- பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றிருப்பதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த கியர் ஸ்டார்மர் பிரதமர் ஆகியிருக்கிறார். 2022 அக்டோபரில் பிரிட்டனின் முதல் ஆசிய வம்சாவளிப் பிரதமராகப் பதவியேற்ற ரிஷி சுனக், 2025 ஜனவரி வரை ஆட்சியில் தொடரலாம் என்கிற நிலையில் தேர்தலை முன்கூட்டி நடத்துவதாக அறிவித்தார்.
- அதன்படி 2024 ஜூலை 4 அன்று நடைபெற்ற தேர்தலில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் 650 இடங்களில் 412ஐத் தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது. சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் மட்டுமே வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்துள்ளது.
- உலக அளவில் வலதுசாரி அரசியலர்கள் வெற்றி பெற்றுவருகிறார்கள். தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி 2022இல் இத்தாலியின் பிரதமரானார். கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலிலும் வலதுசாரிகளின் வெற்றி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.
- பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் மார்ட்டின் லி பென் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்றே கணிக்கப்பட்டிருந்தது. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் இடதுசாரிகளுக்கே வெற்றிவாய்ப்பு எனத் தெரிகிறது. இந்தப் பின்னணியில் மைய-இடதுசாரிச் சார்பு கொண்ட கட்சியாகக் கருதப்படும் தொழிலாளர் கட்சி பிரிட்டனில் வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.
- அதேநேரம் தொழிலாளர் கட்சி தனது இடது சார்பைப் பெரிதும் கைவிட்டு மையவாதத்தை நோக்கி நகர்ந்துவருவதும் கவனிக்கத்தக்கது. 2024 தேர்தல் பிரச்சாரத்தில்கூட பெருநிறுவனங்களை ஈர்க்கக்கூடிய, தங்கு தடையற்ற வணிகத்துக்கு ஆதரவான வாக்குறுதிகளை ஸ்டார்மர் அளித்திருந்தார்.
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது, கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றால் விளைந்த பொருளாதார நெருக்கடிகளை மோசமாகக் கையாண்டது; சுகாதாரம், பள்ளிக் கல்வி போன்ற பொதுச் சேவைகளுக்கான அரசு நிதி உதவியைக் குறைத்தது; இதனால் பொதுமக்களின் அன்றாடச் செலவுகள் கடுமையாக உயர்ந்தது எனப் பல்வேறு காரணங்களுக்காக கன்சர்வேடிவ் கட்சி மீது இருந்த அதிருப்தியை பிரிட்டன் மக்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இந்தத் தேர்தல் முடிவுகளை ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் தீர்ப்பாகவே பார்க்க வேண்டும்.
- இந்தத் தேர்தலின் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பன்மைத்துவம் அதிகரித்திருக்கிறது. 242 பெண்கள் (2019ஐவிட 22 பேர் அதிகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆசியர்கள், கறுப்பினத்தவர் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் விகிதம் 13% ஆக அதிகரித்துள்ளது (2019இல் 10%). தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ரேஷல் ரீவ் அந்நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும் முதல் பெண் என்னும் பெருமையைப் பெறுகிறார்.
- இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்தியாவுடனான பிரிட்டனின் சுமுக உறவுகளில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்பது நிம்மதி அளிக்கிறது. உலகின் மிகப் பெரிய வளரும் பொருளாதாரமான இந்தியாவுடனான உறவுகள் மேம்படுத்தப்படும் என்று பிரச்சாரத்தின்போது ஸ்டார்மர் தெரிவித்திருந்தார். பல கட்டப் பேச்சுவார்த்தைகளைக் கடந்துள்ள இரண்டு நாடுகளுக்கு இடையிலான தங்குதடையற்ற வணிகத்துக்கான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தலைகீழ் மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் சூழலில் உள்நாட்டில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைக் களைய வேண்டிய பெரும்பொறுப்புடன் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்திருக்கிறது தொழிலாளர் கட்சி. அதன் ஆட்சி, பிரிட்டன் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றட்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 07 – 2024)