- சிறார்க்கு எழுதுவது என்பது தம் வயதைக் கரைத்துக்கொண்டு எழுத வேண்டிய இலக்கியச் செயல்பாடு. அதனால்தான் உலகமெங்கும் சிறார் இலக்கியப் படைப்பாளிகள் மீது தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் சிறார் இலக்கியத்தில் சிறந்த படைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பெரியவர்களுக்கான படைப்புகளில் ஆழக் காலூன்றியவர்கள்கூடச் சிறார் இலக்கியத்திலும் பங்களித்து வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர் உதயசங்கர்.
- இலக்கியத்தின் களஞ்சியமாகத் திகழும் கோவில்பட்டிப் படைப்பாளிகளில் உதயசங்கர் முக்கியமானவர். இவர், பெரியவர்களுக்கான இலக்கியத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வந்தபோதும், மலையாளம், ஆங்கிலம் ஆகியவற்றிலிருந்து சிறந்த சிறார் படைப்புகளைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்துவந்தார். ஒருகட்டத்தில், நேரடியாகவே சிறார் கதைகள், பாடல்களை எழுதினார். அவை வழமையான சிறார் இலக்கிய எல்லைகளை மீறியதாக இருந்தன. குறிப்பாகப் பலரும் தவிர்த்து வந்த சமூகம் சார்ந்த கதைகளை இவர் அதிகம் எழுதினார்.
- சமகாலத்தில் அதிகாரத்தின் பெயரால் சமூகத்தில் நடக்கும் அநீதியான விஷயங்களைப் பகடியான சிறார் கதைகளாக்கினார். அவருடைய ‘மாயக்கண்ணாடி’ எனும் சிறார் சிறுகதைத் தொகுப்பின் ஒரு கதையில், ஜங்க் ஃபுட் விற்பதற்காக வெளிநாட்டினருக்குக் கதவுகளைத் திறந்துவிட்ட ஒரு ராஜாவைப் பற்றியதாக இருக்கும். மக்களை நேரடியாகப் பார்க்க விரும்பாத ஓர் அரசருக்கு அவர்களின் தேவைகள் எப்படித் தெரியும், எப்படி நல்லாட்சி புரிவான், அதிகாரம் நேரடியாக, மறைமுகமாக எத்தனை பேரைப் பாதிக்கும்? உள்ளிட்ட ஆழமான கேள்விகளைச் சிறுவர்கள் மனதில் எழுப்பும் விதமான கதைகளை எழுதியிருப்பார். உதயசங்கரின் சிறார் இலக்கியப் பாணியாகவே இதைக் குறிப்பிடலாம்.
- இந்தப் பாணியைக் குழந்தைகளிடமிருந்தே அவர் கைக்கொண்டிருக்கிறார். அந்நூலின் முன்னுரையில், ‘குழந்தைகள் தங்களிடம் உள்ள இயல்பான படைப்பூக்கத்தினால் இந்த அதிகாரத்தைப் பகடி செய்கிறார். அதிகாரமே வெட்கப்படும்படியான அளவுக்கு அவர்கள் கேலி செய்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
- தற்போது பால புரஸ்கார் பெற்றிருக்கும் ‘ஆதனின் பொம்மை’ நூல் அவரின் எழுத்து முறையில் இன்னொரு பரிமாணத்தைக் காட்டவல்லது. கீழடியைப் பற்றிப் பெரியவர்களுக்குப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சிறுவர்கள் வாசிக்கும் வகையில் ஏதும் இல்லையே? இந்தக் கேள்வியின் நீட்சியாகத்தான் இந்த நாவல் உருவாகியுள்ளது.
- கேப்டன் பாலு என்கிற சிறுவன், விடுமுறையைக் கழிக்க வேண்டா வெறுப்பாக மாமாவின் கிராமத்துக்குச் செல்கிறான். அதுதான் கீழடி. தோட்டத்தில் கிடைக்கும் சுடுமண் பொம்மையின் வழியே 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதனின் நட்பு கிடைக்கிறது. அந்தக் காலத்துக்கே சென்று கீழடியின் தொன்மையைக் கேப்டன் பாலு தெரிந்துகொள்கிறான் என்பதாகக் கதை விரியும். இடையிடையே பரபரப்பான காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. மிகச் சுவாரசியமான கற்பனையில், சுவையான மொழிநடையில் சிறார் ஒரே மூச்சில் படித்துவிடும்படியாக எழுதியிருப்பார் உதயசங்கர். இந்த உத்தி காலங்காலமாகக் குழந்தை இலக்கியத்தில் நிலவிவரும் தேய்ந்துபோன கதை சொல்லல் போக்கை உடைக்கும் உத்தி. இது, நவீன கதை சொல்லல் முறை மட்டுமல்ல, புதிய கதை மையங்களையும் சிறாருக்குப் பந்திவைக்கிறது.
- கவிதை, சிறுகதை, கட்டுரை, சிறார் படைப்புகள், மொழியாக்கம் என 150க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் உதயசங்கர். சிறாரை வியக்கவைப்பதற்காக மட்டுமே அவர்களுக்கான கதைகளில் மிகைக்கற்பனையை எழுதிய காலம் முடிந்துவிட்டது. சமகால வாழ்வின் மகிழ்வை, துயரை, சொல்ல மறந்துபோன வரலாற்றைச் சொல்வதற்காக உருவாக்கப்படும் மிகைப்புனைவுகள் உண்மையை நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கிறது. நவீனச் சிறார் இலக்கியத்தின் இப்போக்கினை முன்நின்று சகபடைப்பாளிகளையும் அழைத்துச் செல்கிறார் உதயசங்கர். இந்த விருதின் மூலம் அந்தப் பயணம் இன்னும் வேகமெடுக்கும். சிறார் இலக்கியத்தில் மாபெரும் விளைச்சலைத் தரும் என உறுதியாக நம்பலாம்.
நன்றி: தி இந்து (24 – 01 – 2023)