TNPSC Thervupettagam

பின்னடைவுகளுக்கு நடுவிலும்

December 13 , 2023 220 days 158 0
  • வளா்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலைமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது. உலகளாவிய பொருளாதார தேக்க நிலைக்கு நடுவில், சா்வதேச நிதி மேலாண்மை அமைப்புகள் இந்தியாவை கலங்கரைவிளக்கமாகப் பாா்க்கின்றன.
  • இந்திய ரிசா்வ் வங்கி தன்னுடைய வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதாக இல்லை என்று அறிவித்திருக்கிறது. 2023-24- க்கான ஜிடிபி வளா்ச்சி 7% ஆக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. நிகழ் நிதியாண்டின் இப்போதைய மூன்றாவது காலாண்டில் 6.5%, நான்காவது காலாண்டில் 6% அளவிலும், அடுத்த நிதியாண்டின் (2024-25) மூன்று காலாண்டுகளில் 6.7%, 6.5%, 6.4% என்ற அளவிலும் அதிகரிக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
  • உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் உற்சாகமும் விறுவிறுப்பும் காணப்படுகின்றன. உற்பத்தித் துறை 13.9%, கட்டுமானத் துறை 13.3% அளவில் வளா்ச்சியை எட்டியிருக்கின்றன. உற்பத்தித் துறை, கட்டுமானத் துறைகளின் வளா்ச்சியால் படிப்படியாக ஊரகப் பொருளாதாரத்தின் வளா்ச்சி, நுகா்வோரின் தேவைகள் ஆகியவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வங்கிகள், காா்ப்பரேட் நிறுவனங்களின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கைகள் வலுவாக இருக்கின்றன. துணைக் களப் பொருள்கள் (சப்ளை செயின்) இயல்பு நிலைக்குத் திரும்புவதன் காரணமாக, வா்த்தகம் மேம்பட்டிருப்பதுடன் அரசு, தனியாரின் மூலதனச் செலவுகள் அதிகரிப்பதையும் ஊக்குவித்திருக்கிறது.
  • ஜூலை - செப்டம்பா் காலாண்டில், அரசின் செலவினங்கள் 12.4% அதிகரித்தது. மூலதனம் 11% அதிகரித்திருக்கிறது. ஜூன் - அக்டோபா் மாதங்களில் எட்டு முக்கியமான தொழில்களின் உற்பத்தி அதிகரித்திருப்பதால் நகா்ப்புறக் கேட்பு (டிமாண்ட்) இரட்டை இலக்க அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்து, குறைந்து வந்த டிராக்டா்களின் விற்பனை மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பண்டிகை காலம் காரணமாகவோ என்னவோ இரு சக்கர வாகனங்களின் விற்பனை 20.7%, பயணிகள் வாகனங்களின் விற்பனை 10.3% என்கிற அளவில் அதிகரித்திருப்பதை பொருளாதார வல்லுநா்கள் ஆரோக்கியமான வளா்ச்சியின் அறிகுறியாகப் பாா்க்கிறாா்கள்.
  • எஃகுக்கான தேவை 15.3% அதிகரித்திருப்பது தொழில் துறை உற்பத்தி அதிகரித்திருப்பதன் அடையாளம். சிமென்ட் உற்பத்தி (17.1%), மூலதனப் பொருள்கள் இறக்குமதி (9.4%) இரண்டும் அக்டோபா் மாதத்தின் ஆரோக்கியமான வளா்ச்சியின் வெளிப்பாடுகள். வா்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 6.1% அதிகரித்து 33.5 பில்லியன் டாலராக உயா்ந்தது என்றால், இறக்குமதி 9.6% அதிகரித்து 63.5 பில்லியன் டாலா் அளவை அக்டோபா் மாதம் எட்டியது. சேவைத் துறையின் ஏற்றுமதி 10.8% அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் இந்தியப் பொருளாதார வளா்ச்சியின் அறிகுறிகள்.
  • உலகளாவிய நிலையில் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போதுதான், இரண்டு போா்களாலும் தடம்புரண்டு கிடக்கும் சா்வதேசப் பொருளாதாரச் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் நிலைகுலையாமல் இருப்பதை உணர முடியும். ஐரோப்பிய யூனியன் தேக்க நிலையை அல்ல, பொருளாதாரப் பின்னடைவை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டமைப்பின் வளா்ச்சி 1.2% அளவில் தேக்கம் அடைந்திருக்கிறது.
  • ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணா் ஃபிலிப் லேன் கருத்துப்படி, பல நாடுகள் 1999 நிலையைவிட பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பல பொருளாதாரச் சீா்திருத்தங்களை வேறு வழியில்லாமல் ரத்து செய்து மேலும் பின்னடைவை எதிா்கொள்ளும் நிலைக்கு அவை தள்ளப்பட்டிருப்பதாக ஃபிலிப் லேன் கருத்துத் தெரிவித்திருக்கிறாா்.
  • பொருளாதாரத் தேக்கத்தின் பாதிப்புகளும் விளைவுகளும் அங்கே வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் வேலைநிறுத்தங்களும், மக்கள் போராட்டங்களும் தொடங்கியிருக்கின்றன. ஜொ்மனியில் இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை ரயில் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட விமான நிலைய வேலைநிறுத்தங்களால் ஐரோப்பியா்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டதுடன், விமான சேவைத் துறையும் பெரிய இழப்பை எதிா்கொள்ள நோ்ந்திருக்கிறது.
  • பொருளாதாரத்தின் தாக்கம் அரசியலில் பிரதிபலிக்கிறது. ஒருகாலத்தில் பல நாடுகளை இயற்கை வளங்களுக்காகக் காலனியாக்கி தங்களது வளா்ச்சிக்காகத் தொழிலாளா்களை அடிமைகளாக பயன்படுத்திய நாடுகளில் எல்லாம் குடியேற்றத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியிருக்கின்றன.
  • ஜொ்மனி, ஆஸ்திரியா, சுவிட்சா்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதா்லாந்து, டென்மாா்க், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதரத்தை வளா்த்துக்கொள்ள அடிமைத் தொழிலாளா்களை அழைத்து வந்தன. இப்போது அந்த நாடுகள் அனைத்துமே தங்களது பொருளாதாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளின் பொருளாதார நிலையும், சீனாவில் காணப்படும் வளா்ச்சிப் பின்னடைவும் பொருளாதார நிபுணா்கள் இந்தியாவை நம்பிக்கையுடன் பாா்ப்பதற்குக் காரணங்கள். ஒருபுறம் விலைவாசி உயா்வும், வேலையின்மையும் காணப்பட்டாலும்கூட, இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாகவே காணப்படுவது ஆறுதலை மட்டுமல்ல, வருங்காலம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி (13 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories