஆமாம் அவரேதான், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேர் வாங்கியவர்தான். ஆனால் அவருக்கு இங்கே ரொம்ப நல்ல பெயர்' என்று கூறினார் கிருஷ்ணசாமி பாரதி.
  • "அப்புறம் என்ன நடந்தது' என்று கல்கி கேட்டார். கிருஷ்ணசாமி பாரதி, "பாலதண்டாயுதம் சிறைக்கு வருவதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி காலேஜ் மாணவி. அவர், கணவரைப் பார்ப்பதற்காக ஒரு சமயம் இங்கே வந்திருந்தார். புது மணம் புரிந்தவர்கள். அதிலும் காதல் கல்யாணம். ஆனால் சோக நாடகம்' என்று கூறிவிட்டு தனது பேச்சை நிறுத்தினார் கிருஷ்ணசாமி பாரதி.
  • "கடைசியில் நாடகம் சுகமாகத்தானே முடிந்தது' என்று ஆர்வத்தோடு கேட்டார் கல்கி.
  • "இல்லை, பாலதண்டாயுதம் சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு வாழ்க்கை நடத்துவது பற்றி என்னென்னவோ பிளான் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் கொஞ்ச நாள் மனைவியுடன் இல்வாழ்வு நடத்துங்கள் என்று சொன்னார்கள். விடுதலை நெருங்க நெருங்க அவர் தவித்த தவிப்பையும் பரபரப்பையும் பார்க்க வேண்டுமே! விடுதலைக்கு முதல் நாள் அவர் தரையில் நடக்கவே இல்லை. ஒவ்வொருவரிடமும் போய் விடை பெற்றுக் கொண்டார். ராத்திரி ஒரு நிமிடம் கூட கண் மூடி இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு பேச்சை நிறுத்தினார் கிருஷ்ணசாமி பாரதி.
  • "மறுநாள் விடுதலை ஆயிற்றா, இல்லையா' கல்கி ஆவலுடன் கேட்டார். கிருஷ்ணசாமி பாரதி, "கொஞ்சம் பொறுங்கள். மறுநாள் பொழுது விடிந்து சிறைச்சாலையின் கதவு திறந்தது. பாலதண்டாயுதம் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். அவரது முகம் மலர்ந்து இருந்தது. அவரை வரவேற்பதற்கு, அவருடைய மனைவி சிறை வாசலில் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார். கணவனும் மனைவியும் பேசிக்கொள்வதற்குள் சில போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். பாலதண்டாயுதத்தை அழைத்துக் கொண்டு போய் சாலையில் நின்று கொண்டிருந்த போலீஸ் வண்டியில் ஏற்றினார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, வேலூர் ஜெயிலுக்கு கொண்டு போவதாக தெரிந்தது.
  • அப்போது சிவில் ஜெயிலைச் சுற்றி தட்டி வைத்து கட்டவில்லை. நாங்கள் எல்லோரும் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பரிதாபக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. அந்த நிலையிலும் பாலதண்டாயுதத்தின் முகம் மலர்ந்தபடியே இருந்ததுதான் எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது. இப்படி சொற்ப மனிதர்கள் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்' என்று நிஜக் கதையை சொல்லி முடித்தார் கிருஷ்ணசாமி பாரதி.
  • இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள். மக்களுக்காகப் போராடினார். விடுதலை காலத்திலும் போராடினார். விடுதலைக்குப் பிறகும் போராடினார். 1950-களில் பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டது. பாலனை முதல் எதிரியாக சேர்த்து திருநெல்வேலி சதி வழக்கு போடப்பட்டது. 1952 பிற்பகுதியில் பாலன், இயக்கம் சொன்னபடியும், ராஜாஜியின் வேண்டுகோள் படியும் சரணடைந்தார். அவரை முதல் எதிரியாக சேர்த்து மூவர் மீது வழக்கு நடந்தது.
  • ஏற்கனவே 97 பேர் மீது வழக்கு போடப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்டிருந்தது. இரா. நல்லகண்ணு எட்டு ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த நேரம். பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன் இருவருக்கும் ஆயுள் தண்டனை. 1962 வரை பத்தாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் கோவை சிறையில் இருந்து விடுதலை ஆனார். தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்ட பாலன் 1971-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
  • பாலன் வாழ்ந்து 55 ஆண்டுகள்தான். 1918-இல் பிறந்தார். சிறையில் கழித்த ஆண்டுகள் 12. தலைமறைவு வாழ்க்கை ஆறு ஆண்டுகள். அவருக்கு கிடைத்த மணவாழ்வு 1962 முதல் 1973 வரை 11 ஆண்டுகளே. அந்நாட்களிலும் அவர் வீட்டில் செலவு செய்த நேரம் மிகவும் குறைவே.  எதற்கும் அஞ்சாத பாலன், 1973 மே 31 அன்று விமான விபத்தில் மரணமடைந்தார்.
  • இன்று (மே 31) கே. பாலதண்டாயுதம் மறைந்து 50 ஆண்டு நிறைவு.

நன்றி: தினமணி (31 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories