TNPSC Thervupettagam

பிரியாணி ‘நம்பர் ஒன்’ - தரத்தை உறுதி செய்வது யார்?

December 26 , 2024 29 days 43 0

பிரியாணி ‘நம்பர் ஒன்’ - தரத்தை உறுதி செய்வது யார்?

  • இந்தியாவின் மிகப்பெரிய உணவுப் பொருள் விநியோகிக்கும் நிறுவனமான ஸ்விக்கி, தங்களிடம் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டில் அதிகபட்சமாக 8.3 கோடி பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணியே முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
  • நகரங்களின் வரிசையில் ஹைதராபாத் 97 லட்சம், பெங்களூரு 77 லட்சம், சென்னை 46 லட்சம் பிரியாணி உணவை ஆர்டர் செய்துள்ளன. பிரியாணிக்கு அடுத்தபடியாக தோசை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. 23 லட்சம் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிற்றுண்டி வகையில் 24.8 லட்சம் சிக்கன் ரோல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக பிரியாணி உருவெடுத்துள்ளது.
  • இது ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள புள்ளிவிவரம் மட்டுமே. சொமோட்டோ போன்ற இதர நிறுவனங்களின் மூலமாகவும், ஓட்டல்களுக்கு நேரடியாக சென்றும் மக்கள் சாப்பிட்டதை கணக்கிட்டால் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
  • சமீபகாலமாக, இளைஞர்கள் ஒவ்வொரு நகரங்களிலும் சிற்றூர்களிலும் உள்ள சிறு சிறு கடைகளைக்கூட விடாமல் தேடிச்சென்று உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் அந்த உணவின் தரம், சுவை குறித்து பகிர்வதன் மூலம் மூலை முடுக்கில் இருக்கும் உணவகங்கள்கூட பிரபலமாகி புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.
  • பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களிலும் ‘புட் கோர்ட்’ எனப்படும் உணவகங்களின் தொகுப்புகள் அதிகம் பிரபலமாகி வருகின்றன. நள்ளிரவிலும் இளைஞர்கள் கூட்டமாக சென்று இதுபோன்ற உணவகங்களுக்கு அளிக்கும் ஆதரவு மேலும் பல உணவக வளாகங்கள் அமைய காரணமாகி விடுகின்றன.
  • சென்னையில் மெரினா கடற்கரையில் சமீபத்தில் நடந்த உணவுத் திருவிழாவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது மற்றொரு உதாரணம். உணவுக்கு மக்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, அதன் தரத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் எழுகிறது.
  • தரமற்ற பிரியாணியை சாப்பிட்டு இளைஞர் மரணம், ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு போன்ற செய்திகள் உணவின் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் முக்கியத்துவமும் முன்னெப்போதையும்விட இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது.
  • உணவகங்களுக்கு வெறுமனே அனுமதி அளிப்பது, எப்போதாவது ஒருமுறை உணவகங்களுக்குச் சென்று சோதனையிடுவது மட்டும் போதாது. மத்திய, மாநில அரசுகள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தேவைப்பட்டால் ஒவ்வொரு ‘புட் கோர்ட்’களிலும் ஒரு உணவுப் பாதுகாப்பு அதிகாரியை நியமித்து உணவின் தரம், சமையலறையின் சுகாதாரம் ஆகியவற்றை அன்றாடம் கண்காணிக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். மக்களின் போக்குக்கு ஏற்ப, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் செயல்பாடுகளும் இருப்பதே பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories