- வறுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை கள், சமத்துவமின்மை ஆகியவற்றை வேரோடு அழிக்கவும் சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்தவும் வேண்டும் எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு விவாதித்தது ஐக்கிய நாடுகள் அவை. ஏற்கெனவே, ஐ.நா. வெளியிட்ட தகவல்கள், உலகின் பல நாடுகளிலும் பெண்களின் சமூக நிலை எந்த வளர்ச்சியும் இன்றிப் பின்தங்கியிருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டின.
அரசியலில் பெண்கள்
- உலகம் முழுதும் 2015 ஆகஸ்ட் மாதம் வரையிலும் தேசிய நாடாளுமன்றப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 22% மட்டுமே. தற்போதைய எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது என்றபோதும், 26 நாடுகளில் இப்போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனத் தனித்தனியான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.
- இதனால் தங்களின் அடிப்படை உரிமைகளைக்கூட நிலைநாட்டிக்கொள்ள முடியாத நிலையில், ஆண்களைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கின்றனர். நம் நாட்டிலும் - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் - இன்னமும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாத 33% இடஒதுக்கீடும் இவ்வகையில் சேரும்.
- பாலினப் பாகுபாடும் பெண்களின் உரிமைகளும்: பெண்களைப் பணிக்கு அமர்த்துவதில் 90% நாடுகளில் சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், பாலினரீதியிலான பாகுபாடுகளைக் களைதல் போன்றவற்றுக்கு அடிப்படைப் பொருளாதார நிலையில் பெண்கள் முன்னேற வேண்டியது மிகவும் அவசியம்.
- ஆனால், பெண்களுக்கு வேலை கிடைக்கும்போதிலும் குறைந்த ஊதியம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுவதால், உலக நாடுகள் முழுவதிலும் ஆண்களைவிட 24% குறைந்த ஊதியமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
- பெண்களுக்கான பொருளாதார, சமூக முன்னேற்றம் கருதிப் பல நாடுகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பது என்பது மகிழ்ச்சியளித்தாலும், உண்மையில் அத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கிச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது வெறும் 10% மட்டுமே. மீதமுள்ள 90% திட்டங்கள் நிதிப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் செயல்வடிவம் பெறுவதில்லை என்பதும் பெரும் துயரம்.
சமூக வளர்ச்சியும் பெண்களும்
- 2020இல் மட்டும் இந்தியாவில் 22,372 பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் எனப் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவிக்கின்றன. 2014 தொடங்கி 2020 வரை 1,52,127 பெண்கள் இத்தகைய முடிவினைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; நாள் ஒன்றில் 61 தற்கொலைகள். நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் இவ்வாறான மோசமான முடிவை எடுக்கிறார்கள்.
- வறுமை மிதமிஞ்சி வதைப்பதுதான் இதற்கு முதன்மைக் காரணம். நாட்டில் வேளாண் குடிமக்களுக்கு அடுத்தபடியாகப் பெண்களே தம் மரணத்தைத் தேர்வு செய்கிறார்கள் என்பது எத்தகைய அவலம்? இவ்வாறு தனக்குத்தானே மரணத்தைத் தேடிக்கொள்பவர்களில் 50%க்கும் மேற்பட்ட பெண்கள் இல்லத்தரசிகள்; குடும்பமே கோயில் என வாழ்பவர்கள்.
- இப்புவியில் வாழ்வதை வலி மிகுந்ததாக நினைப்பதாலேயே, இத்தகைய துயர முடிவை நோக்கி அவர்கள் வலிந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள் என இதைப் புரிந்துகொள்ளலாமா?
- சமநிலை நோக்கிய சமூக வளர்ச்சிக்குப் பெண்களின் முன்னேற்றம் மிக மிக அவசியம் என்பதை வளரும் நாடுகள் பலவும் உணர்ந்திருக்கின்றன.
- பெண்களின் உரிமை, பொருளாதார வளர்ச்சி, பாலியல் பாகுபாடுகள் போன்றவற்றைக் களைய படிப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துவருவதும் பாராட்டத்தக்கவை. 2030க்குள் உலக நாடுகளில் பெண்களின் சமூக நிலையில் மிகப்பெரும் மாற்றங்கள் விளையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
துணைசெய்யும் மாநில மகளிர் கொள்கை
- பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட, ‘தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024’ சமூகநீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது. இக்கொள்கையின் குறிக்கோள்கள் சிறப்பம்சம் வாய்ந்தவை. அவை வலியுறுத்துவதும் பாலின பேதமற்ற சமத்துவம் பெண்களிடம் ஏற்பட வேண்டும் என்பதைத்தான்.
- இடைநிற்றல் இல்லாமல் பெண் குழந்தைகள் கல்வியை நிறைவுசெய்ய வைத்தல், உயர் கல்வியிலும் வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களின் உடல்நலன் கண்காணிக்கப்படுவது ஆகியவற்றுடன் அவர்களின் ஊட்டச்சத்து குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
- இதில் குறைபாடு ஏற்பட்டால் ரத்தசோகையும் அதன் தொடர்ச்சியாகப் பல பாதகமான விளைவுகளையும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிப்பது, அமைப்பு சாராத பணிகளிலும் பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பான பணியிடங்களை அளிப்பது, அதிக ஊதியம் பெறும் வகையிலான பணிகளைப் பெறுவதற்கு அவர்களிடம் தொழில்நுட்பக் கல்வியறிவை மேம்படுத்துவது, தொழில்துறையில் பயிற்சியளிப்பது, சிறுதொழில் முயற்சிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது எனப் பல்வேறு பயனுள்ள கொள்கைகளை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
- அதில் முக்கியமாகப் பெண்களை அரசியல்படுத்த முனைவதும் அதற்கான பயிற்சியை அளிப்பதும் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய முனைப்புடன் கூடிய மகளிர் கொள்கை தீவிரமாகச் செயல்பாட்டுக்கு வந்தால், பெண்கள் பெரும் பயனடையப் போவது உறுதி.
- மார்ச் 8 பெண்கள் தினம் அன்று ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ், பெண்கள் உரிமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியபோது, குறிப்பிட்ட கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
- “பெண்கள் நலனைப் பாதுகாப்பது, பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் பாலினச் சமத்துவத்தையும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை எனில், 2030 இல் 34 கோடிக்கும் மேற்பட்ட பெண்களும், பெண் குழந்தைகளும் மிகக் கொடுமையான வறுமைச் சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பாலின பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அக்கறையும் பொறுப்பும் நம் அரசுகளுக்கு இருக்கிறது என்பதை இதைவிட வலிமையாக யாரும் பேசிவிட இயலாது.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 03 – 2024)