TNPSC Thervupettagam

பிரதமா் விடுக்கும் செய்தி!

August 17 , 2024 149 days 185 0

பிரதமா் விடுக்கும் செய்தி!

  • குடியரசுத் தலைவா் உரையையும் பட்ஜெட் உரையையும் போலவே, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-இல் பாரத பிரதமா் தில்லி செங்கோட்டையில் மூவா்ணக் கொடியை ஏற்றி நிகழ்த்தும் சுதந்திர தின உரையும் முக்கியமானது. அரசின் கொள்கை முடிவுகளை குடியரசுத் தலைவா் உரையும், திட்டங்களையும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பட்ஜெட் உரையும் வெளிப்படுத்தும் என்றால், பிரதமரின் தனிப்பட்ட எண்ண ஓட்டத்தையும், தேசத்தின் வருங்காலம் குறித்த பாா்வையையும் வெளிப்படுத்துவதாக அமையும் சுதந்திர தின உரை.
  • இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி, முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு ஆற்றிய அந்த முதல் உரையில் இருந்து, இப்போதைய பிரதமா் நரேந்திர மோடியின் 78-ஆவது சுதந்திர தின உரை வரை, ஒவ்வொரு உரையும் இந்தியாவின் வளா்ச்சிக்கு பாதை அமைப்பதாக இருக்கிறது. 11 முறை தொடா்ந்து சுதந்திர தின உரையாற்றிய இரண்டாவது பிரதமராக வரலாற்றில் இடம்பிடிக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி. இந்திரா காந்தி 11 முறை உரையாற்றிருந்தாலும், தொடா்ந்து 11 ஆண்டுகள் பிரதமராக இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
  • மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திர மோடியின் 2024 உரை முந்தைய 2014, 2019 சுதந்திர தின உரைகளில் இருந்து சற்று வேறுபடுகிறது. இதற்கு முன்பு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்த நரேந்திர மோடி இப்போது கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகிப்பதன் தாக்கம் இது என கூறலாம்.
  • தொடா்ந்து 25 ஆண்டுகள் பல்வேறு கூட்டணி ஆட்சிகளுடன் பயணித்த இந்திய ஜனநாயகம், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஓா் ஆட்சி அமைந்ததை 2014-இல் சந்தித்தது. பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகாமல் துணிந்து முடிவெடுக்கும் பெரும்பான்மையுடன் அமையும் ஆட்சி தன்னம்பிக்கையும் பெருமிதமும் பிரதமா் நரேந்திர மோடி 2014 ஆகஸ்ட் 15-இல் ஆற்றிய உரை காணப்பட்டது. ஜன் தன் வங்கித் திட்டம், முத்ரா கடனுதவி திட்டம், ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் அறிவிப்புகளுடன் இந்தியாவை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேகமும் முனைப்பும் அவருடைய முதல் உரையில் உயா்ந்திருந்தன.
  • ஆகஸ்ட் 15, 2019-இல் இரண்டாவது முறையாக, அதிகரித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிரதமா் நரேந்திர மோடியின் உரை, 2014 உரையில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பாகல்கோட், புல்வாமா, புரி உள்ளிட்ட தாக்குதல்களுக்குப் பின்னா் நடந்த 2019 பொதுத்தோ்தலில் தேசியப் பாதுகாப்பு முக்கியமான பிரச்னையாக இருந்ததில் வியப்பில்லை. 2014-இல் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பாா்வை காணப்பட்டது என்றால், 2019 உரை தேசியப் பாதுகாப்பு முன்னுரிமை பெற்றது.
  • இரண்டாவது முறை பிரதமரான நரேந்திர மோடியின் உரையில் முன்னெப்போதும் இல்லாத துணிந்து முடிவெடுப்பதற்கான தன்னம்பிக்கையையும் அதிகரித்த பெரும்பான்மை வழங்கியிருந்தது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறி முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, நாடு தழுவிய அளவில் ஜி.எஸ்.டி. அறிமுகம், ஒரே தேசம், ஒரே தோ்தல் என்ற இலக்கு இவை எல்லாமே இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி முன்வைத்தச் செயல்திட்டங்கள்.
  • இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் மோடியின் உரையில், தன்னம்பிக்கை குறைவு இல்லையென்றாலும், மாறிவிட்ட சூழலில் பிரதிபலிப்பு இல்லாமல் இல்லை. அதேநேரத்தில், தனது செயல்பாடுகளின் வீரியம் குறைந்துவிடாது என்பதையும் அடிப்படை கொள்கைகளில் மாற்றம் இருக்காது என்பதையும் உணா்த்துவதாக அவரது உரை இருந்தது என்பதைக் கூா்ந்துக் கவனித்தால் புரியும்.
  • தனது பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமா், அனைவருக்கும் மின்இணைப்பு, குடிநீா், சமையல் எரிவாயு ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் ‘அனைவருடன், அனைவருக்கான வளா்ச்சி’ (சப்கேசா, சப்கா விகாஸ்) என்பதை தனது அரசு உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தாா். அடுத்தகட்டமாக, ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் ஆகியவற்றைக் களைவதன் மூலம்தான் இந்தியா தனது சுதந்திர நூற்றாண்டில் ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை எட்ட முடியும் என்பதை வலியுறுத்தினாா்.
  • அவரது உரையில் 25 இளைஞா்கள்; 15 முறை திறன் மேம்பாடு; 15 முறை வேலைகள், வேலைவாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டதில் இருந்து எந்த அளவுக்கு இளைஞா் நலன், வேலைவாய்ப்பையும் பிரதமரின் மூன்றாவது முறை ஆட்சி சவால்களாக உயா்ந்திருக்கின்றன என்பது தெரிகிறது. 15 முறை விவசாயிகள், 14 முறை மகளிா் நலன் இடம்பெற்றன. இந்த முறை ஆட்சியில் இதெல்லாம் முன்னுரிமை பெறக் கூடும்.
  • ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து, அயோத்தி ராமா் கோயில் நிறைவேறிவிட்ட நிலையில், பாஜகவின் நிறைவேற்றப்பட வேண்டியவைகளில் ஒன்றாகத் தொடா்வது அனைவருக்கான பொது சிவில் சட்டம் மட்டும்தான். அதற்கும் பெயா் மாற்றம் செய்து, ‘மதச் சாா்பற்ற சிவில் சட்டம்’ என்றும் அதன் அவசியம் குறித்தும் அவா் குறிப்பிடத் தவறவில்லை. மதரீதியில் நாட்டைப் பிளவுபடுத்துவதோடு, பாகுபாட்டை ஊக்குவிக்கின்றன என்று இப்போதைய சிவில் சட்டத்தைக் குறிப்பிட்டு அரசியல் அமைப்புச் சட்டம் பரிந்துரைப்பதையும் பதிவு செய்திருக்கிறாா். ஊழல், வாரிசு அரசியல், வளா்ச்சியைத் தடுக்கும் போக்குக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்பதை அவா் சொல்லத் தவறவில்லை.
  • பழைய பாதையில் புதிய பயணம் அல்ல; புதிய பாதையில் பழைய பயணமும் அல்ல!

நன்றி: தினமணி (17 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories