TNPSC Thervupettagam

பால் (கருணை) சுரக்கட்டும்!

August 5 , 2020 1630 days 852 0
  • இந்தியாவைப் பொருத்தவரை, விவசாயிகள் பருவமழையையும் விளைச்சலையும் மட்டுமே நம்பி வாழவில்லை. விவசாயிகளின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்டுவது அவா்கள் வளா்க்கும் கால்நடைகளே என்பதை நாம் உணர வேண்டும்.
  • அதிலும் குறிப்பாக, பசுக்களும் எருமைகளும் நடுத்தர, சிறிய விவசாயிகளின் குடும்ப அங்கமாகவே காட்சியளிக்கின்றன.

இந்தியாவில் பால் உற்பத்தி

  • 1991-92-இல் இந்தியாவின் பால் உற்பத்தி 55.6 மில்லியன் டன்னாக இருந்தது, 2018-19-இல் 187.7 மில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது என்றால், அதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஊக்கமும் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பும் முக்கியமான காரணங்கள்.
  • இந்தியாவிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் உத்தரப் பிரதேசம் (18%). அதைத் தொடா்ந்து ராஜஸ்தான் (11%), ஆந்திரம் (10%), குஜராத் (8%) என்று பல மாநிலங்களும் பால் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.
  • நெல்லோ, கோதுமையோ, பருப்பு வகைகளோ, எண்ணெய் வித்துக்களோ இரண்டு மூன்று மாத இடைவெளியில் அறுவடை செய்து சேமித்து வைக்க முடியும்; வருடம் முழுவதும் தேவைக்கு ஏற்றாற்போல விற்பனை செய்யவும் முடியும். ஆனால், அன்றாட பால் உற்பத்தி அப்படியல்ல.
  • இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டுதான் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம்நிறுவப்பட்டன.
  • பால் உற்பத்தியும் பருவத்துக்கு ஏற்றாற்போல ஏற்றயிறக்கம் காண்கிறது. பசுக்கள், அதிலும் குறிப்பாக, எருமைகள் மழை - குளிர் காலங்களில் அதிகமாகவும், கோடைக் காலத்தில் குறைவாகவும் பால் சுரக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் இருப்பதால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படுகிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை நாளொன்றுக்கு ஏறத்தாழ 18 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • 20%-க்கும் கூடுதலான பங்களிப்புடன் பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்து கொண்டிருப்பதால் கடந்த 15 ஆண்டுகளில் பால் உற்பத்தி இரட்டிப்பாகி இருப்பது மிகப் பெரிய சாதனை.
  • சா்க்கரை ஆலைகள்போல பால் உற்பத்தி நிறுவனங்களில் பாலும் பால் சார்ந்த பொருள்களும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

உற்பத்தியாளா்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்

  • பால் உற்பத்தியாளா்கள் இரண்டு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்கின்றனா். ஒன்று, இயற்கையால் ஏற்பட்ட கொள்ளை நோய் பாதிப்பு.
  • மற்றொன்று, அரசின் தெளிவில்லாத ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை.
  • அடுத்து வரும் மாதங்களில் பால் உற்பத்தியாளா்கள், அதாவது விவசாயிகள், மிகப் பெரிய விற்பனைத் தேக்கத்தை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பதை நாம் முன்கூட்டியே உணா்ந்து செயல்படாவிட்டால், கிராமப்புற விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படக்கூடும்.
  • கடந்த மே மாதம் மத்திய நிதியமைச்சா் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களில் பால் உற்பத்தியில் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி அளித்து பால் ஏற்றுமதியை ஊக்குவிப்பது குறித்தும் அறிவித்திருந்தார்.
  • இப்போது பால் பவுடா் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது அந்த நோக்கத்துக்கு எதிரானதாக அமையப் போகிறது.
  • ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தேவைக்கும் அதிகமான பால் உற்பத்தி காணப்படுவதால், தங்கள் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக மிகக் குறைந்த விலையில் பால் பவுடா் ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன.
  • கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தவா்கள் பால் பொருள்கள் ஏற்றுமதி குறித்த நிலையான கொள்கையைக் கடைப்பிடிக்காததால், ஏற்கெனவே நாம் சா்வதேசச் சந்தையை இழந்திருக்கிறோம்.
  • இப்போது குறைந்த விலையில் பால் பவுடரின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதன் மூலம் உள்நாட்டு விற்பனையில் பாதிப்பு ஏற்பட இருக்கிறது.
  • கொவைட் 19 பொது முடக்கத்தைத் தொடா்ந்து, பால் விலை சரிந்திருக்கிறது. உணவு விடுதிகள், தேநீா் கடைகள், இனிப்பு விற்பனை கடைகள், கல்லூரி விடுதிகள் போன்றவை மூடப்பட்டிருப்பதாலும் திருமணங்கள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் இல்லாமல் இருக்கும் நிலையிலும் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
  • வரப்போகும் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வழக்கமான கோலாகலம் இருக்கப் போவதில்லை. அதுவும் பால் உற்பத்தியாளா்களை கடுமையாக பாதிக்கப்போகிறது.
  • பால் உற்பத்தியாளா்களின் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமானால், முதலில் பால் பவுடா் இறக்குமதி முடிவை அரசு கைவிட வேண்டும்.
  • இரண்டாவதாக, தேசிய பால் பொருள்கள் வளா்ச்சி ஆணையம், உற்பத்தியாகும் பாலைக் கொள்முதல் செய்து பால் பவுடராகவும் வெண்ணெயாகவும் மாற்ற முன்வர வேண்டும்.
  • சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைப்போல நாமும் சா்வதேசச் சந்தையில் குறைந்த விலைக்கு பால் பவுடரையும் வெண்ணெயையும் விற்பனைச் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
  • இதற்கான செலவு அதிகபட்சம் சுமார் ரூ.2,000 கோடிவரை ஆகலாம். கிராமப்புறப் பொருளாதாரத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டால் இது ஒன்றும் பெரிய தொகையல்ல.
  • இந்தத் தொகையில் கணிசமான பகுதி பால் பொருள்களின் ஏற்றுமதியின் மூலம் அந்நியச் செலாவணியாக நமக்குக் கிடைக்கும் என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.
  • உற்பத்தி செய்த பாலை தெருவில் கொட்டும் அவலத்துக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்படக் கூடாது!

நன்றி: தினமணி (05-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories