- உலகப் பொருளாதார மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட உலகளாவிய பாலின இடைவெளி குறித்த ஆய்வறிக்கையில், கடந்த ஆண்டைவிட இரண்டு புள்ளிகள் சரிந்து 129ஆவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 146 நாடுகளில், கடைசி 20 இடங்களுக்குள் இந்தியா இருப்பது வருத்தமளிக்கிறது. உலக சராசரியோடு (68.5%) ஒப்பிடுகையில் பாலின இடைவெளியைப் பூர்த்திசெய்ய இந்தியா (64.1%) கடக்க வேண்டிய தொலைவு அதிகம்.
- பொருளாதாரப் பங்களிப்பு - வாய்ப்புகள் வழங்கப்படுவது, கல்வி, ஆரோக்கியம், அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு முக்கியப் புள்ளிகளை மையமாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் உலகம் முழுவதுமே 0.1% உயர்வைத்தான் நாம் அடைந்திருக்கிறோம். இதே ரீதியில் நாம் பயணித்தால், பெண்ணும் ஆணும் சமத்துவ நிலையை அடைய இன்னும் 134 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும்.
- கல்வி, அரசியல் பங்களிப்பு போன்றவற்றில் இந்தியா ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தபோதும் ஒட்டுமொத்தப் பாலின இடைவெளியில் நாம் பின்னடைவைச் சந்திக்கவும் இவற்றின் போதாமையே காரணம். கல்வியறிவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான 17.2% இடைவெளியோடு 124ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அதேபோல் மாநிலத் தலைமையில் இந்தியா முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்திருக்கிறது. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இடம் வகிப்பது, அமைச்சரவை, சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில் அங்கம் வகிப்பது போன்றவற்றில் பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைச் சரிவே இதற்குச் சாட்சி. 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (78) இந்த ஆண்டு 74 பெண்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பொருளாதாரப் பங்களிப்பு - வாய்ப்பு பகிர்வு ஆகியவற்றில் இந்தியா ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுவருகிறது. இதில் நாம் கவனம் செலுத்துவதன் மூலம் பாலின இடைவெளியை ஓரளவுக்கு விரைவாகக் கடக்க முடியும். உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு 45.9%ஆக இருக்கிறது. இதை உயர்த்துவதில் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கு உயர் கல்வியை உறுதிசெய்வது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவது, உகந்த பணிச்சூழலை உருவாக்குவது (போதுமான எண்ணிக்கையில் சுகாதாரமான கழிப்பறை, மாதவிடாய் விடுப்பு, பணியிடப் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் வகையிலான உள்ளகப் புகார்க் குழு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்டவை), திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் பணிபுரிவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவது (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலைநேரத்தில் நெகிழ்வு உள்ளிட்டவை), வீட்டுவேலைகளில் ஆண்களும் பங்கெடுப்பது போன்றவற்றைச் செயல்படுத்துவதால் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கலாம். உழைப்புச் சந்தையில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவதிலும் அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும்.
- “பாலினச் சமத்துவத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளில் பாலினப் பாகுபாட்டைக் களையும் வகையில், பொதுச் சமூகமும் தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான வலுவான கட்டமைப்பை அரசுகள் உருவாக்க வேண்டும்” என்று உலகப் பொருளாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநர் சாடியா ஸாஹிடி தெரிவித்துள்ளார். குறைவான பாலின இடைவெளி விகிதத்தில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகியவை இதைத்தான் பின்பற்றிவருகின்றன. 140 கோடி மக்களில் சரிபாதி பெண்களைக் கொண்ட இந்தியாவில் பாலினச் சமத்துவத்தை அடைய 2158ஆம் ஆண்டு வரை காத்திருப்பது முறையாகாது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 06 – 2024)