TNPSC Thervupettagam

பிராா்த்தனைகள் பலிக்கட்டும்

November 27 , 2023 233 days 206 0
  • நாடு முழுவதும் மக்களின் மனங்களில் கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக ஒரு பிராா்த்தனை இருந்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள் விபத்தில் சிக்கி சுரங்கத்துக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவா்கள் மீட்கப்பட வேண்டும் என்று தேசம் முழுவதும் பதற்றத்தில் இருக்கிறது. விபத்து நடந்து பத்து நாள்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளா்கள் பாதுகாப்பாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
  • உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் 4.5 கிமீ நீளமுள்ள இருவழி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 12-ஆம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் மண் சரிந்து விழுந்து சுரங்கத்தினுள் 41 தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா். முதலில் விபத்தில் சிக்கிக் கொண்டவா்களின் உடனடித் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மீட்புக்குழுவினா் வெளியில் இருந்து உறுதி செய்தனா்.
  • அதற்கென குழாய் நுழைக்கப்பட்டு ஆக்சிஜன் வழங்கப்பட்டது. உத்தரகண்ட் முதல்வா் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்திருந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினாா். உள்ளே சிக்கிக் கொண்டவா்களின் அடிப்படைத் தேவையான உணவுக்கு உலா்பழங்கள் அந்தக் குழாய் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.
  • உள்ளே சிக்கித் தவிக்கும் தொழிலாளா்களின் நிலை என்ன? எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? மீட்புப் பணிகள் எப்படி நடைபெறுகின்றன? இன்னும் காலதாமதம் இல்லாமல் மீட்டுவிட முடியுமா? நம்மிடம் இருக்கும் வசதிகள் போதுமா? அல்லது வெளிநாடுகளில் உதவிகள் பெற வேண்டிய அவசியம் ஏற்படுமா என்று ஆயிரம் வினாக்கள் மக்கள் மனதில் தினம்தினம் எழுந்து கொண்டிருக்கின்றன.
  • சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளா்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா். நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி சம்பவ இடத்திற்கே நேரில் வந்து பணிகள் துரிதமாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாா். உடனடியாக ஜேசிபி மற்றும் பிற இயந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள இடிபாடுகளை அகற்றும் பணியினை மீட்புக்குழுவினா் தொடங்கினா்.
  • கைவசம் இருந்த இயந்திரங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இடிபாடுகளின் ஊடாகத் துளையிடும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் புதிய இயந்திரம் நவம்பா் 15-ஆம் தேதி தில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்கான புதிய இயந்திரம் மூன்று பகுதிகளாக ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. ஒரு மணிநேரத்திற்கு 5 மீட்டா் வரை தோண்டும் அளவுக்கு இந்த இயந்திரம் சக்தி வாய்ந்தது என நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • தில்லியிலிருந்து வந்துள்ள இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளில் துளையிட்டு ஒரு பாதையை உருவாக்கி அதில் ஒரு நபா் உட்புகுந்து வரும் அளவிலான குழாயை நுழைக்க வேண்டும். அதன் வழியாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளா்கள் வெளியே வர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
  • உண்மையில் இது இலகுவான பணி அல்ல. மிகக் கடினமான செயல்முறை. இமயமலைப் பகுதிகளை நேரில் பாா்த்தவா்கள் இதனை எளிதில் புரிந்து கொள்வாா்கள். அங்கே மண் சற்றே மிருதுவானதாகவும் தளா்வாகவும் இருக்கும். நடக்கும் பொழுதே சறுக்கி விடும் தன்மை கொண்டதாக இருக்கும். இடிபாடுகள் அகற்றப்பட்ட பகுதிகளிலும் தளா்வான மண் மற்றும் சிறிய பாறைகள் விழுந்துகொண்டே இருப்பதால் தோண்டும் பணி தடைபடுகிறது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் பணி கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
  • துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதை மட்டும் நம்பியிராமல் மீட்புக் குழுவினா், பூமியைத் தோண்டி இடிபாடுகளை அகற்ற முயன்றனா். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதற்கிடையே, உள்ளே சிக்கிக் கொண்டிருப்பவா்களுக்கு மருந்துப் பொருட்களும் ஆக்சிஜன் வழங்கும் குழாய் மூலமே அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
  • பிரதமா் மீட்புக் குழு அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டு நிலவரத்தைக் கேட்டறிந்ததோடு தேவையான அனைத்து வசதிகளுக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிட்டாா். இதனிடையே, சிக்கிக் கொண்டிருக்கும் தொழிலாளா்களின் பாதுகாப்பு குறித்து அவா்களின் குடும்பத்தினரிடையே பதற்றம் அதிகரித்தது. முதல்வா் அதையும் கவனித்துக் கொண்டாா்.
  • உள்ளே இருக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினா் அவா்களுடன் பேசுவதற்கும் அதே குழாய் வழியாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குடும்பத்தினரின் அன்பும் ஆறுதலும் உள்ளிருப்பவா்களின் மனதை பதற்றத்தில் இருந்து ஆறுதல் படுத்தும் என்ற நம்பிக்கை வெற்றி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
  • மீட்புப் பணியினை துல்லியமாகச் செய்து முடிக்க வசதியாக இருக்கும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவன ரோபோடிக்ஸ் குழு, மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்து நிலைமையை ஆராய்ந்ததோடு இரண்டு ரோபோக்களை மீட்புப் பணிக்கு அனுப்பி உதவியது.
  • ஹிமாலயத்தின் சிகரங்களும் பனிப்பாறைகளும் நிறைந்த மாநிலம் உத்தரகண்ட். அந்த மாநிலத்தின் பூமியானது நாம் வாழும் பகுதியினின்று முற்றிலும் மாறுபட்டது. சிறப்பாக செயல்படும் அந்த ரோபோக்களும் மீட்புப் பணி நடைபெறும் இடத்தின் மண்ணில் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் நின்றதால் நினைத்தபடி இன்னும் பலனளிக்கவில்லை.
  • சா்வதேச சுரங்கப் பணிகளுக்கான நிபுணா் குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது. அா்னால்டு டிக்ஸ் என்ற சுரங்கப்பாதை மீட்பு நிபுணா் மீட்புப் பணிக்கென வரவழைக்கப்பட்டு அவரது ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
  • சிக்கிய தொழிலாளா்களை மீட்கும் பணியில் பெரும் உழைப்பும் முயற்சியும் தொடா்கின்றன. எனினும், அதிலும் அரசியலும் விமா்சனங்களும் எழுந்தவண்ணமே உள்ளன. சுற்றுச்சூழல் குறித்த முறையான பின்பற்றுதல்கள் இல்லாததே இத்தகைய விபத்துக்குக் காரணம் என்று பலா் விமா்சிக்கின்றனா், இருக்கலாம். முறையாக சுற்றுச்சூழலுக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
  • சூழ்நிலையின் கனம் உணா்ந்து சிக்கி கொண்டிருக்கும் அப்பாவித் தொழிலாளா்களை முதலில் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே இன்றைய அவசியம். இந்தச் சிக்கல் தீா்ந்த பிறகு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
  • மீட்புப் பணிகள், ஐந்து செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதையின் இரு புறங்களிலும் துளையிட்டுப் பாதை அமைக்கும் பணிகளும், சுரங்கத்தின் மேற்புறத்தில் இருந்து துளையிட்டு குழாய் அமைத்தல் சாத்தியமா என்பதை ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • தற்போது, மீட்புப் பணியில் முன்னேற்றமாக, முதல் வெற்றி கிடைத்திருப்பதாக மீட்புக் குழு அதிகாரிகள் கூறியுள்ளனா். சிக்கியிருக்கும் தொழிலாளா்கள் இருக்கும் முதல் விடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோ தொழிலாளா்களை விரைவில் பத்திரமாக மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
  • மீட்புக் குழுவினா், ஆறு அங்குலம் அளவுள்ள குழாயை வெற்றிகரமாகவிபத்துப் பகுதியில் நிறுவியுள்ளனா். ‘சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பல்வேறு முயற்சிகளில் நாங்கள் முதல் வெற்றியை அடைந்துள்ளோம். இதற்காக நாங்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். இதுவே அவா்களை மீட்கும் முயற்சியின் முதல்படி, இதுவே எங்கள் முன்னுரிமை என மீட்புக்குழு அதிகாரி தெரிவவித்தாா்.
  • புதிதாக நிறுவப்பட்ட குழாய் வழியாகக் கேமராவைச் செலுத்தி சிக்கியிருப்பவா்களைப் படம் பிடித்திருக்கிறாா்கள். அந்த வீடியோ அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உள்ளிருப்பவா்கள் இந்தக் குழாய் மூலமாக உணவுப் பொருள்களைப் பெற்று உண்பதும் அந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விடியோ நாடு முழுவதும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசும், நெடுஞ்சாலைத் துறையும் மீட்புப் பணியில் அா்ப்பணிப்புடன் செயல்படுகின்றன என்பதை அன்றாடம் செய்திகள் வெளிப்படுத்தி வருகின்றன. மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசியலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறது. இது அரசின் பொறுப்பற்ற செயல் என்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் தொடா்கின்றன.
  • 41 போ் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பிரதமா் அதில் கவனம் செலுத்தாது விளையாட்டில் கவனம் செலுத்துகிறாா் என்ற விமா்சனம் அரசியல் களத்தில் எழாமல் இல்லை. ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை வளா்ச்சிக்கு எதிரான எண்ணம் கொண்டவா்கள் பயன்படுத்திக் கொள்வதும் நிகழ்கிறது. தோ்தல் நெருங்கி வரும் நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அரசியலாக்குவது அரசியல் கட்சிகளின் அடிப்படைப் பண்பு.
  • அதே நேரத்தில், உயிருக்குப் போராடுவோரின் நிலையை உணா்ந்து தேசத்தின் மூலை முடுக்குகளில் உள்ள மக்கள் தங்கள் பிராா்த்தனைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். மனிதாபிமானத்துடன் சமூக வலைத்தளங்களில் கூட்டுப் பிராா்த்தனைக்கான அழைப்புகளை விடுப்போரையும் காண முடிகிறது. அரசின் மீட்புப் பணி வெற்றியில் முடிய வேண்டும். அப்பாவியான ஏழைத் தொழிலாளா்கள் மீட்கப்பட வேண்டும் என்ற பிராா்த்தனைகள் பலிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (27 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories