TNPSC Thervupettagam

பாவலர் பாலசுந்தரம்: பல தளங்களில் தமிழ் வளர்த்த செம்மல்

August 1 , 2023 400 days 384 0
  • மொழியின் வினையாகவும், விளைச்சலா கவும் காலத்துக்கு ஏற்றவாறு அடையாளப்படுத்தும் தன்மை நிலத்துக்கு உண்டு. அவ்வகையில், மருதநிலத்தில் தோன்றிய பாவலர் ச.பாலசுந்தரனாரின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் தமிழின் பெருஞ்சிறப்பு புலனாகும்.

பல தளங்களில் தமிழ்ப் பணி:

  • பாவலர் ச.பாலசுந்தரம் தஞ்சையில் 18.01.1924இல் பிறந்து, இளம் பிராயத்திலிருந்தே தமிழைத் தன் வசமாக்கத் தொடங்கியவர். தமிழோடு ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் என்று சேர்த்துப் படித்தாலும் புலவர் படிப்பினை முதன்மையாகத் தேர்ந்தெடுத்தார். 1950இல் கல்லூரிப் பணி மேற்கொண்ட பின், எண்ணற்ற சொற்பொழிவுகள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் அவர் பங்கேற்றது மொழியைச் சமூகத்தோடு இணைத்தது.
  • இதனுள், தமிழின் வரிவடிவ எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அறிவியல் கோணத்தில் அவர் கருத்தை முன்வைத்தது காலச் சூழலுக்கான புரிதல் எனலாம். பாவலரின் இத்தமிழ்ப் பணி, இலக்கிய இலக்கணம் கடந்து இசையிலும், சித்த மருத்துவத்திலும் பரந்து நின்றது.
  • 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் புலவர் மதிப்பீட்டாளர், மதிப்பீட்டுக் குழுத் தலைவர், மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் புலவர் வகுப்புத் தேர்வுக் குழு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பல துறைகளின் பணித்திட்டம் எனப் பல்வேறு பணிகளில் பாலசுந்தரம் ஈடுபட்டார். தன் வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்வழித் திருமணங்களை நடத்திவைத்து, உரையாற்றி மொழியைச் சமூகத்தோடு இணைத்துள்ளார்.

இலக்கியப் படைப்பாளராக…

  • மனித உடல்களின் இயல்பான உண்மையைப் பேசும் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையுடன் கூடிய மரபுக் கவிதைகளைக் கையளித்துள்ளார் பாலசுந்தரம். எடுத்துக்கொண்ட பாடுபொருளை செய்யுள் வடிவத்தில் இயற்றினார்.
  • ‘கரந்தைக் கோவை’, ‘புலவருள்ளம்’, ‘புரவலருள்ளம்’, ‘ஆதிமந்தி’, ‘யான் கண்ட அண்ணா’, ‘கலைஞர் வாழ்க’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. மொழியின் பெரும் ஒழுகலாறான களவு, கற்பு, சங்கப் பாக்கள் வழி நாடகப் போக்குகள், எண் வகைச் சுவையும் விரவி நிற்றல், கருத்துச் செறிவு புதுமையாகக் கொள்ளல் போன்ற நிலம் சார்ந்த தமிழை இப்பெருவெளியில் நிறுவியுள்ளார்.

இலக்கண ஆராய்ச்சியாளராக…

  • மொழி, சமூகக் கட்டுமானத்தில் புதுப்புதுப் பார்வைகளைப் பதித்தல் எக்காலத்துக்குமானது. இலக்கண உலகின் புதிய ஆராய்ச்சியாக, அறிவியல் நோக்குடன் மிக நுட்பமாகத் தொல்காப்பியத்தை எழுத் தெழுத்தாக எண்ணிப் பயின்ற பாலசுந்தரம், தொல்காப்பியம் முழுமைக்கும் ஆராய்ச்சிக் காண்டிகையுரை தந்துள்ளமை சாலச் சிறந்தது.
  • அவர் அளித்த, ‘தென்னூல் எழுத்து - சொற்படலம்’, ‘தென்னூல் இலக்கியப் படலம்’, ‘மொட்டும் மலரும்’, ‘தமிழிலக்கண நுண்மைகள்’, ‘வழக்குச் சொல் விளக்க அகராதி’, ‘வளர்தமிழ் இலக்கணம்’, ‘எழுத்திலக்கணக் கலைச் சொற்பொருள் விளக்க அகராதி’, ‘புறத்திணை விளக்கம்’, ‘மொழியாக்க நெறி மரபிலக்கணம்’ போன்ற படைப்புகள் எல்லாம் மனித உடல்களின் பேரறிவுத் திறனை வளர்த்தும், வளர்க்கப்பட உள்ளனவுமாகச் சமூத்தில் காத்துக் கிடக்கின்றன. பாவலர் ச.பாலசுந்தரனார் பதிப்புத் துறையிலும் சிறப்பாக விளங்கியவர்.
  • ஆழ்ந்து அகன்ற அறிவு வாய்க்கப் பெற்று, இலக்கிய, இலக்கண, கவிதை, உரைநடை, நாடகத் திறனாய்வுத் துறைகளில் மொழியை இயங்கச் செய்துள்ளார். 2007 ஆகஸ்ட் 1 இல் காலமானார். நூற்றாண்டு காணும் பாவலர் பாலசுந்தரனாரின் நினைவு தினத்தில் தமிழின் மேன்மையைப் போற்றுவோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories