TNPSC Thervupettagam

பிரச்னைகளுக்கு தீர்வு இது அல்ல!

August 30 , 2019 1911 days 1245 0
  • அண்மைக் காலத்தில் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருவது வேதனையாக இருக்கிறது. வறுமையால் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகியுள்ளது. இளைஞர்கள் காதல் தோல்வி, மாணவர்கள் தேர்வில் தோல்வி, குடும்பத்தில் கணவன்-மனைவி பிரச்னை என இவையெல்லாம் தற்கொலையில் போய் முடிகின்றன.
    கடந்த காலங்களில் விவசாயிகளின் தற்கொலை நாட்டின் மரியாதைக்கே அறைகூவலாக அமைந்தது. வாங்கிய கடன் தொல்லையாலும், அவமானத்தாலும் அவர்கள் அந்த முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை தரவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
நீட் தேர்வு
  • மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு எழுதித் தோல்வி கண்ட மாணவிகள் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்து கொண்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் மற்றும் சமூக அளவில் பெரிய தாக்குதலை உருவாக்கியது. இப்போதும் இவை நீறுபூத்த நெருப்பாகவே கழன்று கொண்டிருக்கின்றன.
  • காதல் திருமணம் செய்து கொண்டவர்களைப் பெற்றோர் ஏற்க மறுத்ததால், விடுதியில் அறை எடுத்து நஞ்சுண்டு மாண்டவர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. அவர்கள் இப்படி அவசரப்படாமல் கொஞ்ச காலம்  காத்திருந்தால் பெற்றோரே மனம் மாறி அவர்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவசர முடிவால் அந்த வாய்ப்பை அவர்கள் இழந்து போனார்கள். 
  • அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா? அறிவியல் என்பதா? அறியாமை என்பதா?
  • இந்த நிலையில் இப்போது பெரும் தொழிலதிபர்களும் தற்கொலையைத் தேர்ந்தெடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தொழிலிலும், விளையாட்டிலும் மிகப் பெரிய சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இப்படி பரிதாபமான முடிவுக்கு வருவது வேதனையானது. தொழில் என்பது ஏற்றமும், இறக்கமும் கொண்டது. 
  • அண்மையில் காஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் தற்கொலை தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இவரா இப்படிச் செய்தார் என்று புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்க வைத்தது. 
தொளில்முனைவோர்
  • தொழில்முனைவோரின் வெற்றி சாதாரணமானதல்ல. துன்பங்களையும், தோல்விகளையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு மேலே வருவது. அப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட முடிவை எடுப்பதற்கு என்ன காரணம்?
  • என்னுடைய மரணத்துக்கு வேறு யாரும் காரணம் இல்லை. பணச்சுமை மற்றும் வருமான வரித் தொந்தரவுதான் காரணம் என்று சித்தார்த் கடிதம் எழுதி வைத்திருந்ததாகக் கூறுகின்றனர்.
  • அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள்கூட அடுத்த வழியைப் பற்றியே யோசித்துச் செயல்படுகின்றனர். பல்லாயிரம் கோடியில் தொழில் செய்யும் ஒருவருக்கு ஒரு வழியும் தெரியவில்லையா? எல்லா வழிகளும் அடைபட்டுப் போய் விட்டனவா? ஒரு கதவு மூடினால், ஒரு கதவு திறக்கும் என்னும் நம்பிக்கைதான் வாழ்க்கை.
  • இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்திய அணிக்காக 1988 முதல் 1990 வரை 7 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். தமிழக அணிக்குப் பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  • இவரது முடிவு விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலில் ஏற்பட்ட பொருள் இழப்பு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. 
  • உலக சுகாதார நிறுவன கணக்கீட்டின்படி இந்தியாவில் தற்கொலைகளால் இறப்பவர் விகிதம் அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் இதுதான் அதிகம். 2016-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 8 லட்சம் தற்கொலைகள் நடந்தன. இவற்றில் 2.50 லட்சம் தற்கொலைகள் இந்தியாவில் நடந்துள்ளன.
    2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் 15,182 தற்கொலைகள் நடந்ததாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. 2015-இல் சென்னை நகரில் 2,274 தற்கொலைகள் நடந்துள்ளன.
தற்கொலைகள் – தமிழ்நாடு
  • பெரு நகரங்களில் இதுவே அதிகமாகும்.  குடும்பப் பிரச்னைகள் மற்றும் நோய் காரணமாக நடைபெறும் தற்கொலைகள் தமிழ்நாட்டில்தான் அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடக்கும் தற்கொலைகள் ஒரே மாதிரியாகவே தொடர்கின்றன. இப்போதும் இறப்பு விகிதம் குறையவில்லை.
  • தென் மாநிலங்களில் கல்வியறிவும், அதனால் ஏற்படும் எதிர்பார்ப்புகளும், விரக்தியும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு ஏதும் இல்லை. வாழ்க்கையில் பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாததே இதற்குக் காரணம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகளே இதற்குக் காரணம். கொஞ்சம் ஆற அமர்ந்து யோசித்துப் பார்த்தால், தான் செய்ய நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது புரியும். தவறுக்கு மேல் தவறாகச் செய்து விட்டு தம்மைச் சேர்ந்த அனைவரையும் தவிக்கவிடக் கூடாது.
  • தமிழகத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைக்கும் முறை 2013-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. மனநல மருத்துவ அமைப்பில் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் இந்த மையத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் தொலைபேசி மூலம் பாதிக்கப்பட்டவரிடம் பேசி, உடனடியாக உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும், பயிற்சியளிக்கவும் ஆவன செய்யப்படுகின்றன.
  • இது தவிர, சினேகா என்ற தற்கொலைத் தடுப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
    உலக அளவில் வளர்ந்த நாடுகளில் தற்கொலை செய்யும் ஆண்-பெண்விகிதம் 3:1 என்ற அளவில் உள்ளது. வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு அதிக உரிமை அளிக்கப்படும் சமூகங்களில் பெண்களின் தற்கொலை குறைவாக உள்ளது என்று அறியப்பட்டுள்ளது.
புள்ளிவிவரம்
  • இந்தியாவைப் பொருத்தவரை 30 வயதுக்குட்பட்ட பெண்களின் தற்கொலை விகிதம் அதிகம். ஆனால், ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது. 18 முதல் 30 வயதிலான பெண்களின் தற்கொலை, பிரசவத்தின்போது மரணமடையும் பெண்களின் விகிதத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • பொதுவாக திடீரென தற்கொலை செய்யும் முடிவை எடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. மதுப்பழக்கம், போதைப் பழக்கம், மனநோய், தோல்வி பயம் ஏற்படுத்தும் அழுத்தங்களினால் நடைபெறும் தற்கொலைகள் அடுத்த இடத்தில் உள்ளன.
  • இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள மனநல மருத்துவர்கள் கூறுவது என்ன? மருத்துவ நிலை, சமூக நிலை, கொள்கை நிலை என மூன்று கட்டத்தை முன்மொழிகின்றனர். இதனை இப்படி விளக்கலாம்.
  • மருத்துவ சேவைத் துறையில் பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு உரிய அறிவுரைகளைத் தருவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். சமூக அளவில் பள்ளி ஆசிரியர்கள், சமூகத்தில் மதிப்பிற்குரியவர்கள், பாதிப்படைந்தவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.
  • கொள்கையளவில் தற்கொலைகளைத் தூண்டும் சூழல்களைத் தடுக்க செயல் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
காரணங்கள்
  • வெறுப்பு, விரக்தி அல்லது கோபத்தினால் ஏற்படும் உடனடி எதிர்வினைகளே தற்கொலைக்குக் காரணமாகும். தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் 80 சதவீதத்தினர்  உண்மையில் சாக விருப்பம் இல்லாதவர்களே என்கின்றனர்.
    மரபணு சார்ந்த காரணங்களினால் சிலருக்கு இயல்பாகவே தற்கொலை எண்ணங்கள் இருக்கும். சமூக பொருளாதார காரணிகள் அல்லது அழுத்தமான சூழல் மற்றும் ஓர் இறுதிக் காரணத்தினால் இவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • கூட்டுக் குடும்பங்கள் குலைந்து வருவதால் முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. தங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளவும் யாரும் இல்லாத நிலையில் அவர்களது மன அழுத்தம் அதிகமாகிறது. பிள்ளைகள் இருந்தும் பேச முடியாத ஏக்கமும், தூக்கமின்மையும் அவர்களை தற்கொலை முடிவுக்கு தள்ளுகின்றன.
    அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஒளவை. மனித வாழ்க்கை கிடைத்தற்கரியது. மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டது. சிந்திக்கும் மனமும், செயல்படும் குணமும் கொண்டது. அதனை ஏற்றுப் போற்றி வாழ்ந்து காண்பிக்க வேண்டாமா?  
  • நமது வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டு மனித வாழ்வின் தொடர்ச்சியாகும். அதன் பலனை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்த வாழ்க்கை நமக்கானது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள மனித சமுதாயத்துக்கானது. அதனை நம் அவசர முடிவால் பாழாக்கி விடக்கூடாது.
  • வாழ்வை அழகுபடுத்து; இல்லாவிட்டால் அசிங்கப்படுத்தாமலாவது இரு என்றனர் ஞானிகள். அதன்படி நாம் வாழ்வை அழகுபடுத்த வேண்டும். அழகும், அறிவும் சேர்ந்தால் ஏன் இந்தத் தற்கொலைகள்?

நன்றி: தினமணி(30-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories